ராஜ சபை – கேள்வி பதில்கள் !!

0

எஸ்.மனோகரன், போர்ட்டிக்சன்

கே: அம்னோ – பாஸ் கட்சியின் இணக்கமும் உடன்பாடும் மலேசிய அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

 • ப: நேற்றுதான் ஒரு மாபெரும் பேரணியின் மூலம் அவர்களின் இந்த இணக்கமும் ஒப்பந்தமும் நடந்திருக்கிறது. இரு கட்சிகளும் இதுவரை நிலவிய தங்கள் மோதல்களுக்கு முத்தாய்ப்பு வைத்து கரங்கோர்க்கின்றன. இது புதிது. தங்கள் அரசியல் கொள்கை சித்தாந்த நிலையில் இவை எப்படி முன்னோக்கிச் செல்லும் என்பதைப் பொறுத்து அது அமையும். பெரும்பாலும் ஓர் இடைத்தேர்தலில் அல்லது ஒரு பொதுத்தேர்தலில்தான் இந்த இரு கட்சிகளின் தாக்கத்தை உணர முடியும். ஏற்கெனவே நாட்டில் நடந்த 4 இடைத்தேர்தல்களில், மூன்றில் அதிகாரப்பூர்வமற்ற நிலையில் அவர்கள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொண்டபோது அது வெற்றிக்கு வழி வகுத்திருக்கிறது என்பதையும் உணர வேண்டும். எதிர்கால பொதுத்தேர்தலில்தான் இந்தக் கட்சிகளின் பலத்தையும் அவர்களின் செல்வாக்கையும் நாம் கண்டு உணர முடியும். நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் பக்காத்தானின் பலவீனங்கள் இவர்களுக்கு பலமாய் முடிந்தது. நமக்குள்ள கேள்வியே இந்தக் கூட்டணி அமைப்பில் பங்குபெறும் மஇகா, மசீசவின் நிலை என்ன என்பதுதான்.

ஜெயந்தி விஸ்வநாதன், பீடோர்

கே: காடு மேடாய் கிடந்த நாட்டை மழை வெயில் என்று பாராமல் வளப்படுத்திய நம்மவர்களுக்கு குடியுரிமை இல்லை. ஸக்கீருக்கு மட்டும் ஏன் இத்தனை சலுகை?

 • ப: இது உங்கள் ஒருவரின் குரல் அல்ல. ஒட்டுமொத்த சமுதாய குரல் – குமுறல். இது அரசின் காதுகளை எட்ட வேண்டும்.

செல்வராஜு குமரன், கிள்ளான்

கே: பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் நிலை என்ன? அவர் பதவி விலகுவாரா?

 • ப: இதற்கு நான் பதில் சொல்ல முடியாது. அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்படுகிறது. முடிவெடுக்கும் அதிகாரம் பிரதமரின் கையில்.

கே: தமிழ்ப்பள்ளிகளில் ஜாவி தேவையா?

 • ப: தேவையில்லை என்று பெரும்பான்மையான தமிழ்ப்பள்ளிகளில் தோரணம் கட்டி தங்கள் உணர்வுகளை இந்திய சமுதாயம் வெளிப்படுத்தியிருக்கிறது. ஏன்? எதற்கு? என்ன அவசியம்? என்பதுதான் சமுதாய கேள்வி. மாறாக அவர்கள் அந்த சித்திர மொழியை சிறுமைப்படுத்தவில்லை.

ரெங்கசாமி, புக்கிட் பிரேசர்

கே: தமிழ்ப்பத்திரிகைகள் மீதான ஆதரவு எப்படி இருந்து வருகிறது?

 • ப: அச்சக ஊடகம் (தமிழ்ப் பத்திரிகைகள் உட்பட) ஒவ்வொரு நாளும் பெரும் சவாலை எதிர்நோக்குகிறது. தமிழ் ஏடுகள் மட்டுமல்ல, மலாய், ஆங்கில, சீன ஏடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல. அவையாவது விளம்பர பலத்தால் சமாளிக்கும். தமிழ்ப்பத்திரிகைகளுக்கு அதுவும் இல்லை. வாசகர் பலம் ஒன்றுதான் அதன் உயிர்நாடி. வாழ வைப்பது அனைவரின் கடமை.

கே: ஒருமுறை இழந்ததை மீண்டும் அடைய என்ன வழி?

 • ப: இழந்ததற்கு எது காரணமோ அது மீண்டும் எழாமல் பார்த்துக் கொள்வதுதான் ஒரே வழி.

ஆர்.லோகநாதன், ஜொகூர்பாரு

கே: வாழ்க்கையில் நாம் முக்கியமாக சம்பாதிக்க வேண்டிய சொத்து எது?

 • ப: இப்படி ஒரு மனிதனை இழந்தோமே என்று அந்த கடைசி ஊர்வலத்தில் காதில் விழும் சொற்கள்.

கே: தட்டாமல் கதவு திறப்பதில்லை. கதவு திறக்கும் வரை நமது பிடிவாதம் தொடரத்தான் வேண்டுமா?

 • ப: கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்பது இயேசு பெருமானின் ஓர் அற்புத பொன்மொழி. எந்த நிலையிலும் முயற்சியைக் கைவிடாதே என்பது காலத்தால் அழியாத அதன் நியதி.

ப.சி.தமிழின்பன் ராணி, பத்துகாஜா

கே: நம் நாட்டில் வறுமை நிலை இன்னும் தீரவில்லை என்று ஐநா நிபுணர் ஒருவரே கூறியிருக்கிறாரே?

 • ப: அவரை விடுங்கள், வறுமை விகிதம் பற்றி எதையும் மூடி மறைக்காமல் உண்மைகளைச் சொல்லுங்கள் என்று லிம் கிட் சியாங்கே கூறியிருக்கிறாரே அதுதான் கவனிக்கத்தக்கது.

கே: அம்னோ மலாய்க்காரர்களிடம் மீண்டும் எடுபடுமா?

 • ப: தேர்தல்தான் காட்டும். அது வளர்பிறையா தேய்பிறையா என்று.
 • முகமது ஹனிபா அப்துல்லா

கே: பெண்கள் அடிக்கடி மனம் மாறுவதற்கு காரணம் என்ன?

 • ப: அது என்ன தனியாக பெண்கள் சகோதரா? ஆண்கள் மனம் மாறுவதில்லையா?

சிவகுமார் சிவா, கோலசிலாங்கூர்

கே: கவியரசர் கண்ணதாசன் பாட்டெழுத எம்.எஸ்.வி. இசையமைக்க டி.எம்.எஸ். பாட அப்படி ஒரு காலம் இனி உருவாகுமா?

 • ப: நினைத்துப் பார்த்தால் ஒரு காலகட்டத்துக்குள் அத்தனை ஜாம்பவான்களும் அத்தனை மேதைகளும் வந்து சென்று மறைந்து விட்டார்களோ என்றே தோன்றுகிறது. நீங்கள் சொன்ன இந்த மூவருக்கு அப்பால், ஒரு சி.எஸ்.ஜெயராமன், ஒரு சீர்காழி கோவிந்தராஜன், டி.ஆர்.மகாலிங்கம், பி.பி.சீனிவாஸ், ஜே.பி. சந்திரபாபு என்ற அத்தனை பேரின் அந்த அரிதான குரல்களையும் அத்தனை பெண் பாடகிகளின் வசீகரக் குரல்களையும் கேட்க முடியுமா? இந்த புதிய யுகத்தில் அப்படி ஒன்று நடக்குமா? ’இவர்களுக்கு மாற்றாக இவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடினால் எவ்வளவு பெரிய வெறுமை, வெற்றிடம். கிட்டதட்ட ஓர் அரைநூற்றாண்டு காலம் இத்தகைய மகோன்னதர்களின் மகுடியில் திரையுலகம் சிக்கியிருந்தது. நீங்கள் சொன்னதெல்லாம் ஒரு நல்ல கனா காலம். ஆனால் இன்னமும் இவர்களின் படைப்பை ரசிப்பதற்கு நாம் கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்ல வேண்டும்.

சுசித்ரா, செர்டாங்

கே: மலேசிய தினத்தை நாளை நாம் கொண்டாடுகின்ற நேரத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு சிந்தனை எது?

 • ப: நாட்டின் சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்ட பெருந்தலைவர் துன் சம்பந்தன் நம் நினைவுக்கு வரவேண்டிய ஒருவர். தேசிய தினத்திலும் மலேசிய தினத்திலும் அவர் நம் நினைவுகளில் வருவதை விட இன்றைய புதிய இளைஞர்களின் சிந்தனையில் அவருடைய தியாகங்களும் ஒரு தலைவருக்கான இலக்கணங்களும் அவரது வாழ்வின் சகாப்தங்களும் இடம்பெற வேண்டும் என்கிறார் மலேசிய மேடை நாடக கலைஞரும் சிறந்த படைப்பாளியுமான எஸ்.டி.பாலா. ஒரு கிராமத்துச் சிறுவன் மக்களின் இதயபீடத்தில் அமர்ந்து நாட்டின் சுதந்திரத் தூண்களில் ஒருவராக விளங்கி ஒருநாள் பிரதமராகவும் இருந்த அந்த வரலாற்றை சம்பந்தன் என்ற பெயரில் தாம் தொகுத்த ஆவண குறும்படத்தைப் பார்க்குமாறு கேட்கிறார். நாளை செப்டம்பர் 16 மாலை 4.30 மணியளவில் 201 அலைவரிசையில் வருகிறது. அனைவரும் தவறாது காணுங்கள்.

ஜே.ஹேமலதா, நீலாய்


கே: 100ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலயங்கள் காக்கப்பட வேண்டும் என்று போராடுகிறோம். 80 – 90 வயதில் உள்ள பெற்றோரைப் பாதுகாக்க நாம் தவறுகிறோமே…?

 • ப: அப்படி அன்று, ’அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது ஒரு பாலபாடமான நமக்கு ’ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று கற்பிக்கப்பட்டது. தாய் – தந்தையர் நாம் வீட்டில் தொழ வேண்டிய தெய்வங்கள். அமைதி நாடி ஆறுதல் தேடி நாம் செல்லும் இடங்கள் தெய்வத் திருத்தலங்கள். இரண்டையும் சமமாகப் போற்றித்தான் ஆகவேண்டும். பெற்றவர்களைத் தவிக்க விட்டு விட்டு கோயிலுக்குச் சென்று தெய்வத்தை வழிபடுகின்றவனின் பிரார்த்தனையிலோ அவனது வழிபாட்டிலோ எந்த அர்த்தமும் இல்லை. அடிப்படையில் அவன் மனிதனும் இல்லை. பெற்றோரின் தாழ் பணிந்தவர்கள் தாழ்ந்ததாக வரலாறு இல்லை.

ரெங்கசாமி, புக்கிட் பிரேசர்

கே: தமிழ்ப்பத்திரிகைகள் மீதான ஆதரவு எப்படி இருந்து வருகிறது?

 • ப: அச்சக ஊடகம் (தமிழ்ப் பத்திரிகைகள் உட்பட) ஒவ்வொரு நாளும் பெரும் சவாலை எதிர்நோக்குகிறது. தமிழ் ஏடுகள் மட்டுமல்ல, மலாய், ஆங்கில, சீன ஏடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல. அவையாவது விளம்பர பலத்தால் சமாளிக்கும். தமிழ்ப்பத்திரிகைகளுக்கு அதுவும் இல்லை. வாசகர் பலம் ஒன்றுதான் அதன் உயிர்நாடி. வாழ வைப்பது அனைவரின் கடமை

நீங்களுக் கேள்விகளை கேட்க வேண்டுமா? எங்களை வாட்சாப் மூலம் தொடர்பு கொள்ளலாம் : 012-370 0079

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 6 =