மோதலில் ஈடுபட்ட மாணவர்களை திருக்குறள் எழுத வைத்த போலீசார்

0

தென் இந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் ஏராளமான பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளன. பாளையங்கோட்டையில் உள்ள 2 பள்ளிக்கூடங்களில் படிக்கின்ற பிளஸ்-1, பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு இடையே சாதி ரீதியாகவும், சாதியை குறிக்கும் வண்ண கயிறு கட்டியதாலும் மோதல் ஏற்பட்டது.

இதில் ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற 19 மாணவர்கள் வ.உ.சி. மைதானத்திற்கு சென்றனர். அங்கு நின்ற மற்றொரு பள்ளிக்கூடத்தின் மாணவர்களிடம் தகராறு செய்து அடித்து உதைத்து உள்ளனர். இதில் காயம் அடைந்த அந்த மாணவர்கள், தங்கள் பள்ளிக்கூடத்தில் உள்ள மற்ற மாணவர்களிடம் இதைப்பற்றி கூறினர். உடனே 30 மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து குறிப்பிட்ட பள்ளிக்கூடத்திற்கு சென்று அந்த மாணவர்களிடம் தகராறு செய்து உள்ளனர். இதனால் இருதரப்பு மாணவர்கள் இடையே கோ‌‌ஷ்டி மோதல் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லைநாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் மகே‌‌ஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோதலில் ஈடுபட்ட 49 மாணவர்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் இன்ஸ்பெக்டர் தில்லைநாகராஜன், மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தால் அவர்களுடைய எதிர்காலம் பாதிக்கப்படும். உங்கள் மகன்களை நீங்கள் கண்டித்து வைக்கவேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

மேலும் மாணவர்களின் செல்போன்களை அவர் வாங்கி பார்த்தார். அதில் பல டிக்-டாக் வீடியோக்கள் இருந்தன. இதை பார்த்த தில்லைநாகராஜன், மாணவர்களை எப்படி திருத்துவது? என்று யோசித்தார். அப்போது அங்கு இருந்த மாணவர்களிடம், ‘10 திருக்குறள்களை மனப்பாடமாக கூறுங்கள், உங்களை விட்டுவிடுகிறேன்‘ என்று கூறினார். ஆனால், 10 திருக்குறள்களை மனப்பாடமாக சொல்ல மாணவர்களால் முடியவில்லை. அவர்கள் செய்வது அறியாமல் திகைத்தனர்.

மாணவர்கள் மோதல்

பின்னர் இன்ஸ்பெக்டர் தில்லைநாகராஜன் அந்த மாணவர்களிடம், ‘நீங்கள் எப்படி எழுதுவீர்களோ எனக்கு தெரியாது. 1,330 திருக்குறளையும் எழுதி காட்டினால் தான் பள்ளிக்கூடத்திற்கு செல்லமுடியும். அப்போது தான் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யமாட்டேன்’ என்று கூறினார். உடனே மாணவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் அங்குள்ள புத்தக கடைகளுக்கு சென்று திருக்குறள் புத்தகங்களை வாங்கி வந்தனர். அதை பார்த்து மாணவர்கள் 1,330 திருக்குறள்களை எழுதினார்கள். நேற்று முன்தினம் மாலையில் எழுத ஆரம்பித்த மாணவர்கள் நேற்று மாலை வரை எழுதினார்கள். திருக்குறளை எழுதி காண்பித்து ஒப்புதல் வாங்கிய மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கூடத்தில் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.

மோதலில் ஈடுபட்ட மாணவர்களை 1,330 திருக்குறள் எழுத வைத்து நூதன தண்டனை வழங்கிய இன்ஸ்பெக்டர் தில்லைநாகராஜனை, நெல்லை மாநகர துணை போலீஸ் கமி‌‌ஷனர் சரவணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பாராட்டினார்கள்.

இதுகுறித்து நெல்லை மாநகர துணை போலீஸ் கமி‌‌ஷனர் சரவணன் கூறுகையில், ‘‘மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளில் ஈடுபடக்கூடாது என்பதற்காக 1,330 திருக்குறள்கள் எழுத வைத்த இன்ஸ்பெக்டர் தில்லைநாகராஜனின் நூதன முயற்சி மாணவர்களை நல்வழிப்படுத்தும் என்று நம்புகிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 4 =