மோசமான அரசியல்வாதிகளுக்கு அரசின் அனுகூலங்கள் தேவையா?

ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், தென் கொரியா போன்றவற்றில் அரசியல்வாதிகள் ஊழலில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப் பட்டால், அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படுவது வாடிக்கையானதாகும். சீனாவில் ஊழல் அரசியல்வாதிகள் சுட்டுக் கொல்லப்படுவார்கள். துப்பாக்கிக் குண்டின் விலையை அவர்களின் குடும்பத்தார் அரசுக்குச் செலுத்த வேண்டும். ஆனால், மலேயாவில் அதற்கு மாறாக எல்லாமே நடக்கிறது. இனவாதம், சமயவாதத்தை முன்னெடுத்து இனங்களைப் பிரித்தாளும் அரசியல்வாதிகளுக்கு அரசு வெண்சாமரம் வீசி, பரிசுகளை வாரி வழங்குகிறது. இது நமது இளையோருக்கு எதை உணர்த்துகிறது? திருடுவது பரவாயில்லை என்று அவர்கள் நினைக்க மாட்டார்களா? பெரியவர்கள் நாட்டின் நீதித்துறையின் மீது வெறுப்பு அடையமாட்டார்களா? முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் எஸ்ஆர்சி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர். அதனை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்திருக்கிறார். 7 நம்பிக்கை மோசடி, கள்ளப் பணப் பரிவர்த்தனை, அதிகாரத் துஷ்பிரயோகம் போன்ற 7 குற்றச் சாட்டுகளில் அவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் 21 கோடி ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால், நஜிப் தற்போது சுதந்திர மனிதராக உலவி வருகிறார். வெளிநாடு செல்லவும் அனுமதி வழங்கப் பட்டுள்ளது. மலாக்கா மாநிலத் தேர்தலில் சுதந்திரமாக தேர்தல் பரப்புரை செய்திருக்கிறார். அவர் செய்து கொண்ட மேல் முறையீடு சம்பந்தமான முடிவு 18 மாதங்களாகியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் ஊழல்வாதி உடனடியாக சிறையில் தள்ளப்படுவார். அண்மைய காலங்களில் 3 விவகாரங்கள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. நஜிப் ரசாக் தமது சேவையைக் கருத்தில் கொண்டு, தமக்கு 10 கோடி மதிப்பிலான நிலத்தோடு கூடிய வீட்டை அரசு தரவேண்டுமென்று விண்ணப்பிருந்தார் என்ற தகவல் கசிந்தது. 1980ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளச் சட்டத்தின்படி, முன்னாள் பிரதருக்கு அலவன்சும் இதர சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் சொந்த வீட்டில் தங்கியிருந்தால் மாத அலவன்சாக ரிம. 10,000 வழங்கப்பட வேண்டும். அல்லது, தகுதிக்கேற்ற வீட்டை வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் அமைச்சரவை இதனைப் பரிசீலித்து வருவதாக நிதியமைச்சர் தெங்கு ஸப்ருல் கூறியிருந்தாலும், அரசு அவரின் விண்ணப்பத்தை ஏற்று அவருக்கு அதனை வழங்கி இருப்பதாகச் செய்தி கசிந்துள்ளது. இதில் யார் சொல்வது சரி? இப்போதுள்ள அரசியல்வாதிகளும் அவர்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளும் பொய் சொல்ல எங்கிருந்து கற்றுக் கொண்டார்கள் என்பது வியப்பை அளிக்கிறது. இரண்டாவதாக, சர்ச்சைக்குரிய பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங்கிற்கு டான்ஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அவர் சமயத்தைப் பயன்படுத்தி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியதோடு இனங்களுக்கிடையே வெறுப்பையும் வளர்த்துள்ளார். 1981ஆம் ஆண்டு அவர் மலாய்க்காரர்களிடையே பிரிவினையை, தமது சமய உரைகளின் வழி ஏற்படுத்திய காரணத்தினால், ஜாக்கிம் தடை செய்யப்பட்டது நினைவிருக்கலாம். தற்போது, ஹாடி அவாங் அரசின் மூத்த அமைச்சர் அந்தஸ்தில் வைக்கப்பட்டுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். மிகையான சம்பளத்தைப் பெறுவதோடு, ஓட்டுநரோடு கூடிய அரசின் கார், இதர அனுகூலங்கள், அலுவலக உதவியாளர்களுக்கு அலவன்சுகள் போன்றவற்றையும் பெறுகிறார். அவர் இது வரை நாட்டுக்கு என்ன செய்தார்? மத்திய கிழக்கு நாடுகளிடையே மலேசியாவில் நல்லுறவை வளர்க்கவே அவரின் நியமனம். ஆனால், அதனை எவ்வாறு செய்கிறார் என்பது சந்தேகமாக உள்ளது. இந்த வெளிநாட்டு சிறப்புத் தூதர் பதவிகள் யாவும் தேவையற்றது, அரசுக்கு ஆதரவைப் பெற வேண்டுமென்ற சுய நோக்கத்தில் அந்தப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதே ஒழிய அதிலிருந்து ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லை. கடந்த ஜூலை மாதம், கோவிட்-19 பெருந்தொற்றானது இறைவனின் கட்டளை என்றும் அல்லாவின் அரசாங்கத்தால் மட்டுமே அதனைக் கட்டுப்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூற்றானது முஸ்லிம்களிடையே கோவிட்-19 சம்பந்தமான விழிப்புணர்வுக்குத் தடைக் கல்லாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இம்மாதிரியான கூற்றினால்தான் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் இன்னமும் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள மறுத்து வருகின்றனர். மூன்றாவதாக, சர்ச்சைக்குரிய நபராக விளங்கி வந்த பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் விரைவில் இந்தோனேசியாவின் தூதராக நியமிக்கப்படுவார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண நிலையில் ஒரு எம்பி இப்படிகூட ஆசைப்படுவாரா என்ற கேள்வி மக்களிடையே எழுகிறது. அவர் நாடாளுமன்றத்தில் நடந்து கொண்ட விதம் அவருக்கு தலைக் குனிவைக் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாது அவர் சார்ந்த கட்சிக்கும், அவரின் குடும்பத்திற்கும் இனத்துக்கும் இழுக்காகும். அவர் நாடாளுமன்றத்தில் மற்றவர்களைச் சிறுமைப்படுத்தும் வகையில் பேசி முகம் சுளிக்க வைத்துள்ளார். இம்மாதிரி பல முறை செய்துள்ளார். அவர் பிரசாரனாவின் தலைவராக இருந்தபோது, எல்ஆர்சி ரயில்கள் இரண்டு மோதிக் கொண்டு விபத்துக்குள்ளான பின்னர் செய்தியாளர் கூட்டத்தில், அடாவடித்தனமாகப் பேசி மற்றவர்களின் வெறுப்பைப் சம்பாதித்திக் கொண்டார். அதன் பின்னர் அவர் அந்தப் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அந்த ரயில் விபத்தில் அறுவர் படுகாயம் அடைந்ததைக் கேலியாக விமர்சித்ததுடன், அவர்களை மருத்துவனைக்குச் சென்று நலம் விசாரிக்கவும் இல்லை. அதற்கு அவர் கூறிய காரணம், தாம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளச் சென்றதாகத் தெரிவித்தார். எல்ஆர்டி ரயில் நிலைய கூடுதல் கட்டுமானக் குத்தகையை அவரின் குடும்பத்தாருக்கு வழங்கிய விவகாரத்தில் அவர் மீது வழக்கும் நிலுவையில் உள்ளது நாடாளுமன்றத்தில் அவரின் சாதனை பூஜ்யமே! ஆயினும், அவருக்குத் தூதர் பதவி தரப்பட்டுள்ளது. இம்மாதிரியான அவலங்கள் மலேசியாவில் மட்டுமே நடக்கும் என்றும் கேலியாகவும் பேசப்படுகிறது இந்த விவகாரங்கள் அனைத்துலக நிலையில் நாட்டுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்று சாதாரண மக்கள் காப்பிக் கடையில் பேசும்போது, நமது பிரதமருக்குத் தெரியாது என்பது வினோதம்தான் என்று வழக்கறிஞர் மரியம் மொக்தார் குறிப்பிட்டுள்ளார்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − fourteen =