மேல் முறையீட்டு வழக்கு முடியும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக நஜிப் நீடிப்பார்

அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றங்களுக்காக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் 12 ஆண்டு சிறையும் 21 கோடி வெள்ளி அபராதமும் விதித்துள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்யவுள்ளார். ஆகவே, மேல் முறையீட்டு வழக்கு நிறைவடையும் வரையில் அவர் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து நீடிப்பார் என்று நாடாளுமன்ற சபாநாயகர் டத்தோ அஸார் தெரிவித்தார்.
எஸ்.ஆர்.சி. எனப்படும் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் வெ.4 கோடியே 20 லட்சம் நிதியை மோசடி செய்ததாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக சுமத்தப்பட்ட 7 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.
எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் சென். பெர்ஹாட்டிற்குச் சொந்தமான 4 கோடியே 20 லட்சம் ரிங்கிட்டை முறைகேடு செய்த 3 குற்றச்சாட்டுகள், கள்ளப்பணம் பரிமாற்றம் தொடர்பில் 3 குற்றச்சாட்டுகள், தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி நிதி அமைச்சின் கீழ் இருக்கும் மலேசியா மேம்பாட்டு நிறுவனமான 1 எம்.டி.பி.யின் கீழ் இருந்த எஸ்.ஆர்.சி-யின் நிதியை மோசடி செய்தது தொடர்பில் ஒரு குற்றச்சாட்டையும் அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளது என்று நீதிபதி முகமட் நஸ்லான் தனது தீர்ப்பில் அறிவித்தார்.
இந்த குற்றங்களுக்காக அவருக்கு 12 ஆண்டு சிறையும் 21 கோடி வெள்ளி அபராதமும் விதிப்பதாக நீதிபதி முகமட் நஸ்லான் தீர்ப்பளித்தார்.
இந்நிலையில் அவர் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளலாம் என்று சபாநாயகர் டத்தோ அஸார் அஸிஸான் தெரிவித்தார்.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில், மேல்முறையீட்டு செயல்முறை நிறைவடையும் வரையில் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியில் மாற்றம் ஏற்படாது என்றார்.
ஒருவருக்கு ஓராண்டுக்கு மேலான சிறைத்தண்டனை, இரண்டாயிரம் வெள்ளி அபராதம் மற்றும் பொது மன்னிப்புக் கிடைக்காவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியை இழப்பார் என்று கூட்டரசு அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 17 =