மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

0

கர்நாடகா மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இந்த நிலையில் இந்த 2 அணைகளில் இருந்தும் உபரிநீர் திறக்கப்பட்டது.


நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகியவற்றில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஒகேனக்கல்லில் காவிரிக்கரையோர பகுதிகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதைத்தொடர்ந்து காவிரி கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வர ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. அருவிகளிலும், ஆற்றங்கரைகளிலும் பொதுமக்கள் குளிக்க தடை அமலில் உள்ளது. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவுப்படி வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் ஒகேனக்கல்லில் காவிரி கரையோர பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

நேற்று காலை வினாடிக்கு 3 ஆயிரத்து 625 அடியாக இருந்த நீர்வரத்து இன்று 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 65.44 அடியாகவும், நீர்இருப்பு 28.99 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 8 =