‘மேஜர் சீனா’ எனும் பதவியை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார் ஜொகூர் சுல்தான்

தமது பாட்டனார் அமல் படுத்தியிருந்த ‘மேஜர் சீனா’ எனும் சீன சமூகத்துக்கான தலைவர் பதவியை ஜொகூர் சுல்தான் மீண்டும் அமலுக்குக் கொண்டு வந்தார்.
ஜொகூர் அரச மன்றத் தலைவரான அப்துல் ரஹிம் ரம்லி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், தோட்டத் தொழில் துறையில் ஈடுபட்டு வரும் வோங் கூங் சூன் என்பவரை மேஜர் சீனாவாக நியமிக்க ஒப்புதல் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார். இப்பதவியானது 1840ஆம் ஆண்டில் தெமங்கோங் டாயிங் இப்ராஹிம், அம்மாநிலத்தை வளப்படுத்த சிங்கப்பூர் சீனர்களை வரவழைத்ததாகத் தெரிகிறது. அப்படி வருவோர் ‘கங்கார்’ என்று பெயரிடப்பட்டதாகவும் தெரிகிறது. 1870ஆம்ஆண்டுகளில் மொத்தம் 29 கங்கார்கள் ஜொகூரில் இருந்துள்ளனர்.கங்கார் சமூகத்துக்குத் தலைவர்களாக ‘காங்சு’ எனும் சமூகத் தலைவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
அதன் பின்னர், சுல்தான் அபு பாக்கார் இந்தோனேசியா, இந்தியா, மற்ற மலாய் மாநிலங்களில் இருந்து சீன தொழில் அதிபர்களை ஜொகூருக்கு அழைத்து வந்து, மாநில மேம்பாட்டுக்கு வழிவகுத்தார்.காங்சுகளுக்குத் தலைவராக ‘கப்பித்தான் சீனா’ மற்றும் மேஜர் சீனா என்றழைக்கப்பட்டோரை அவர் நியமிக்கத் தொடங்கினார்.சுல்தானின் அறிவிப்புகளை சீன சமூகத்திடம் கொண்டு சேர்ப்பது, மேம்பாட்டுக் கொள்கை மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுதல் போன்ற விவகாரங்களில் சீன சமூகத்தின் கருத்துகளைத் திரட்டி மாநில அரசுக்குத் தெரிவித்தல் போன்ற காரியங்களை மேஜர் சீனாக்கள் செய்து வந்துள்ளனர்.
சுல்தான் அபு பாக்கார் தெப்ராவில் இருந்த கங்கார் தான் ஹியோக் நீ என்பவரை முதல் மேஜர் சீனாவாகவும், ஸ்கூடாய் கங்காராக இருந்த சியா தாய் ஹெங்கை முதல் கப்பித்தான் சீனாவாகவும் நியமித்தார்.அவர்களிருவரும் சீன சமூகத்தைப் பிரதிநிதித்து, மாநில ஆட்சிக்குழுவில் சேர்க்கப்பட்டனர்.சுல்தான் இப்ராஹிமினால் நியமிக்கப்பட்ட மேஜர் சீனா வோங் என்பவர் மாடோஸ் செம்பனை தோட்டத்தை நிர்வகிப்பவர் என்றும் ஜொகூர் மாநில மேம்பாட்டில் அதிக ஈடுபாடு காட்டிவந்த தொழிலதிபரும் குத்தகையாளருமான வோங் ஆ ஃபூக் என்பரின் வழித் தோன்றலாகும்.
மேஜர் சீனா வோங் கூங் சூன், சுல்தான் இப்ராஹிமின் அறக்கட்டளை, ஜொகூர் அரசு அறக்கட்டளைகள், மாவட்ட அலுவலகங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், சமூகத் தலைவர்கள் ஆகியோரோடு
ஒத்துழைத்து சீன சமூகத்துக்கு உணவுப் பொருள், மற்ற உதவிகளை விநியோகிக்க உதவி செய்ய பணிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கும் அவர் சுல்தானின் பிரதிநிதியாகக் கருதப்பட மாட்டார். அவருக்கு எந்தவொரு அதிகாரம், உரிமை , ஊக்கத் தொகை, வசதிகள் அல்லது சலுகைகள் முதலியவை தரப்பட மாட்டா என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − two =