மக்களின் கட்டளைகளை நிறைவேற்ற பிரதமர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென்று பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரிம் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் முஹிடின் யாசினுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களும் நம்பிக்கைத் தீர்மானங்களும் நிலுவையில் உள்ளதால், இன்று நடைபெறவிருக்கும் அவையில் அதனை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார்.
நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை சபாநாயகர் நிலைக்குழுவின் விதிமுறையைக் காட்டி, நிராகரித்து வருவது தொடரும் என்பதால், முஹிடினுக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பை கட்டாயமாக நடத்த வேண்டும்.
மலேசியாவின் நாடாளுமன்றம் இங்கிலாந்தின் வழிமுறையைப் பின்பற்றி வருவதால், பிரதமர் மீதான நம்பிக்கைத் தீர்மானத்தையும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் அரசின் அலுவல் என்றே முன்னுரிமை கொடுத்து, அவையில் விவாதிக்க வேண்டும். அதில் சாக்குப் போக்கு காட்டுவதற்கு இடமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று முன்தினம், பெர்சத்துவின் பேராளர் மாநாட்டில் உரையாற்றும்போது முஹிடின், பட்ஜெட்டை எம்பிக்கள் நிராகரிக்கத் தேவையில்லை. ஏனெனில் 15ஆவது பொதுத்தேர்தலை நடத்த பேரரசருக்குத் தாம் பரிந்துரை செய்ய திட்டமிட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
கோவிட்-19 தொற்றின் காரணமாக இப்போதைக்கு பொதுத்தேர்தலை நடத்த இயலாது என்பதால், கோவிட்-19 நோய் முற்றாக ஒழிந்த பின்னரே, அது நடத்தப்படும் என்று அவர் அறிவித்திருந்தார்.
அது பற்றி எஃப்எம்டிக்கு அளித்த பேட்டியில் ஹசான் கரிம், அது ஒரு சாக்குப்போக்கு என்று சாடினார். பொதுத்தேர்தலைச் சுட்டிக் காட்டுவதை விடுத்து முஹிடின், தமக்கு மக்களவையில் பெரும்பான்மை ஆதரவு இருப்பதை நிரூபிக்க வேண்டும். அதுதான் ஒரு தலைவருக்கான அழகாகும்.
எனவே, 2021ஆம் ஆண்டு பட்ஜெட் மூன்றாவது வாசிப்புக்கு வரும் முன்னரே, தம் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த அவர் முன்வர வேண்டும். இது 200 மக்களவைப் பிரதிநிதிகளை மட்டுமே பாதிக்கும் விவகாரமாகும் என்று அவர் குறிப்பிட்டார்,
முஹிடின் தமது பெரும்பான்மையை நிரூபிக்க வைக்க, பட்ஜெட்டை ஒரு துருப்புச் சீட்டாக பக்காத்தான் ஹராப்பான் பயன்படுத்துவதாகவும் ஹசான் கரிம் தெரிவித்தார்.