முஹிடினுக்கு ஆதரவு தெரிவித்து முடிவை மாற்றிய துன் மகாதீர்!

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது டான்ஸ்ரீ முஹிடின் யாசின் பிரதமராக வருவதற்கு ஆதரவு தெரிவித்த டாக்டர் மகாதீர் பின்னர் 24 மணி நேரத்தில் தன் முடிவை திடீரென மாற்றிக் கொண்டார் என செனட்டர் டத்தோஸ்ரீ ராய்ஸ் யாத்திம் நேற்று அம்பலப்படுத்தினார்.
நாடு சம்பந்தப்பட்ட பல முக்கிய முடிவுகளிலும் அவர் திடீரென தனது முடிவை மாற்றிக் கொள்வார் என அவர் கூறினார்.
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து டான்ஸ்ரீ முஹிடின் யாசின் பிரதமராகக் கொண்ட புதிய அரசாங்கம் அமைப்பதற்கு துன் மகாதீர் முழு ஆதரவு வழங்கினார்.
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி துன் மகாதீருடன் நடந்த முக்கியமான சந்திப்பில் பிரபல கோடீஸ்வரர் சைட் மொக்தார் அல் புகாரியும் கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பின்போது முஹிடின் யாசின் பிரதமராக வருவதற்கு 66 சத்தியப் பிரமாணங்கள் கிடைத்தன.
அப்படி என்றால், முஹிடின் யாசின் பிரதமராக இருக்கட்டும் என துன் மகாதீர் கூறினார். உடனடியாக இந்தத் தகவலை நாங்கள் முஹிடின் யாசினுக்கு தெரிவித்தோம்.
மகாதீரைச் சந்தித்து விட்டு அந்த அறையில் இருந்து வெளியேறும் வரை எல்லாம் சரியாக இருந்தன. ஆனால் மறுநாள் காலையில் நான் மீண்டும் பிரதமர் என மகாதீரின் அறிக்கையைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக அவர் சொன்னார்.
சில முக்கியமான விவகாரங்களுக்காக எடுக்கப்படும் முடிவை அடிக்கடி மகாதீர் மாற்றிக் கொள்வார். இவர் எதற்காக இப்படி முடிவை மாற்றிக் கொள்கிறார் என்பது எங்களுக்கே தெரியாது.
பிப்ரவரி 29ஆம் தேதி மகாதீர் இந்த முடிவை எடுப்பதற்கு பக்காத்தான் ஹராப்பானைச் சேர்ந்தவர்களின் தூண்டுதல் காரணமாக இருக்கலாம் என்றார் அவர்.
கடந்த 2018இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் பிப்ரவரி 23ஆம் தேதி கவிழ்ந்தது.
கெஅடிலான் கட்சியில் இருந்து டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தலைமையில் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகிக் கொண்டனர்.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இருந்து பெர்சத்து கட்சி விலகிக் கொண்டதைத் தொடர்ந்து புதிய கூட்டணியை அமைத்தது. அதில் தேசிய முன்னணியும் பாஸ் கட்சியும் இடம்பெற்றன.
பிப்ரவரி 29ஆம் தேதி பிரதமர் பதவிக்கு மகாதீரின் பெயரை பக்காத்தான் ஹராப்பான் முன்மொழிந்தது. அதே நாளில், நாட்டின் 8ஆவது பிரதமராக முஹிடின் யாசின் பதவியேற்பார் என மாட்சிமை தங்கிய மாமன்னர் அறிவித்தார்.
சிலிம் சட்டமன்ற இடைத் தேர்தலில் பெர்ஜுவாங் கட்சி சார்பில் மகாதீர் தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது குறித்து ராய்ஸ் யாத்திம் கேள்வி எழுப்பினார்.
ஏற்கெனவே 22 ஆண்டுகள் பிரதமராகவும் பின்னர் 22 மாதங்கள் பிரதமராக இருந்த மகாதீர், உண்மையிலேயே முஹிடின் யாசின் பக்கம் இருந்திருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + 18 =