முஸ்லிம் மற்றும் மலாய்க்காரர்களுக்கு ஜசெக எதிரானது என்று கூறுவது அபத்தம்

0

ஜசெகவை ஒரு சீன சமூக சார்பு கட்சி என்றும் அது மலாய்க்காரர் களுக்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டுவது நியாயமில்லை, ஆதாரமற்றது என்று அமானா நெகாராவின் உதவித் தலைவர் மாஃபுஸ் ஒமார் தெரிவித்தார். ஜோம் சேனல் எனும் இணையதள தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர், பிரிபூமி பெர்சத்து கட்சி மலாய்க்காரர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஜசெகாவை எதிரான கட்சி எனக் குற்றம் சாட்டுவது அருவருப்பானது அநாகரிகமானது என்று விமர்சித்தார். பக்காத்தான் ஆட்சியில் மனிதவள துணையமைச்சராகப் பணியாற்றிய மாஃபுஸ், ஜசெக, மலாய்க்காரர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறுவது அபத்தம் என்றும் அந்தக் கூற்றில் எந்த உண்மையும் இல்லையென்றும் அக்கட்சி எந்தக் காலத்திலும் மலாய்க்காரர்களையோ முஸ்லிம் மதத்தையோ சிறுமைப் படுத்தியது கிடையாது. அதன் மீது வேண்டுமென்றே, மலாய்க்காரர்களின் ஆத்திரத்தைத் தூண்டி அக்கட்சியை புறக்கணிக்கும் வகையில் விமர்சிப்பது வேண்டாத செயலெனக் குறிப்பிட்டார்.
பக்காத்தான் ரயாட் கூட்டணியில் இருந்த பாஸ், ஜசெகவை தற்காத்து ஒட்டி உறவாடியது ஏன்? இப்போது, அது அம்னோவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு அரச பாரம்பரியமும் இஸ்லாமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாகக் குறிப்பிடுவது சந்தர்ப்பவாதம் என்றும் அரசியல் பிழைப்புக்காகவே என்றும் மாஃபுஸ் குற்றம் சாட்டினார். ஜசெகவைக் கண்டு பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? ஊழல் மிக்க அம்னோ, பாஸ் கட்சியோடு இணைந்திருப்பதை மக்கள் வெறுப்பதை திசை திருப்பவே அவ்வாறு கூறப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார். தாஃபிஸ் மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெறும் வகையில் அப்பள்ளிகளில் டிவெட் என சொல்லப்படும் தொழில்நுட்ப, தொழிற்பயிற்சிப் பாடங்களை நடத்துவது அவர்களின் நன்மையைக் கருதியே என்றும் அதற்கு எதிராகப் போர் தொடுப்பது பாஸ் கட்சியின் அறியாமை என அவர் தெரிவித்தார். தாஃபிஸ் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க ஜசெகவைச் சேர்ந்த மலாய்க்காரர், முஸ்லிம் அல்லாத அமைச்சரான எம்.குலசேகரன்தான் என்றும் அவர் விளக்கமளித்தார். அத்திட்டம் 2019 அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, மனிதவள மேம்பாட்டு நிதியகத்தின் தலைவரான சரஸ்வதி கந்தசாமி, 5ஆம் படிவம் முடிக்காத தாஃபிஸ் பள்ளி மாணவர்களுக்கு டிவெட் பாடங்கள் அறிமுகப்படுத்தியது அவர்களின் எதிர்காலம் குறித்தே என்றும் குறிப்பிட்டார். அதன் மூலம் அந்த மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெற முடியும். அந்தப் பாடங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதால், இஸ்லாம் மற்றும் மலாய் மதிப்புக் கூறுகளுக்கு ஆபத்து வரும் என்று கூறுவது அறியாமையே என்று குறிப்பிட்டார். இதற்கிடையில், அத்திட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ள ஒருவர் கூறுகையில், ஜசெகவின் மீது அம்னோவும் பாஸ் கட்சியும் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதாகவும் மலாய்க்கார தாஃபிஸ் மாணவர்களின் எதிர்கால நலனுக்காக அத்திட்டத்தை மலாய்க்காரர் அல்லாத, முஸ்லிம் அல்லாத குலசேகரன் கொண்டுவந்ததைப் பாராட்ட வேண்டுமென்றும் குறிப்பிட்டார். முந்தைய ஆட்சியில் மஇகா-அம்னோ கூட்டணியில் செய்யப்படாமல் ஜசெக-அமானா கூட்டணியில் அத்திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டதாகவும் சுட்டிக் காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + nine =