முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு வெ.68 லட்சம் ஒதுக்கீடு

கடந்த 2016முதல் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு பினாங்கு அரசாங்கம் 68 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் ஜக்டிப் சிங் டியோ கூறினார்.
கடந்த 4 வருடங்களில் 165 விண்ணப்பங்களின் வழி ஆலயங்கள், தேவாலயங்கள், சீக்கிய ஆலயங்களுக்கு இந்த நிதி விநியோகிக்கப்பட்டுள்ள தாக அவர் குறிப்பிட்டார். பினாங்கு பௌத்த சங்கம், ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலயம், பினாங்கு கிறிஸ்துவ மையம் ஆகியவற்றுக்கு 150,000 வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த ஒதுக்கீட்டில் இருந்து ஒவ்வொரு சங்கமும் இவ்வாண்டு தலா 50,000 வெள்ளி பெறும் என அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் வரை இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் தற்போது வெ.2,671,316.62 மீதமுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆகையால் வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்பு, பழுதுபார்க்கும் பணிகளுக்கு இந்த வழிபாட்டுத் தலங்கள் நிதி ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பம் செய்யலாம் என அவர் சொன்னார்.
பினாங்கில் உள்ள அனைத்து சீக்கிய ஆலயங்களுக்கும் 19 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநில வீடமைப்பு, ஊராட்சி மன்றம், நகர்ப்புறத் திட்டக் குழுவிற்கான தலைவருமான ஜக்டிப் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 3 =