முஸ்லிம்களுக்குத்தான் பதவியா? கிடையாது

0

நிதியமைச்சர் பதவி சிறந்த தகுதிபெற்ற ஒருவருக்கே வழங்கப்பட வேண்டும், இன அடிப்படையில் அல்ல என்று பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். நிதியமைச்சு என்பது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கானது அல்ல. ஆகவே, மலாய், பூமிபுத்ரா, சீனர், இந்தியர் கடாசான் போன்ற அனைத்து மக்களையும் பேணக்கூடிய ஒரு சிறந்த , ஊழல் அற்ற, நேர்மையான, தகுதிபெற்ற ஒருவர் நிதியமைச்சராக இருப்பதுதான் நியாயம். அதுதான் எனது இஸ்லாமிய கோட்பாடு என்று முன்னாள் நிதியமைச்சருமான அவர் கூறினார். சன்னி மலாய் முஸ்லிம்களுக்கு மட்டுமே உள்துறை,கல்வி, நிதியமைச்சு ஆகியவற்றின் அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை மலாய்க்காரர்கள் தன்மானம் பேணும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அவர் மேற்கண்டவாறு கருத்துரைத்தார். மேலும், நீதித்துறைத் தலைவர், தலைமை நீதிபதி போன்ற பதவிகளும் மலாய் முஸ்லிம்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று அம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. பக்காத்தான் ஹராப்பன் ஆட்சிக்கு வந்த பிறகுதான் மலாய் முஸ்லிம் அல்லாத ஒருவர் நிதியமைச்சர் பதவியை வகிக்கிறார் என்று கூறப்பட்டாலும், நாட்டின் முதல் நிதியமைச்சர் துன் ஹென்றி லீ ஹவ் சிக் மற்றும் இரண்டாவது நிதியமைச்சர் துன் தான் சியூ சின் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பூமிபுத்ரா மற்றும் தேசத்தின் கோடிக்கணக்கான பணத்தை குறிப்பிட்ட சிலர் சுருட்டிய விவகாரத்தில்தான் எனது முக்கிய பார்வை இருக்கிறது. அது நாட்டு மக்கள் என்ற பொதுவான சிந்தனையில் அமைந்துள்ளது. ஒரு தனி இனம் ஒரு நாடாக முடியாது. இந்நாட்டில் மலாய்க்காரர்கள் தாங்கள் விடுபட்டுள்ளதாக கருதுகின்றனர். இருந்தாலும் அதை இன அடிப்படையில் பார்க்க முடியாது. காரணம் ஏழ்மை எல்லா இனத்திலும் இருக்கிறது. ஏழ்மை தொடர்பான புள்ளி விபரத்தை நாம் நேர்மையாக வெளிப்படையாக அணுக வேண்டும்.
உதாரணத்திற்கு நகர்ப்புறங்களில் இருக்கின்ற சில சீனர்களும், தோட்டப்புறங்களில் இருக்கின்ற பெரும்பான்மை இந்தியர்களும் வறுமையில் இருக்கின்றனர். சில தோட்டப்புற வீடுகளின் கோரமான நிலையைப் பார்க்கின்ற பொழுது எனது இஸ்லாமிய நம்பிக்கை அவர்களை ஒதுக்குவது அநீதி என்று நினைவுறுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − seven =