முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்புக்கு எதிரான 7 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன!

எஸ்.ஆர்.சி. எனப்படும் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் வெ.4 கோடியே 20 லட்சம் நிதியை மோசடி செய்ததாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக சுமத்தப்பட்ட 7 குற்றச்சாட்டுகளும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருப்பதாக கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் நேற்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் சென். பெர்ஹாட்டிற்குச் சொந்தமான 4 கோடியே 20 லட்சம் ரிங்கிட்டை முறைகேடு செய்த 3 குற்றச்சாட்டுகள், கள்ளப்பணம் பரிமாற்றம் தொடர்பில் 3 குற்றச்சாட்டுகள், தமது அதிகாரத்தைத்
தவறாகப் பயன்படுத்தி நிதி அமைச்சின் கீழ் இருக்கும் மலேசியா மேம்பாட்டு நிறுவனமான 1 எம்.டி.பி.யின் கீழ் இருந்த எஸ்.ஆர்.சி-யின் நிதியை மோசடி செய்தது தொடர்பில் ஒரு குற்றச்சாட்டையும் அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளது என்று நீதிபதி முகமட் நஸ்லான் தெரிவித்தார்.
ஆகவே, இந்த வழக்கில் டத்தோஸ்ரீ நஜிப் ஒரு குற்றவாளியே என்று நீதிபதி முகமட் நஸ்லான் தீர்ப்பளித்தபோது நஜிப் மிகவும் அமைதியாகக் காணப்பட்டார்.
இந்த தீர்ப்பைக் கேட்டதும் நீதிமன்றத்தில் இருந்த அம்னோ தலைவர்களும் அவரின் ஆதரவாளர்களும் அதிர்ச்சியில் மூழ்கினர்.
கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரை அதாவது தேசிய முன்னணி அரசாங்கம் ஆட்சியை இழக்கும்வரை டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதவியில் இருந்தார்.
எஸ்.ஆர்.சி. எனப்படும் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் வெ. 4 கோடியே 20 லட்சம் நிதியை மோசடி செய்ததாக 2018ஆம் ஆண்டில் இவருக்கு எதிராக 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, நீதிபதியின் இந்த அதிரடி தீர்ப்பைத் தொடர்ந்து மேல் முறையீடு செய்வதற்தாக நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட வேண்டும் என டத்தோஸ்ரீ நஜிப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா கேட்டுக் கொண்டார்.
ஆனால் இதற்கு அரசு தரப்புக்கு தலைமையேற்ற பிரபல வழக்கறிஞர் டத்தோ வி. சிதம்பரம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்.
தண்டனை விதிக்கப்பட்ட பின்னரே மேல் முறையீடு செய்வதற்கான வாதத் தொகுப்பை சமர்ப்பிக்க முடியுமே தவிர தண்டனை விதிப்பதற்கு முன்னதாகவே நீதிமன்ற நடவடிக்கையை ஒத்திவைக்கும்படி கோரிக்கை விடுக்க முடியாது என்று வழக்கறிஞர் டத்தோ சிதம்பரம் ஆணித்தரமாக வாதிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + 6 =