‘முதலீட்டாளர்களை நாம் பறையா போல நடத்த முடியாது’ பிரதமர் துன் மகாதீரின் சர்ச்சை பேச்சு

கோலாலம்பூர், ஆக. 27-
இந்தியர்களை புண்படுத்தும் ஒரு ஜாதி நிந்தனைச் சொல்லை பயன்படுத்திய பிரதமர் துன் மகாதீருக்கு எதிராக நாடு முழுவதும் நேற்று பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. பிரதமர் துன் மகாதீர் ஒரு மாபெரும் தலைவராகப் போற்றப்படக்கூடியவர். அதுவும் 94 வயதில் அவர் பிரதமராக இருப்பது உலக அதிசயமாகக் கருதப்படுகிறது. ஆனால் அவரே இப்படி ஒரு சொல்லை உதிர்த்திருப்பது வன்மையாக கண்டிக்கக்கூடியது என்று அவர்கள் கூறினர். நேற்று வலைத்தளங்களில் இந்த கண்டனங்கள் வந்து கொண்டேயிருந்தன. இயக்கங்கள், தனி நபர்கள், உட்பட இந்திய சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் துன் மகாதீர் பயன்படுத்திய இந்தச் சொல்லைக் கேட்டு அவர்கள் அதிர்ந்து போயினர். பகாங் மாநிலத்தில் உள்ள ’லைனாஸ் என்ற ’அரியமண் தொழிற்சாலையைப் பற்றி எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர், அந்தத் தொழிற்சாலையை, முதலீட்டாளர்களை நாம் பறையா போல நடத்த முடியாது. அப்படி நடத்தினால் யாரும் இங்கு முதலீடு செய்ய வரமாட்டார்கள் என்று பேசினார். ஒரு பதிலைச் சொல்ல எத்தனையோ வார்த்தைகள் இருக்கையில் பன்னெடுங்காலமாக இந்தியர்களைப் புண்படுத்துகின்ற, அவர்களை அவமதித்து மனம் நோகச் செய்கின்ற ஓர் அவச்சொல்லை ஒரு பிரதமரே பயன்படுத்தலாமா என்று இந்திய சமுதாயத்தில் பரவலாக ஆட்சேபமும் கொந்தளிப்பும் எழுந்துள்ளது.
நாட்டின் அரசியல் வரலாற்றில் நீண்ட, நெடிய அனுபவம் கொண்டவர் அவர். இந்தச் சொல் இந்திய சமுதாயத்தில் ஒரு ஜாதி நிந்தனைச் சொல்லாக விளங்குகிறது என்பதை நிச்சயமாக அவர் அறிந்திருப்பார். அறிந்தும் இந்த தவற்றைச் செய்வதா என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஏற்கெனவே தமிழ்ப்பள்ளிகளில் ஜாவி எழுத்துமுறை என்ற அறிவிப்பாலும் இந்தியர்கள் விசுவாசமற்றவர்கள் என்ற ஸக்கீரின் அவமதிப்புப் பேச்சாலும் நொந்து போயிருக்கின்ற இந்திய சமுதாயம், பிரதமரின் இந்த வார்த்தைப் பிரயோகத்தால் மேலும் மனமுடைந்து போயிருக்கிறது.
ஏற்கெனவே ஒரு முறை இந்தியர்களை நிந்திக்கும் ’கிலிங் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியபோது சமுதாயம் கொந்தளித்தது. அதற்காக அவர் பின்பு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − 2 =