முடங்கிய வாழ்வில் சிகை அலங்கார உரிமையாளர்கள்


சிகை அலங் கரிப்பு செய்து வாடிக்கையாளர்களை அழகுபார்த்து வந்த அதன் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களின் வாழ்வு இன்று முடங்கிப் போய் உள்ளது.
தற்போது அமலில் இருக்கும் முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பி.கே.பி-இனால் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் இயங்குவதற்கு அரசாங்கம் அனுமதி அளிக்காதது தங்களின் வாழ்வாதாரத்தைப் பெருமளவில் பாதித்துள்ளதாக சிகை அலங்கார கடைகளின் உரிமையாளர்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட முதலாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காலகட்டம் முதலே சிகை அலங்கார கடைகளுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டு வருவது மறுக்க முடியாதது.
கோவிட்-19 தொற்றுப் பரவல் தணிந்த வேளையில் சிகை அலங்காரக் கடைகள் இயங்குவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்திருந்த வேளையில், மீண்டும் தொற்றுப் பரவல் அதிகரிப்பால் தங்களின் வியாபாரம் முடங்கியிருப்பதாக பினாங்கு வட மாநில இந்திய சிகையலங்கார சமூக நல இயக்கத்தின் துணைத்தலைவர் ரகு நல்லையா தெரிவித்தார்.
“சேவைகள் துறையில் சிகை அலங்காரமும் ஓர் அங்கமாக இருக்கிறது. அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்ட முதலாவது ஊரடங்கு சட்டம் தொடங்கி இதுவரையில் நாங்கள் பல்வேறு சவால்களையும் போராட்டங்களையும் எதிர்நோக்கி வருகிறோம். சொல்லப்போனால் இந்தக் காலகட்டத்தில் எங்கள் வாழ்வாதாரமும் தொழிலும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசாங்கம் ஒவ்வொரு முடிதிருத்தும் நிலையத்திற்கும் வட்டி இல்லாத நிதி வழங்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்‘’ என்று அவர் கூறினார். இதனிடையே, வியாபாரமின்றி வாழ்க்கையை நகர்த்த திண்டாடும் தங்களுக்கு அரசாங்கத் தரப்பிலிருந்து உதவி கிட்டினால் இப்போதைய சூழ்நிலையை சமாளிக்க ஏதுவாக இருக்கும் என்று அவ்வியக்கத்தின் செயலாளர் முரளி அப்பளசாமி கேட்டுக் கொண்டார்.
“எங்கள் சங்கத்தினரின் 400 கடைகள் வருமானமின்றி அடைபட்டுக் கிடக்கின்றது. எங்கள் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் ஒவ்வொரு கடைகளுக்கும் மானியம் வழங்கி உதவினால் எங்களின் நிதிச்சுமையை அது குறைக்க உதவும். அதேபோன்று வங்கிகளிலிருந்தும் தெக்கூனிலிருந்து வட்டியில்லா கடனுதவி கிடைக்கப்பெற்றாலும் எங்களின் நடப்பு சூழ்நிலைக்கு அது உதவியாக இருக்கும்‘’ என்று அவர் குறிப்பிட்டார்.
தங்களின் நிலைப்பாட்டை உணர்ந்து சிகை அலங்காரக் கடைகள் மீண்டும் இயங்குவதற்கு அரசாங்கம் வாய்ப்பளித்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள செயல்பாட்டு தர விதிமுறையை முழுவதுமாக கடைப்பிடித்து நடப்பதாகவும் அவர்கள் உறுதி கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − one =