மியன்மார் ராணுவ ஆட்சி ஒழிவது எப்போது?

சட்டப்படியான ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ஜனவரி மாதம் கவிழ்த்த அந்நாட்டு ராணுவம், ஆட்சியைக் கைப்பற்றி அராஜகம் புரிந்து வருகிறது.
பொதுத்தேர்தலில் தில்லுமுல்லு புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, அதன் ஆட்சியாளர் ஆங் சான் சூகீயை சிறையில் அடைத்து, அவர் மீது பல வழக்குகளைச் சுமத்தியுள்ளது.
ராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டோரை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்துள்ளது.
இந்த அட்டூழியத்தை எதிர்த்து அந்நாட்டில் தினந்தோறும் ஆர்ப் பாட்டங்களும் போராட்டங்களும் நடத்தப்பட்டன. அங்கு மீண்டும் சிவிலியன் ஆட்சி மலர வேண்டுமென உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் ஆசியான் கூட்டமைப்பின் மாநாடு அண்மையில் இந்தோனேசியாவில் நடத்தப்பட்டபோது ராணுவ ஆட்சியாளர் மின் ஆங் ஹிலியாங் கலந்து கொண்டு தம்முடைய விளக்கத்தை முன்வைத்தார்.
எனினும், அந்த அமைப்பில் உறுப்பியம் பெற்றுள்ள 10 நாடுகளின் தலைவர்கள் ஒருமித்த குரலில், அங்கு ஜனநாயக ஆட்சி மலர வேண்டுமென்றும், அரசியல் போராட்டக்காரர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டுமென்றும், அங்கு அமைதி நிலவ வேண்டுமென்றும் 5 அம்ச நிபந்தனைகளை விதித்தது.
அந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக உறுதி கூறிய மின் ஆங் ஹிலியாங், நாடு திரும்பியவுடன் அவற்றை மதிக்காத போக்கில் நடந்து கொள்கிறார். தமது ராணுவ ஆட்சியை அவர் எளிதில் விட்டுக் கொடுக்கப் போவதில்லை.
உலகின் பல நாடுகள் மியன்மாரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தாலும், உருப்படியான நடவடிக்கையை எடுக்கத் தவறியுள்ளன. மியன்மாரின் நெருங்கிய நட்பு நாடுகளான சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் அப்பிரச்சினையில் பட்டும் படாததுமான அக்கறையைக் காட்டி வருகின்றன. சில நாடுகள் அது மியன்மாரின் உள்நாட்டுப் பிரச்சினை என்று ஒதுங்கிக் கொண்டுள்ளன என்பது வருத்தமளிக்கிறது.
ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்களில் 800 பேருக்கு மேல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அந்தப் போராட்டங்களை அணுக்கமாகக் கண்கணித்து வரும் குளோபல் விட்நஸ் எனும் அரசு சாரா அமைப்பு, வீதிகளில் ஆயிரக் கணக்கானோரை ராணுவம் சுட்டுக் கொன்றதாகவும், இரவு நேரங்களில் வீடு புகுந்து நடத்தப்படும் சோதனை நடவடிக்கைகளில் பலர் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றது. 50க்கும் அதிகமான சிறார்கள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு, பெண்கள் பாலியல் ரீதியாக கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
54 மில்லியன் மக்களைக் கொண்ட மியன்மாரில் ராணுவ ஆட்சியில் மக்கள் ஜனநாயகத்துக்கு விரோதமாக மிருகங்கள் போல் நடத்தப்படுகின்றனர்.
இதில் ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் அதனைக் கண்டு கொள்ளாததற்கு வர்த்தகம், அதனால் கிடைக்கும் வருமானமுமே அதற்கு முக்கிய காரணங்களாகச் சொல்லப்படுகிறது.
இதில், ஆசியான் நாடுகள் என்ன செய்யப் போகின்றன? இதனை பாராமுகமாக விட்டுவிடுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.
மியன்மாரின் ரோஹிங்யா அகதிகள் அண்டை நாடுகளுக்கு விரட்டி அடிக்கப்பட்டு, பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி வருவதுபோல, பாமார் இன மக்களும் அதே நிலைமையில் அந்நாட்டிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் அகதிகளாகச் செல்லும் நாடுகள் அவர்களால் ஏற்படுத்தப்படும் தொல்லைகள், பிரச்சினைகளால் திக்குமுக்காடிப் போயுள்ளன.
ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு வருத்தத்தை மட்டுமெ பரிசாகத் தரும் மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகள், அவர்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
இந்நிலையில், மியன்மார் ஆசியானை மதிக்காமல் நடந்து கொள்வதற்குப் பதிலடியாக, அதனை ஆசியானிலிருந்து விலக்கி தண்டிப்பதே சரியான முடிவாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − five =