மியன்மார் அரசை ராணுவம் கைப்பற்றியது!

    மியன்மாரின் அசல் தலைவராக விளங்கிவரும் ஆங்சான் சூகியையும் அதிபர் வின் மியிண்ட் உட்பட இதர அரசியல் தலைவர்களையும் அந்நாட்டு ராணுவம் நேற்று அதிகாலையில் கைது செய்த பின்னர் அந்நாட்டின் அதிகாரத்தையும் கைப்பற்றியது.அடுத்த ஓராண்டுக்கு நாட்டில் அவசரகாலச் சட்டம் நடப்பில் இருக்கும் என்றும் நாட்டில் அதிகாரப் பரிமாற்றம் நடந்துள்ளது என்றும் அந்நாட்டின் ராணுவத் தொலைக்காட்சி அறிவித்தது. கடந்தாண்டு நவம்பரில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய பொதுத்தேர்தலைத் தொடர்ந்து மியன்மாரின் ஜனநாயக அரசாங்கத்திற்கும் ராணுவத்திற்கும் இடையே பதற்றம் நிலவிவரும் வேளையில், இந்த ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சூகியும் இதர அரசியல்வாதிகளும் எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை உடனடியாக அறிந்து கொள்ள முடியவில்லை. மியன்மாரில் 2011ஆம் ஆண்டில் ஜனநாயகச் சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்படும் வரை அந்நாட்டை ராணுவம் ஆட்சி செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தேர்தல் மோசடி காரணமாக, மியன்மாரின் ராணுவத் தலைமைத் தளபதி மின் ஆங் ஹிலாங்கிடம் நாட்டின் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ராணுவம் திங்கட்கிழமை அறிவித்தது. ஆட்சிக் கவிழ்ப்பை அமெரிக்கா உடனடியாக கண்டனம் செய்தது.தேர்தல் முடிவுகளை மாற்ற முனைவதையும் நாட்டின் ஜனநாயக நடைமுறைக்கு இடைஞ்சலை ஏற்படுத்துவதையும் அமெரிக்கா வன்மையாக எதிர்க்கும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் குறிப்பிட்டார். நவம்பர் மாதத் தேர்தலில் சூகியின் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட் (என்.எல்.டி.) அரசாங்கத்தை அமைக்கும் அளவுக்குப் போதுமான இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 83 விழுக்காட்டு இடங்களை அது கைப்பற்றியது. 2011ஆம் ஆண்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு நடைபெற்ற இரண்டாவது தேர்தல் அதுவாகும். அத்தேர்தல் முடிவை ஏற்க மறுத்த ராணுவம், அதிபர் மற்றும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆகியோருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புகார் மனுவைத் தாக்கல் செய்தது. தேர்தல் மோசடி விவகாரம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக அண்மையில் ராணுவம் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்புப் புரட்சி நடைபெறலாம் எனும் அச்சம் நிலவி வந்தது. நாட்டின் அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியிருக்கும் இவ்வேளையில், பெரு நகரங்களுக்கான கைப்பேசி இணையச் சேவை மற்றும் கைப்பேசித் தொடர்புகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. நுணுக்கவியல் காரணங்களால் அந்த இடையூறு ஏற்பட்டுள்ளது என்று அரசாங்கத்தின் எம்.ஆர்.டி.வி. தொலைக்காட்சி கூறியது. நிர்வாகத் தலைநகர் நைப்பிடாவின் தொலை தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதன் பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. மியன்மாரின் மிகப் பெரிய நகரான யங்கோனில் தொலைபேசி மற்றும் இணையச் சேவை கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் செயல்பட்டு வருகின்றன. வங்கிகள் தங்களின் நிதிச்சேவைகள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. மியன்மாரின் சுதந்திரப் போராட்ட வீரர் ஜெனரல் ஆங்சானின் மகளே சூகி ஆவார். எழுபத்தைந்து வயதான சூச்சி 1989ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டுவரை ராணுவத் தலைவர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். மனித உரிமைகளின் கலங்கரை விளக்கம் என்று போற்றப்பட்டவரான சூகிக்கு கடந்த 1991ஆம் ஆண்டில் வீட்டுக் காவலில் இருந்தபோதே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    8 − seven =