மித்ராவின் ஊழல் அமைச்சர் ஹலிமாவுக்கு வேதமூர்த்தி சவால்

    மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவின் ( மித்ரா) நிதியைத் தாம் முறைகேடாக கையாண்டதாக நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ள தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் ஹலிமா சாடிக், அதே குற்றச்சாட்டை நாடாளுன்றத்திற்கு வெளியே கூறமுடியுமா என்று பி.வேதமூர்த்தி நேற்று சவால் விடுத்தார். தாம் கூறியது உண்மைதான் என்று ஹலிமா உறுதியாகக் கருதுவாரேயானால் அக்குற்றச் சாட்டை நாடாளுமன்றத்திற்கு வெளியே மறுபடியும் அவர் கூறவேண்டும் என்று வேதமூர்த்தி சொன்னார். நாடாளுமன்றச் சலுகைகளைப் பயன்படுத்தி எனக்கு எதிராக தவறானதும் தீயநோக்கம் கொண்டதும் அடிப்படையற்றதுமான குற்றச்சாட்டுகளை அவர் கூறக்கூடாது. அதே குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்திற்கு வெளியே மீண்டும் உடனடியாக கூறும்படி அவருக்கு சவால் விடுகிறேன் என்று அறிக்கையொன்றின்வழி வேதமூர்த்தி தெரிவித்துள்ளார். ஹலிமா அவ்வாறு செய்யாவிட்டால், நாடாளுமன்றத்திற்கும் மலேசிய இந்தியர்களுக்கும் தவறான தகவலை வழங்கியதற்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் தேசிய ஒற்றுமை அமைச்சராக இருந்தவருமான வேதமூர்த்தி வலியுறுத்தினார். மித்ரா அமைப்பு தனது கடன்களை அடைக்க வேண்டியிருந்ததால் கடந்த ஈராண்டுகளாக பத்து கோடி வெள்ளி வருடாந்திர ஒதுக்கீட்டை அது முழுமையாகப் பெறமுடியாமல் போனது என்று நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் ஹலிமா தெரிவித்திருந்தார். கடந்த 2020ஆம் ஆண்டில் மித்ராவிடம் ஆறு கோடியே முப்பத்தைந்து லட்சம் வெள்ளி மட்டுமே இருந்ததாகவும் அந்த அமைப்பு பிரதமர்துறையின்கீழ் இருந்தபோது அது அமல்படுத்திய திட்டங்களினால் ஏற்பட்ட கடனை அடைப்பதற்கு மூன்று கோடியே ஐம்பது லட்சம் வெள்ளி செலவிடப்பட்டுள்ளது என்றும் மக்களவையில் ஹலிமா குறிப்பிட்டிருந்தார். 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கான ஒதுக்கீடு குறைந்துபோகும் அளவுக்கு ஏன் மித்ரா நிதி செலவிடப்பட்டது என்பதை முந்தைய அமைச்சரிடம்தான் ( வேதமூர்த்தி) நீங்கள் கேட்க வேண்டும் என்று மக்களவையில் பன்னிரண்டாவது மலேசியத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்களை நோக்கி அவர் கூறினார். மித்ரா தமது நிர்வாகத்தின்கீழ் இருந்தபோது ஆண்டுக்கு பத்து கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆயினும், இந்திய சமூகத்திற்கான சமூக-பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பணத்தைச் செலவிடுவதற்கு முன்பு தமக்கு விளக்கமளித்த தலைமை கணக்காய்வாளரின் அலுவலகம், பெரிய அளவில் நிதி முறைகேடாகக் கையாளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டுப் பிரிவின் ( செடிக்) முந்தைய நிர்வாகம்தான் நிதியை முறைகேடாக கையாண்டுள்ளது. மேலும், தேசிய முன்னணி அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த ஒரு முன்னாள் அமைச்சரும் இரண்டு துணையமைச்சர்களும் அந்நிதியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர் என்றும் வேதமூர்த்தி கூறினார்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    twenty + 13 =