மார்டி ஆராய்ச்சியாளர் கொலை வழக்கு: 4 இந்திய ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

மார்டி ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சியாளர் வான் ஹசான் வான் எம்போங் என்பவரை கொலை செய்ததாக நேற்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நான்கு இந்திய ஆடவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது.
எஸ். விக்னேஸ்வரன் ( வயது 22), பி. கோகிலன் (வயது 23), எம்.ரவீந்திரன் (வயது 23) மற்றும் டி. சுகு (வயது 27) ஆகியோர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நேற்று காலை இந்த நான்கு ஆடவர்களும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோலாலம்பூர் ஜாலான் டூத்தாவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
மாஜிஸ்திரேட் வோங் சாய் சியா முன்னிலையில் நிறுத்தப்பட்ட இந்த நால்வருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
குற்றச்சாட்டை புரிந்து கொண்டதாக நால்வரும் தலையசைத்தனர்.
கடந்த நவம்பர் 29ஆம் தேதி புக்கிட் பண்டாராயாவில் கொள்ளை முயற்சியின்போது மார்டியின் முன்னாள் ஆராய்ச் சியாளர் வான் ஹசான் வான் எம்போங் கொலை செய்யப்பட்டார்.
விடியற்காலை மணி 3.30 அளவில் இரண்டு மாடி கொண்ட தமது பங்களா வீட்டின் பின்புற ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த கொள்ளையர்களை தடுக்க முயன்றபோது பாராங்கினால் தாக்கப்பட்டதால் 73 வயதுடைய வான் ஹசான் வான் எம்போங் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த சம்பவத்தில் அவரது மனைவியான 71 வயதுடைய ஷரியா யூசோப் காயம் அடைந்தார்.
கட்டாய மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்ற வியல் சட்டம் 302இன் கீழ் இந்த நால்வரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த கொலை வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு உட்பட்டது என்பதால் இவர்களிடம் இன்னமும் வாக்குமூலம் பதிவு செய்யப் படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here