மார்கழி ஸ்பெஷல் தினமும் ஒரு திருப்பாவை பாடுவோம்

கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் ; பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

பொருள் :

பொழுதுவிடிந்ததற்கு உண்டான அடையாளங்களைச் சொல்லி, எழுந்த பின் செய்ய வேண்டியனவைகளைச் சொல்லி, அதனால் உண்டாகும் பயன்களைச் சொல்லி, பெண் ஒருத்தியை எழுப்புவதாக அமைந்த பாடல். கீழ்வானம் வெளுத்துவிட்டது. பனிப்புல் மேய்வதற்காக, எருமை மாடுகள் நான்கு திசைகளிலும் பரவின. நீயே பார்.

நோன்பிற்காக நீராடக் கிளம்பிய பெண்களைத் தடுத்து நிறுத்தி, உன்னைக் கூப்பிடுவதற்காக நாங்கள் வந்து நிற்கின்றோம். கண்ணனுக்கு மிக நெருங்கியவளான நீ தூங்கிக் கொண்டிருக்கலாமா? எழுந்திரு.

குதிரை வடிவான அசுரனின் வாயைப் பிளந்தவனும், மல்லர்களை அழித்தவனும், தேவாதிதேவனும்-ஆகிய பெருமாளை நெருங்கி, வணங்கினால், “ஆஹா! இவர்களைத் தேடிப் போய் நாம் அருள் செய்ய வேண்டியதிருக்க, நம்மைத் தேடி இவர்கள் வரும்படியாகச் செய்துவிட்டோமே” என்று சுவாமி இறங்கி, நமக்கு அருள் புரிவான். அப்படிப்பட்ட பெருமாளை நாடிச் செல்லுவோம். எழுந்திரு வா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here