மாரான் மரத்தாண்டவர் ஆலய கூட்டத்தில் சலசலப்பு!

  நாட்டில் மிகவும் புகழ்பெற்ற மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தின் ஆண்டுகூட்டமும் புதிய நிர்வாகத்தினர் தேர்தலும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற வேளையில் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இம்மாதம் 11ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட மாரான் மரத்தாண்டவர் ஆலய பொதுக்கூட்டம் கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அந்த கூட்டம் நேற்று மீண்டும் காலை 9.00 மணிக்கு மேல் தொடங்கியது.இருப்பினும் இக்கூட்டத்தில் 77 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ள போலீசார் அனுமதி வழங்கிய வேளையில் முன்னாள் தலைவர் பி.இராமன் ஆதரவாளர்கள் சுமார் 200 உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
  100க்கும் மேற்பட்ட கலகத் தடுப்பு போலீசார் மற்றும் போலீசார் மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் குவிந்தனர்.
  ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்த 27 கமிட்டி உறுப்பினர்கள், 50 உறுப்பினர்கள் சேர்த்து மொத்தம் 77 பேர் மட்டுமே மண்டபத்திற்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்கினர்.
  இராமன் அணியைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கூட்டத்திலும் வாக்களிப்பிலும் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மாரான் மரத்தாண்டவர் ஆலய கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
  மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தின் 900க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கத்துவம் பெற்றுள்ள வேளையில் வெறும் 77 பேர் மட்டுமே அனுமதி வழங்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் என்று அனுமதி மறுக்கப்பட்ட உறுப்பினர்கள்ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.
  முன்னாள் தலைவர் பி.இராமன், சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜ் உட்பட பல முக்கியப் பிரமுகர்களும் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.
  மாரான் மரத்தாண்டவர் ஆலய உறுப்பினர் மற்றும் சபாய் சட்ட மன்ற உறுப்பினர் என்ற வகையில் கூட்டத்தில் கலந்து கொள்ள தனக்கு அனுமதி வழங்கும்படி காமாட்சி துரைராஜ் கேட்டுக் கொண்டார்.
  ஆனால், அவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார். அப்படியானால் 77 பேர் மட்டுமே அனுமதி வழங்கப் பட்டது என்ற விதத்தில் நியாயம் என்று காமாட்சி கேள்வி எழுப்பினார்.
  ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட 200 உறுப்பினர்கள் பின்னர் சுங்கை ஜெரிக்கில் உள்ள போலீஸ நிலையத்தில் புகார் செய்தனர்.
  இக்கூட்டம் சட்டப்படி செல்லாது. தனக்கு வேண்டிய உறுப்பினர் களை வைத்துக் கொண்டு எப்படி கூட்டம் நடத்த முடியும். பெரும் பான்மையான உறுப்பினர்களை வெளியே நிறுத்திவிட்டு 77 பேரை கொண்டு கூட்டம் நடத்துவது செல்லாது என்று அவர்கள் தெரிவித்தனர்.
  இது தொடர்பில் ஆர்.ஓ.எஸ். இலாகாவிலும் புகார்கள் செய்யப்படும் என்று உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
  நடப்புத் தலைவர் இராமகிருஷ்ணனை எதிர்த்து முன்னாள் தலைவர் பி.இராமன் இம்முறைதலைவர் பதவிக்கு போட்டியிட தயார் நிலையில் இருந்தார் என்று என்பது குறிப்பிடத்தக்கது.
  இதனிடையே, போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்ற மாரான் மரத்தாண்டவர் ஆலயக் கூட்டத்தில் நடப்புத் தலைவர் இராமகிருஷ்ணன், துணைத்தலைவர் டத்தோ தேவந்திரன், நடப்புப் பொருளாளர் டத்தோ தமிழ்செல்வம் ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  செயலாளர் பதவியில் இருந்து விலகிக் கொண்ட டத்தோ பூங்கவானத்திற்குப் பதில் மதுரவேல் புதியச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here