மானியம் வழங்குவதில் எந்தவொரு வழிபாட்டுத்தலமும் விடுபடவில்லை

சுங்கை சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எந்தவொரு வழிபாட்டுத் தலமும் விடுபடாத நிலையில் அனைத்து மதம் சார்ந்த தலங்களுக்கும் சுங்கை சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் தொடர்ந்து தனது சிறப்பு மானியம் வாயிலாக நிதியுதவி செய்து வருவதாக அவரது சிறப்பு அதிகாரி ப.ஜெயகுமார் தெரிவித்தார். அவ்வகையில்,சுங்கையில் இந்துகளின் அடையாளமாக இருந்து வந்த சுங்கை சுப்பிரமணியர் ஆலயத்திற்கு அவ்வாலயத்தின் சீரமைப்பு மற்றும் புதுப்பித்தல் பணிக்காக வெ.20,000ஐ சிவநேசன் வழங்கியிருப்பதாக கூறிய அவர் இவ்வாண்டின் தொடக்கத்தில் இவ்வாலயத்திற்கு வெ.50,000ஐ வழங்கியிருந்ததையும் அவர் நினைவு கூர்ந்தார். மேலும்,சுப்பிரமணியர் ஆலயம், அதன் வளாகத்தில் அமைந் திருக்கும் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் ஆகியவற்றுக்குச் செல்லும் சாலையை சீரமைக்கும் பணிக்காகவும் சிவநேசன் நிதி ஒதுக்கி அப்பணிகள் இதற்கு முன்னர் சிறப்போடு மேற்கொள்ளப்பட்டிருந்ததையும் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். முன்னதாக சுங்கை மசூதிக்கு செல்லும் முதன்மை சாலை சீரமைப்புப் பணியும் சட்டமன்ற உறுப்பினரின் சீரிய முயற்சியால் செய்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் இங்குள்ள சீனக்கோயிலுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள அதன் நுழைவாயிலை புதுப்பித்தல் மற்றும் அக்கோயிலுக்கு வர்ணம் பூச வெ.12,000 அவரது சிறப்பு நிதியில் இருந்து வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். சுங்கை சட்டமன்றத்தை பொறுத்தமட்டில் சட்டமன்ற உறுப்பினரின் சேவையும் செயல்பாடும் மக்களுக்கு நிறைவானதாக அமைந்திருப்பதாக சுட்டிக்காண்பித்த ஜெயகுமார் இனம்,மொழி,மதம் கடந்து எந்தவொரு வேறுபாடும் கருதாமல் சுங்கை சட்டமன்ற உறுப்பினராக மக்களுக்கான தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் சிவநேசன் செழுமையுறச் செய்து வருவதாகவும் ஜெயகுமார் கூறினார். கேட்கும் போதெல்லாம் இல்லையென சொல்லாமல் தன்னால் இயன்ற மானியத்தையும் சொந்த நிதியையும் அவர் வழங்கி வருவது அவரது மக்கள் பணியோடு சமயப் பணிக்கும் பெரும் சான்றாக திகழ்வதாக ஆலய நிர்வாகத்தினர் குறிப்பிட்டனர். மேலும் வழிபாட்டுத் தலங்கள் மக்களுக்கு நல்லதொரு சமயப் பணியோடு சமூக சேவையினையும் செய்திடல் வேண்டும் என ஜெயகுமார் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + twelve =