மாநகர் அந்தஸ்தை நோக்கி அம்பாங்

அம்பாங், டிச. 16 – அம்பாங் கூடிய விரைவில் மாநகர் அந்தஸ்தைப் பெறும் என்று வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஸுரைடா கமாருடின் கோடி காட்டினார் தற்போது அதில் 500,000 மக்கள் குடியிருக்கும் நிலையில் 24 ஊராட்சி அலுவலகங்களில் இருந்து 100 மில்லியன் ரிங்கிட் வருமானத்தை ஈட்டி வருவதால் அந்த அந்தஸ்துக்கு உயர அது தயாராகிக் கொண்டிருக்கிறது.
அங்கு ஓர் அரசாங்கப் பல்கலைக் கழகம் இல்லாமல் இருப்பது மட்டுமே சின்ன குறை. ஆனால், அதற்குப் பதிலாக பல தனியார் உயர்க் கல்விக் கூடங்கள் செயல்படுகின்றன.
அம்பாங் ஜெயா ஊராட்சி மன்றம் அடைய வேண்டிய புதிய இலக்குகளைத் தாம் நிர்ணயித்துள்ளதாக அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸுரைடா கூறினார். குப்பை அகற்றும் நிர்வாகம், சமூக மேம்பாட்டுத் திட்டங்கள், கட்டளை மையம் ஆகியவை அவை. இம்மூன்று இலக்குகளையும் அம்பாங் ஜெயா ஊராட்சி மன்றம் அடைந்து விட்டால், அடுத்தாண்டில் அதற்கு மாநகர் அந்தஸ்து வழங்கப்படுவது உறுதி.
தற்போது நாட்டில் 14 மாநகர மன்றங்கள் உள்ளன. அவை கோலாலம்பூர், ஈப்போ, பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலம், அலோர் ஸ்டார், ஜொகூர் பாரு, மலாக்கா நகர், கோல திரங்கானு, கோத்தா கினபாலு, மிரி, வட கூச்சிங், தென் கூச்சிங், பாலிக் பூலாவ், செபராங் பிராய் ஆகியன அவை. ஆகக் கடைசியாக கடந்த செப்டம்பர் மாதத்தில் செபராங் பிறை மாநகர் அந்தஸ்தைப் பெற்றது.
அனைத்து ஊராட்சி மன்றங்களும், குடியிருப்பாளர்கள் சங்கங்களும் சமூக நல மேம்பாட்டுத் திட்டங்களை, குறிப்பாக பி40, தாய்-சேய், இளைஞர் ஆகிய மக்களுக்கு நலன் தரும் வகையில் செயல்படுத்துமாறு ஸுரைடா கேட்டுக் கொண்டார். இது தொடர்பான ஆலோசனைகளைத் தமது அமைச்சு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − 13 =