மாதவரம் அருகே நள்ளிரவில் அடுத்தடுத்து லாரிகள் மோதல்- டிரைவர், கிளீனர் படுகாயம்

சென்னையை அடுத்த மாதவரம் ஜி.என்.டி. சாலை ஆட்டுத்தொட்டி அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு லாரியும், அதன் முன்புறம் ஒரு மினி லாரியும் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.


அப்போது அரியானா மாநிலத்தில் இருந்து பெயிண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் வார்னிஷ் லோடு ஏற்றிக்கொண்டு வந்த லாரி, சாலையோரம் நின்ற லாரி மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்த லாரி, முன்னால் நின்ற மினி லாரி மீது மோதியது.

இதற்கிடையில் அரியானா மாநிலத்தில் இருந்து வீட்டு உபயோக பொருட்களை ஏற்றி வந்த மற்றொரு லாரி, விபத்தில் சிக்கிய இந்த 3 லாரிகள் மீதும் மோதியதுடன், அதே வேகத்தில் சாலையில் கவிழ்ந்தது. அடுத்தடுத்து சங்கிலி தொடர்போல் லாரிகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதில் 4 லாரிகளும் சேதம் அடைந்தன.

இந்த விபத்தில் லாரியில் இருந்த வார்னிஷ் டின்கள் சாலையில் உருண்டோடின. மற்றொரு லாரியில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் சாலையில் விழுந்து நொறுங்கின. இதில் வார்னிஷ் லோடு ஏற்றி வந்த லாரி டிரைவர் கொக்கா வாகிம்(வயது 24), கிளீனர் ஜம்மர் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். உடனடியாக இருவரையும் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்தவந்த செங்குன்றம், மாதவரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், விபத்தில் சிக்கிய 4 லாரிகளையும் அப்புறப்படுத்தினர். இதுபற்றி மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் அலமேலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமணபாபு, குமரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இந்த விபத்தின்போது சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து போலீசார் இல்லை என கூறப்படுகிறது. இதனால் நள்ளிரவு முதல் அதிகாலை வரை சுமார் 6 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × four =