மாணவர்கள் இல்லாத தமிழ்ப்பள்ளி மாற்று இடத்தில் செயல்படும்

ஒரு மாணவர்கூட இல்லாத சுங்கை தீமா தமிழ்ப்பள்ளி எதிர்நோக்கும் பிரச்சினையை தாம் தெலுக் இந்தான் நாடாளுமன்ற தேசிய முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் என்னும் நிலையில், காலம் கடத்தாமல், மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனிடம் கொண்டுச் சென்று தீர்வு காணப்படும் என நேற்று முன்தினம் நடைபெற்ற சுங்கை தீமா தோட்ட ஆலயத் திருவிழாவில் கலந்து கொண்ட பின் மஇகா உதவித் தலைவருமான டி.முருகையா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் ஒரு தமிழ்ப்பள்ளியும் மூடப்படாது. அப்படியே மாணவர் இல்லாத தமிழ்ப்பள்ளிக்கு மாற்றாக அதன் பெயரிலேயே இந்திய சமூகத்தினர் அதிகம் வசிக்கும் இடத்திற்கு கொண்டுச் செல்லப்படுமே தவிர, ஒரு தமிழ்ப்பள்ளியும் மூடும் அபாயம் வராது என்று மஇகாவின் முருகையா சூளுரைத்தார்.
இந்நிலையில், சுங்கை தீமா தமிழ்ப்பள்ளியில் ஒரு மாணவர்கூட பயிலாத நிலையில், இந்தியர்கள் அதிகம் வசிக்கும் இடமான லங்காப் சிற்றூருக்கு அப்பள்ளியை மாற்றுவது குறித்து விக்னேஸ்வரனிடம் எடுத்துரைப்பேன். இதில் லங்காப் இந்தியர்களின் ஆர்வத்தையும் கேட்டு அறிந்துள்ளேன் என்றார் அவர். மேலும், லங்காப்பில் தமிழ்ப்பள்ளி அமைவது குறித்து மொழி ஆர்வலர்களும் விரும்புகின்றனர்.
தோட்டப்புறங்களில் உள்ள இந்தியர்கள் வேறு வேலை தேடி நகர்ப் புறங்களுக்கு குடி பெயர்ந்துள்ளனர். அதுவே, சுங்கை தீமா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இன்றி இருப்பதற்கு முக்கியக் காரணமாகவும் உள்ளது என்றும் முருகையா குறிப்பிட்டார்.
நாட்டில் மாணவர்கள் இல்லாத மூடப்பட்ட சில தமிழ்ப்பள்ளிகளை அதன் பெயரிலேயே மாற்று இடத்தில் அரசு வழங்கிய நிலத்தில் நவீன பள்ளியாகவும் இன்று தலைநிமிர்ந் துள்ளதை இந்திய சமூகம் பார்க்கிறது என்பதை மறுக்கவியலாது என்றார் முருகையா. சுங்கை தீமா தமிழ்ப்பள்ளி பிரச்சினைக்கு நாளையே தீர்வு காணமுடியும் என்று கூறினால், அதில் உண்மையில்லை. சட்ட ரீதியாக கல்வி அமைச்சு முறையாக செயல்படும் என்று முருகையா சுட்டிக்காட்டியுள்ளார். அதுவரையில் பொறுமையைக் கடைப் பிடிப்போம் என்று முருகையா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + seven =