மாணவன் தனுஷ் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வேண்டும்- அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரும் புதிய சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நாளை நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அந்த சட்டத்திற்கு எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து விட்டோம் என்பதுடன் கடமையை முடித்துக் கொள்ளாமல் மத்திய அரசுக்கு தொடர் அழுத்தம் கொடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளிலுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அனைத்து வழிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி ஒத்துழைக்கும்.நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் தனுஷின் குடும்பத்திற்கு அனிதா தற்கொலை உள்ளிட்ட நிகழ்வுகளில் வழங்கப்பட்டதைப் போன்று ரூ.7 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ற அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அதே நேரத்தில் நீட் தேர்வுக்கு அஞ்சி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − 5 =