மலேசிய செம்பனை எண்ணெயை வாங்க சீனா திட்டமிட்டுள்ளது

எதிர்வரும் 2023 வரை மலேசியாவிலிருந்து 1.7 மில்லியன் டன் செம்பனை எண்ணெயை வாங்க சீனா தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக டத்தோ ஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசின் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மலேசியாவிற்கு வருகை புரிந்திருக்கும் சீனப் பிரதிநிதி வாங் யீயுடனான சந்திப்பிற்கு பிறகு இச்செய்தியை அறிவித்தார். 2023ஆம் ஆண்டு வரை 1.7 மில்லியன் டன் செம்பனை எண்ணெயை வாங்க முனைப்பு காட்டிய சீனாவின் உறுதிபாட்டை பாராட்டுவதாக அவர் மேலும் கூறினார்.
2017ஆம் ஆண்டில், மலேசியா ரி.ம9.42 பில்லியன் மதிப்புள்ள 2.87 மில்லியன் டன் செம்பனை எண்ணெயை சீனாவுக்கு ஏற்றுமதி செய்தது. இதோடு, தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகள் வீழ்ச்சியடைந்த பின்னர், 2019இல் செம்பனை எண்ணெய் சார்ந்த விவசாய பொருட்களின் ஏற்றுமதியும் 17.8 சதவீதம் அதிகரித்தது.
மலேசிய செம்பனை எண்ணெய் சங்கத்தின் கூற்றுபடி சீனாவிற்கான மலேசிய செம்பனை எண்ணெய் ஏற்றுமதி 438,747 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. இவ்வெண்ணிக்கையின் படி ஜனவரி முதல் ஆகஸ்ட் 2020 வரையிலான மொத்த சீன நாட்டிற்கான செம்பனை எண்ணெயை ஏற்றுமதியானது 1,848,433 மொட்ரிக் டன்னாக உயர்ந்திருப்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
சீன வெளியுறவு அமைச்சருடனான இரண்டு மணி நேரம் சந்திப்பில் மலேசியா மற்றும் சீனா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சீனா ஒப்புக் கொண்டதாக ஹிஷாமுடின் கூறினார். சுற்றுச்சூழல் இயல்பு நிலைக்கு திரும்பும்போது பெய்ஜிங்கிற்கு வந்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தனிப்பட்ட முறையில் கையெழுத்திடுவேன் என அவர் கூறியதாக ஹிஷாமுடின் சுட்டிக் காட்டினார்.
கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட பிற முடிவுகளில் இரு நாடுகளுக்கிடையேயான வணிக மற்றும் உத்தியோகப்பூர்வ பயண எல்லைகளை எளிதாக்குவதோடு புதிய பயண பாதை பற்றிய விவாதங்களை தொடர இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டதையும் ஹிஷாமுடின் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − eleven =