மலேசிய சமூகநல மறுமலர்ச்சி இயக்கம் (அரிமா) ‘அறம் செய்வோம்’ பணியைத் தொடங்கியது

மலேசிய இந்தியர்களின் நலன் காக்க அமைக்கப்பட்டிருந்த மலேசிய சமூகநல மறுமலர்ச்சி இயக்கம் (அரிமா) நேற்று முன்தினம் தனது முதல் கூட்டத்தை தொடங்கியது. அதற்கு முன்னதாக அதன் அலுவலக திறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இக்கூட்டத்திற்கு மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்திய சமுதாயத்தில் பல சிறந்த தலைவர்கள் ஒதுங்கி இருப்பது வருத்தம் அளிக்கின்றது.
அவர்களெல்லாம் மீண்டும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து இந்திய சமுதாயத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்பதற்காகவே இது அமைக்கப்பட்டதாக அதன் தேசிய தலைவர் செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் பா. தியாகராஜன் தனது தலைமை உரையில் குறிப்பிட்டார்.
கூட்டம் தொடங்கப்பட்ட பொழுது, அண்மையில் காலமான ஜொகூர் மாநில அரிமா தலைவர் முருகையாவுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அரிமாவின் துணைத் தலைவராக முன்னாள் மேலவை உறுப்பினர் டத்தோ பாராட்மணியம் நியமிக்கப்பட்டார். முன்னாள் துணை அமைச்சர் டத்தோ சோதிநாதன், மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ முருகேசன், மலாக்கா மாநில புக்கிட் கட்டீல் முன்னாள் தலைவர் டத்தோ பேசில் ஆகியோர் உதவித் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
மேலும், மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் பிரகாஷ் ராவ் அரிமாவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். துணைச் செயலாளராக சுங்கை பூலோ ஆசிரியை தமிழ்வாணி கருணாநிதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வியக்கத்தின் செயல்திட்டம், கொள்கை ஆகியவற்றின் விளக்கத்தை அதன் உதவித் தலைவர் டத்தோ முருகேசன் கூட்டத்தில் சமர்பித்தார். விரிவான கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின் அதன் முடிவு அடுத்த கூட்டத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.


அரிமாவின் பினாங்கு மாநிலத் தலைவராக டத்தோ ஹென்றி ஆசிர்வாதம், பேராக் தலைவராக கன்னிமுத்து, நெகிரி செம்பிலான் தலைவராக டத்தோ கனகராஜா, ஜொகூர் தலைவராக டாக்டர் கன்னியப்பன், கூட்டரசுப் பிரதேச தலைவராக ஜேம்ஸ் செல்வராஜா ஆகியோருடன் சிலாங்கூர் மாநில ஒருங்கிணைப்பாளராக சம்பந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, இவ்வியக்கத்தின் நாடு தழுவிய நிலையில் சந்திப்பு கூட்டங்கள் நடத்தப்படும். ‘அறம் செய்வோம்’ எனும் கருப்பொருளுக்கு ஏற்ப அதன் சேவையை இந்திய சமுதாயத்திற்கு சிறப்பாக வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என ஓம்ஸ் பா. தியாகராஜன் கூறினார்.
கூட்டத்தில் டத்தோ பாராட்மணியம் மற்றும் டத்தோ சோதிநாதன் செயல்படுத்தக்கூடிய சிறந்த கருத்துகளை கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here