மலேசிய இந்தியர்களும் அரசியல் சூழலும்

இன்று மலேசிய இந்தியர்களின் அரசியல் நிலைத்தன்மை என்பது “பூனைக்கு யார் மணி கட்டுவது“ என்ற நிலையில் உள்ளதை யாவரும் அறிவர். பல்வேறு போராட்டங்களை கடந்து வந்த இந்திய சமூகம் மீண்டும் தனது பயணத்தில் ஒரு சர்ச்சையான காலப்பகுதியில் சிக்கியுள்ளது. ஒவ்வொரு முறையும் இந்தியர்களுக்கு வெற்றியை கொண்டு வர பலரும் பெரும் முயற்சிகளை செய்ய வேண்டியுள்ளது என்பதே உண்மையாகும். தொடக்கக் காலத்தில் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களின் சம்பளத்தை சமன் படுத்துவதற்கு “மத்திய மலாயா இந்திய சம்மேளனம்” போராட்டத்தில் இறங்கியது. இதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். ஜப்பானியர் காலத்தில் நேதாஜியுடன் இணைந்தும் கம்யூனிஸ்டு இயக்கத்தின் மூலமும் மலாயா நாட்டின் விடுதலைக்கு இந்தியர்கள் போராடியதை சரித்திர குறிப்புகள் காட்டுகின்றன. ஆனால், இந்த போராட்டங்கள் விரிவாக வரலாற்று நூல்களில் பதிவு செய்யப்படவில்லை என்பது உண்மையாகும். சுதந்திர மலேசியாவில் முதல் போராட்டம் தோட்டத் துண்டாடல் ஆகும். அரசு கடன் நிதி கொடுத்து தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தைத் தோற்றுவிக்க உதவியதுடன் நின்று கொண்டது, அடுத்து குடியுரிமை மற்றும் வேலை பெர்மிட் பிரச்சினை தலைத் தூக்கியது. இந்தப் பிரச்சினை இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இடம் கொடுத்துவிட்டு தோட்டங்களை விட்டு வெளியேறி புறம்போக்கு குடியிருப்புகளில் குடியேறி அங்கேயும் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி இன்னும் மீளமுடியாமல் இந்தியர்கள் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அடுத்து தமிழ்ப்பள்ளிகளும் ஆலயங்களும் தோட்டப்புற நிலங்களில் அமைந்து மக்கள் வெளியேறியப் பிறகு பதிப்புக்குள்ளாகியுள்ள சிக்கலையும் அனைவரும் அறிவர். ”இண்ட்ராஃப் இயக்கம்“ மூலம் ஒருநாள் தலைநகருக்கு திரண்டு வந்த இந்தியர்கள் தங்களுடைய விரக்தியையும் கையறு நிலையையும் அரசாங்கத்திற்கும் உலகிற்கும் உணர்த்தினர். இதனால், அரசு தமிழ்ப்பள்ளிகளுக்கான மேம்பாட்டுக் குழு, பொருளாதார முன்னேற்றக் குழு, அமைச்சரவை நிலையிலான குழு என்று இந்தியர்களுக்கான குழுக்களை நிறுவினர், ‘நீலப் புத்தகம்’ போன்ற திட்டமும் போடப்பட்டது. ஆனால் அமுலாக்கமும் இதன் வழி இந்தியர்கள் பெற்ற பயன்களையும் தெளிவாக காணமுடியவில்லை. இன்றைய சூழலில் இந்தியர்கள் பல அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டு போராட்டக் களத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். தங்கள் உணர்வுகளுக்காக போராடப்போவது ஒரே இனத்தைச் சார்ந்த கட்சிகளா அல்லது பல்லின கட்சிகளா என்ற நிலைப்பாடுதான் அது. ஒரே இனத்தின் கட்சிகள் என்று பார்க்கும்போது இந்தியர்கள் குறைந்தது மூன்று கட்சிகளாகப் பிரிந்துள்ளதைக் காண முடிகின்றது. மற்ற முதன்மைக் கட்சிகள் இக்கட்சிகளைத் தங்களுடைய தோழமைக் கட்சிகளாக ஏற்றுக் கொள்ளும்போது எண்ணிக்கையை முக்கியமாகப் பார்க்கின்றனர். அதே வேளையில் இந்தியர்களின் வாக்குகளைக் கொண்டு வந்து சேர்ப்பார்களா என்ற கேள்விகளையும் கொண்டுள்ளனர். மேலும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளில் பெரிய எண்ணிக்கையை வாக்காளர்களாகக் கொண்ட தொகுதிகளும் மிகக் குறைவே. எனவேதான் பெரும்பலத்தைக் கொண்ட சில ஒரே சமூகத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட கட்சிகள் இந்தியர்களைப் பற்றிய எண்ணங்களைப் பெரிய அளவில் கொண்டிருக்கவில்லை. இந்தப் பெரிய சமூகத்தினரைப் பிரதிநிதிக்கும் தலைவர்களும் தொடக்க கால வரலாறுகளைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்துக் கொள்ளாததால் நமது இந்தியர் கட்சிகளின் போராட்டங்களையும் தியாகங்களையும் அறிந்து கொள்ளாமலேதான் தங்களுடைய முடிவுகளை எடுக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்துதான் பேரம் நடத்துகின்றனர். இந்த சூழ்நிலையால் இந்தியர்களின் ஒரே இனத்தைச் சார்ந்த கட்சிகள் தனது நிலைப்பாட்டினை நிலைநிறுத்துவதில் சிரமங்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது, ஆனால், பல்லின கட்சிகள் தங்களுடைய உறுப்பினர்களாக இந்தியர்களும் இருக்கின்ற காரணத்தினால் அவர்களுடைய எண்ணங்களை கருத்தில் கொள்வது இயல்பாக அமையும் என்றும் கருதலாம். இதிலும் ஒரு சிக்கல் இருப்பதை உணர முடிகிறது. யாதெனில், இதில் இந்தியர்களைப் பிரதிநிதித்து இடம் பெற்றிருக்கும் தலைவரானவர் எந்த அளவிற்கு இந்திய சமூகத்தினரிடையே செல்வாக்குப் பெற்றவராக விளங்குகிறார் என்பதேயாகும். இந்தியர்களிடமும் மற்ற இனத்தவரிடமும் ஒருங்கே மதிப்பும் மரியாதையும் பெற்ற பல்லின கட்சியின் இந்தியத் தலைவர்கள் மட்டுமே இந்தப் பல்லினக் கட்சிகளில் இந்தியர்களின் உரிமைகளை நிலைநாட்ட முடியும். மேலும் இதிலும் எண்ணிக்கையை வைத்தே தொகுதிகளும் பதவிகளும் வழங்கப்படுவதையும் வழக்கமாகக் கொள்ளலாம் என்பது உண்மையாகும். எனவே ஆளுமையுடைய தலைவர்கள் மட்டுமே பல்லினக் கட்சிகளில் இந்தியர்களின் குரலாக விளங்க முடியும் என்பது உண்மையாகும். தற்போது இன்று நாட்டில் நிலவி வரும் அரசியல் சூழலில் இந்தியர்கள் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க வேண்டுமானால் இந்தியர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அனைவரின் நம்பிக்கைக்கும் பாத்திரமான ஆளுமை நிறைந்த ஒரு தலைவர் இந்த முயற்சியை முன்னெடுப்பது அவசியமாகின்றது. இந்தியர்களின் பிரச்சினைகளை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்ற நிலையில் விவாதிக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதை அனைவரும் உணர்வார்கள். எனவே, இந்திய சமூகம் தொடர்ந்து ‘பூனைக்கு யார் மணி கட்டுவது’ என்று காத்திராமல் விரைந்து நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இந்தியர்களின் அரசியல் நிலைப்பாடு சிறப்பானதாக அமையும் என்பதை நிச்சயமாக நம்பலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + nine =