மலேசியாவில் அவசரகாலப் பிரகடனங்கள்!

நாட்டில் அவசரகாலங்கள் போர், பொது அமைதிக்குப் பங்கம், அரசியல் இழுபறிகள், தேசிய பேரிடர் காலங்களில் பிரகடனப்பட்டுத்தப்பட்ட வரலாறு உண்டு.
நாட்டின் வரலாற்றில் மலாயன் தேசிய விடுதலை ராணுவத்தின் போராட்ட (எம்எம்என்எல்ஏ) காலத்தில் விதிக்கப்பட்ட அவசர காலமே மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது.

கம்யூனிஸ்ட் ஊடுருவல் (1948-1960)
இக்காலகட்டதில் விதிக்கப்பட்ட அவசர காலம் முதலில் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தபோது, அதன் பின்னர் வந்த மலாய் ஆட்சிக்கும் அளப்பரிய அதிகாரங்களை வழங்கி பல அரசியல் கட்சிகளை முடக்கி, கம்யூனிச சக்திகளைக் கைது செய்ய வைத்தது.
மலாயாவின் முதல் பொதுத்தேர்தல் 1959ஆம் ஆண்டு ஆகஸ்டிலும், முதலாவது நாடாளுமன்ற அவை 1959ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் முதன்முறையாகக் கூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. மலேசியாவுக்கு எதிரான இந்தோனேசியாவின் போராட்டம் (1964) நாட்டுக்கு எதிராக சபா விவகாரத்தில் இந்தோனேசியா மலேசியாவின் மீது போர் பிரகடனம் செய்ததை எதிர்கொள்ள அப்போதைய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவசரகாலத்தைப் பிரகடனம் செய்தார்.
1964ஆம் ஆண்டு அவசரகால(சிறப்பு அதிகாரம்) சட்டம் நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டு, சொத்துகளைப் பறிமுதல் செய்யவும், தேடுதல் நடவடிக்கைகளை நடத்தி கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரம் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் 1964 அவசரகால கிரிமினல் சட்டத்தின்படி சதிச் செயல்களில் ஈடுபட்டோரை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க அதிகாரம் தரும் வகையில் சட்டம் வகுக்கப்பட்டது.


சரவாக்(1966)
சரவாக்கின் முதலமைச்சராக இருந்த ஸ்டீபன் காலோங் நிங்கானை பதவியிலிருந்து அகற்ற அரசு 1966 செப்டம்பர் 14ஆம் தேதி அவசரகாலத்தைப் பிரகடனப்படுத்தியது.
மத்திய அரசாங்கம் சரவாக்கிற்காக புதிய சட்டம் ஒன்றை இயற்றி, ஆளுநர் முதலமைச்சரின் ஆலோசனை இல்லாமலேயே மாநில மன்றத்தைக் கூட்டி, அவர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை அளித்தது.

மே கலவரம்(1969)
1969 மே 10ஆம் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலுக்குப் பின்னர் இனக் கலவரத்தை ஒடுக்க அரசு அவசரகாலத்தை அமல்படுத்தியது.
அதன் மூலம் 1969 சிறப்பு அவசரகால சட்டத்தின்படி, தேசிய நடவடிக்கை மன்றத்துக்கு நிர்வாக மற்றும் சட்டம் இயக்கும் அதிகாரத்தை வழங்கியது.
இச்சட்டத்தின் படி கலவரத்தை உருவாக்குவதாக நம்பப்படும் நபர்களைக் கைது செய்து விசாரணை இன்றி தடுத்து வைக்க அதிகாரம் வழங்கப்பட்டது.
அதன் பின்னர், தேர்தல் நடந்து ஈராண்டுகளுக்குப் பின்னர், 1971 பிப்ரவரி 20ஆம் தேதியில்தான் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது.

கிளந்தான்(1977)
கிளந்தான் மந்திரி பெசார் முகமட் நாசிர் தமது பதவியை விட்டு அகல மறுத்த பின்னர், அப்பிரச்சினையைத் தீர்க்க அங்கு 1977ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அவசரகாலம் பிறப்பிக்கப்பட்டது.
1977ஆம் ஆண்டு கிளந்தானுக்கான சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டு, சிறப்புச் செயற்குழுவின் இயக்குநருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டதோடு சுல்தானுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்பட்டது.
அதன்படி 1978ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் நடக்கும் வரை முகமட் கிளந்தான் மந்திரி பெசாராக பதவி வகிக்க அனுமதியளிக்கப்பட்டது.

புகைமூட்டம்
(1997, 2005, 2013)
நாட்டில் அமல்படுத்தப்பட்ட அவசரகால அறிவிப்புகள் யாவும் சட்டமியற்றும், நிர்வாக அதிகாரத்தை வழங்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.
1997, 2005, 2013 ஆகிய ஆண்டுகளில் புகைமூட்டம் காரணமாக சரவாக், சிலாங்கூர், ஜொகூர் ஆகிய மாநிலங்களில் அவசரகாலம் பிறப்பிக்கப்பட்டது.
அந்தக் காலகட்டங்களில், மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாமென்றும் அத்தியாவசிய சேவைகள் நிறுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × three =