மலேசியர்கள் மத்தியில் குடியுரிமையின்றி வாழ்ந்து கொண்டிருப்பதற்கு வெட்கப்படுகிறேன்

இந்த நாட்டில் பிறந்தும் நாடற்றவர்களின் வரிசையில் தன்னை ஒரு மலேசியர் என்று அழைத்துக் கொள்ள முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு வெட்கப்படுகிறேன் என்று இங்குள்ள தாமான் பாஜார் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஜேம்ஸ் என்ற நல்லதம்பி அந்தோணி (அ.எண் 480306-08-5023) தமிழ் மலரிடம் தெரிவித்தார்.
தனக்கு 72 வயது நிறைந்துள்ள நிலையில், கடந்த 50 ஆண்டுகளாக பிறந்த நாட்டில் குடியுரிமைக்காக பலமுறை மனு செய்துள்ளேன். ஆனால், இன்றுவரை குடியுரிமை வழங்க அரசாங்கம் மறுத்து வருகிறது என்றார் நல்லதம்பி.
இதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது, கடந்த 1970 ஆம் ஆண்டு தஞ்சோங் மாலிம் மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தால் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டு ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தது தான் என்று நல்லதம்பி கூறினார்.
அந்தக் காரணத்தைக்கூறி கடந்த 50 ஆண்டுகளாக தனக்கு சட்ட ரீதியாக வழங்க வேண்டிய குடியுரிமையை வழங்க மறுத்து வருவது தம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என அவர் குறிப்பிட்டார்.
நாட்டுக்காக பல நல்ல காரியங்களை செய்து வருகிறேன். முறையாக வருமானவரியும் செலுத்தியுள்ளேன். மாவட்ட மருத்துவமனைக்கு தேவை ஏற்பட்டால் இரத்த தானமும் வழங்கி வருகிறேன் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குடியுரிமை வைத்துள்ளவர்கள் குற்றவியல் காரணமாக தண்டனை பெற்றவர்களுக்கு கொடுத்த குடியுரிமையை அரசாங்கம் மீட்டுக்கொண்டதா? சட்ட ரீதியாக முடியாது என்பதே உண்மையாகும் என்றார் அவர்.
என் போன்ற பிரச்சினையுடன் இருக்கும் நம் சமூகத்தினர் குடியுரிமை பெறும் வாய்ப்பினை புதியக்கொள்கைகள் மூலம் தடுக்கப்படுவது ஏன்? என்றும் நல்லதம்பி அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், என் குடும்பத்தில் மனைவி மற்றும் பிள்ளைகள் அனைவருக்கும் குடியுரிமை உண்டு. அந்நிலையில், சொந்த குடும்பத்தில் சிவப்பு அடையாள ஆவணத்துடன் வாழ்வது ஓர் அவமானச் சின்னமாகவும் கருதுகிறேன் என அவர் கூறினார்.
உள்துறை அமைச்சரிடம் சமர்ப்பித்த குடியுரிமைக்கான மனுவை ஏற்றுக் கொண்டு, தம்முடைய நீண்டகால பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்று நல்லதம்பி பணிவுடன் கேட்டுக்கொண்டார்.
தொடர்புக்கு : 016 489 2733 நல்லதம்பி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − three =