மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் தமிழர்களின் உரிமை ஈப்போ கலை விழாவின் கலைமொழி மந்திரம்

மனித உரிமை என்பது ஒவ்வொரு மனிதருக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை. விட்டுக் கொடுக்க இயலாத வாழ்வியல் உரிமை. விட்டுக் கொடுக்க முடியாத குடிசார் உரிமை. அதுவே மனிதர்கள் மனிதர்களாக வாழ அடித்தளம் போடும் ஆணிவேர் உரிமை. இனம், மதம், சாதி, சமயம்; உயர்வு தாழ்வு; வெள்ளைத் தோல்; கறுப்புத் தோல்; மஞ்சள் தோல்; மாலைத் தோல்; இப்படி எல்லாவற்றையும் தாண்டிப் போகும் ஓர் அடிப்படை உரிமை. அந்த வகையில் தமிழர்களின் தாய்மொழி உரிமை என்பது அவர்களின் தமிழ்மொழி உரிமை. தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் சரி; தாய்மொழி உரிமையே அவர்களின் தனிச் சிறப்பு உரிமை. அந்த உரிமைக்கு உயிர் கொடுக்க உலகத் தமிழர்கள் இன்று வரை போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இங்கேயும் எங்கேயும் அந்த உரிமைப் போராட்டம் தொடர்கிறது. ஒன்றை மட்டும் ஆழமாய் நினைவில் கொள்வோம். நம் நாட்டைப் பொறுத்த வரையில் தமிழ்ப்பள்ளிகளே தமிழர்களின் அடையாளம். அந்த வகையில் தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தமிழ் மொழியைத் தாயாக மதிக்க வேண்டும். தரணி போற்றும் மொழியாகத் தரம் உயர்த்திக் காட்ட வேண்டும். இதையே ஒரு சவாலாகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும். சரி. தமிழர்களின் கலைப் பண்பாட்டு விழாக்கள் மூலமாகவும் தமிழ் உணர்வை வளர்க்கலாம். தெரியும் தானே. தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முறையான அங்கீகாரம் வழங்கி அவர்களுக்குச் சிறப்புகள் செய்வதன் மூலமாகவும் தமிழை வளர்க்கலாம். வெளியுலகத்திற்கு அடையாளப் படுத்தி அவர்களை மேலும் மேலும் உற்சாகப் படுத்தலாம். நல்ல பலன்கள் கிடைக்கும்.

ஒரு கிண்ணத்தில் ஒரு திரி. மங்கி வருகிறது. அதைச் சன்னமாய்த் தட்டிப் பாருங்கள். கொஞ்ச நேரத்தில் அந்தத் திரி பிரகாசமாய் ஒளிரத் தொடங்கும். அந்த மாதிரி தான் நம்முடைய தமிழ்ப்பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் தட்டிக் கொடுங்கள். மேலும் மேலும் அழகாய்த் துளிர் விடுவார்கள். மேலும் அழகாய் மிளிர்வார்கள். அந்த வகையில் மலேசியத் தமிழர்களின் கலை, மொழி, பண்பாடு போன்றவற்றை முந்நிலைப் படுத்தி ஈப்போவில் முப்பெரும் விழா நடைபெறுகின்றது. இது ஒரு பண்பாட்டு விழா. தமிழ்ப்பள்ளிகளில் முதலாமாண்டு மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஒரு தூண்டுதல் நிகழ்ச்சியாகவும் இந்த விழா அமையலாம் அல்லவா. மறைமுகமான ஒரு நல்விளைவு பூக்கலாம். அப்படியும் பார்க்கலாம் அல்லவா. எதிர்மறையாகப் பார்ப்பதையும் தவிர்க்கலாம் அல்லவா. தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனைச் சான்றுகளை மக்களுக்கு உணர்த்துவது ஒரு புறம் இருக்கட்டும். நம்பிக்கையோடு குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்ப ஊக்கமளிப்பது மற்றொரு புறம் உள்ளது என்கிறார் ஈப்போ முப்பெரும் விழா ஒருங்கிணைப்பாளர் பி.கே.குமார். இந்தப் பண்பாட்டு விழாவில் ஆசிரியர்கள் சிலர்; மாணவர்கள் பலர் பாராட்டு செய்யப் படுகின்றார்கள். விருதுகளும் சான்றிதழ்களும் பெறுகின்றார்கள். சொல்லி இருக்கிறேன். இளம் வயதிலேயே மாணவர்களுக்கு மிகச் சரியான மதிப்பு வழங்க வேண்டும். அவர்களின் தேவைகளுக்கு மிகச் சரியான முக்கியத்துவம் வழங்க வேண்டும். மாநில தேசிய அனைத்துலக ரீதியில் விருது பெற்றவர்களுக்கு மிகச் சரியான அங்கீகாரத்தை வழங்க வேண்டும். அப்படியே அவர்களை இந்த நாட்டில் சாதனை மொட்டுக்களாக மிளிரச் செய்ய வேண்டும். ஏற்பாட்டாளர்கள் நல்ல நோக்கத்துடன் முன்னெடுப்புச் செய்கிறார்கள். இந்த முப்பெரும் விழா, பேராக் மாநில அளவில் நடைபெறுகிறது. விருது பெறும் ஆசிரியர்களை ஒவ்வொருவராக அறிமுகம் செய்து வருகிறோம். இந்தக் கட்டுரையை எழுதும் வரையில் விவரங்களை அனுப்பி வைத்தவர்களின் தகவல்கள் இடம் பெறுகின்றன.

இதுவரையில் 1. தாப்பா ரோட், கீர் ஜொஹாரி தமிழ்ப்பள்ளி ஆசிரியை ரூபா ராஜேந்திரன்; 2. பேராக் கமுந்திங் மகேந்திரன் நவமணி; 3. குரோ தமிழ்ப்பள்ளி ஆசிரியை சீத்தாலக்சுமி பாலு; 4. தெலுக் இந்தான் சிதம்பரம் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் திருவேந்தன் பாலகிருஷ்ணன்; 5. சிம்மோர் தோட்டத் தமிழ்ப் பள்ளி ஆசிரியர் அசோக் பிள்ளை; 6. ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு (2) தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சிவகுமார் ஆறுமுகம் ஆகியோரை அறிமுகம் செய்துள்ளோம். அந்த அறிமுகத்தில் அடுத்து வருபவர் திருமதி ஏசுமரியாள். டோவன்பி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக் கல்வி. தொடர்ந்து டத்தோ ஹாஜி அப்துல் வஹாப் இடைநிலைப் பள்ளி; தொக் மூடா அப்துல் அஜிஸ் இடைநிலைப் பள்ளி. பின்னர் சுல்தான் அப்துல் ஹலிம் ஆசிரியர் கல்லூரியில் பயிற்சி. ஓ.யூ.எம். பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் இளங்கலைக் கல்வி. 1993-இல் மலாயா தோட்டத் தமிழ்ப் பள்ளியில் ஆங்கில மொழி ஆசிரியராகப் பணி. தொடர்ந்து கெடா மாநிலத்தில் பெர்பாடானான் தமிழ்ப்பள்ளி; சுங்கை துகாங் தமிழ்ப்பள்ளி; துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி. பேராக் மாநிலத்தில் எங்கொர் தமிழ்ப்பள்ளி; டோவன்பி தமிழ்ப்பள்ளி. திருமதி ஏசுமரியாள் தற்போது சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். 27 வருடமாக பரந்த ஆசிரியர்ப் பணி அனுபவம். அனைத்துலகப் பசுமைத் திட்டப் புத்தாக்கப் போட்டி; தேசிய மற்றும் அனைத்துலக அளவில் திருமதி ஏசுமரியாள் சாதனை விருதுகள் பெற்றுள்ளார்.(CoMeL KIT).

 1. Pertandingan Inovasi PDPC STEM Maya 2020.
 2. Eco-Green Technology Honourable Innovation Competition 2020. சிறப்பான அடைவு நிலை. முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு நல்ல ஓர் எடுத்துக்காட்டாக அமைகின்றார். சபாஷ். வாழ்த்துகிறோம் சகோதரி. அடுத்து குமாரி மகேஸ்வரி வீரன். 1981-ஆம் ஆண்டில் துரோலாக் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் ஆரம்பக் கல்வி. பின்னர் டத்தோ சூல்கிப்லி முகமட் இடைநிலைப் பள்ளி. 1999-ஆம் ஆண்டு புத்ரா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பட்டப் படிப்பு. பின்னர் ராஜா மெலாவார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி. தெலுக் இந்தான் நடேசப் பிள்ளை தமிழ்ப்பள்ளியில் பணியைத் தொடங்கி இன்று வரை அறிவியல் ஆசிரியராக வலம் வந்து கொண்டு இருக்கிறார் மகேஸ்வரி வீரன். 2010-ஆம் ஆண்டு கல்வித் துறையில் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்தவர். 15 ஆண்டுகளாக, அவர் போதிக்கும் அறிவியல் பாடத்தில் யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் 100ரூ அடைவுநிலை. பேராக் மற்றும் பிற மாநிலங்களில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பட்டறை நடத்திய அனுபவம். கல்வி அமைச்சின் அறிவியல் பாடப் புத்தகக் குழுமத்தில் ஓர் உறுப்பினர். இரு முறை கல்வி இலாகாவால் சிறந்த சேவையாளர் விருது (APC) பெற்றுள்ளார். அண்மையில் கீழ்ப் பேராக் மாவட்டத்தின் 2020-ஆம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருதையும் பெற்றார் (Pingat Penghormatan Guru – PPG) மேலும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறந்த சாதனையாளர் 2020 (Global Inspiring Women’s Award) சான்றிதழைப் பெற்றார். மகேஸ்வரி வீரன் மேற்பார்வையில் மாணவர்கள் பங்கெடுத்த அனைத்துலக மற்றும் தேசிய அளவிலான போட்டியின் விவரங்கள்:

அனைத்துலகப் போட்டிகள்:

 1. மெய்நிகர் அனைத்துலகச் சுற்றுச்சூழல் போட்டி 2020 – வெண்கலம் (Virtual Intractive International Geopark Eco School Challenge 2020 – Bronze)
 2. உலக விண்வெளி மாதம் மலேசியா – தங்கம் (World Space Month Malaysia – Gold)
 3. அனைத்துலக அறிவியல் போட்டி – போகோர் இந்தோனேசியா – வெண்கலம் (International Science Competittion (ISC) 2019 Bogor Indonesia – Bronze)

தேசியப் போட்டிகள்:

 1. மலேசிய அறிவியல் போட்டி (எம்.எஸ்.சி) 2019 – 2 தங்கம், 3 வெள்ளி (Malaysian Science Competition (MSC) 2019 – 2 Gold, 3 Silver)
  ஆசிரியர்ப் பணியில் படிப்படியாகத் தன் திறமையை மாணவர்கள் வழி மெய்ப்பித்துக் காட்டி வருகிறார். சிறப்பான வளர்ச்சி. சபாஷ் சகோதரி மகேஸ்வரி வீரன். தமிழ் மொழிக்குத் தொடர்ந்து சேவை செய்யுங்கள்.
  அடுத்து வருபவர் நளினி ஜெயராமன். 20 ஆண்டுகால ஆசிரியர்ப் பணி. 2007; 2017-ஆம் ஆண்டுகளில் இருமுறை நனிசிறந்த ஆசிரியர் விருது (APC). ஆறு வருடங்கள் துணைத் தலைமையாசிரியர் பொறுப்பு.
  2015-ஆம் ஆண்டில் இருந்து தென் கிந்தா மாவட்ட தமிழ் மொழி முதன்மைப் பயிற்றுநர். பேராக் மாநில ரீதியிலான தமிழ் மொழி தேர்வுத்தாள் தயாரிப்புக் குழு உறுப்பினர். இந்தப் பாவனையில் நளினி ஜெயராமனின் செயல்பாடுகள் தொடர்கின்றன.

2020-ஆம் ஆண்டில் தமிழ் மொழி, அறிவியல், கணிதம் பாடங்களில் ஏழு பயிற்றிகளை நளினி ஜெயராமன் தயாரித்து உள்ளார். பயிற்றிகள் என்றால் மொடியூல் (Modul). கடந்த சில ஆண்டுகளாகத் தென் கிந்தா மாவட்டத்தில் அதிக அளவிலான தமிழ் மொழி, அறிவியல், கணித மின்கற்றல் துணைப் பொருள்களைப் பகிர்வு செய்து பலரின் கவனத்தை ஈர்த்தவர் என்கிற சிறப்பையும் பெறுகிறார்.மாநில ரீதியில் பேராக் தமிழ்ப்பள்ளி வலையரங்கத்தில் அறிவார்ந்த மின்கற்றல் துணைப் பொருள்கள் பகிர்வில் தம் படைப்புகளைப் பகிர்ந்து சிறப்பு செய்து உள்ளார் (Penceramah Weinar STPK).மலேசியப் புத்தாக்கம் கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றல் (Malaysia Innovation Invention & Creativity Assocation (MIICA) சங்கத்தின் பேராக் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் வலம் வருகிறார். போற்றக்கூடிய செயல்பாடுகள்.

இங்கிலாந்தில் லண்டன் சோஅஸ் பல்கலைக்கழகம். அந்தக் கழகத்தில் இணையம் வழி தமிழ் கற்பித்தல் வலையரங்கம். அதில் தம் மின்கற்றல் துணைப் பொருள்களைப் பற்றி பகிர்வு செய்தவர். இதனால் அனைத்துலக அளவில் பல்லாயிரம் தமிழ் மாணவர்கள் பலன் அடைந்து உள்ளார்கள். தேசிய, மாநில, மாவட்ட அளவில் மாணவர் முழக்கம், பேச்சுப் போட்டி, புதிர்ப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாடல் போட்டி போன்ற போட்டிகளில் மாணவர்களைப் பங்கெடுக்க ஊக்குவித்தவர். அது மட்டும் அல்ல. அவர்களை அரவணைத்து உற்சாகப் படுத்தி வெற்றி பெறவும் செய்து உள்ளார். மலேசியத் தமிழ் உலகம் கண்டு எடுத்த மற்றும் ஒரு தமிழ்மொழிச் சேவையாளர் நளினி ஜெயராமன். வாழ்த்துகிறோம் சகோதரி. தங்களின் தமிழ்ச் சேவை தொடர வேண்டும். அறிமுகம் செய்யப்பட்ட இந்தச் சாதனையாளர்கள்; பேராக் மாநில அளவிலான சாதனையாளர்களில் ஒரு பகுதியினரே. மேலும் பலர் இலைமறைக் காய்களாக உள்ளனர். இவர்களைப் போல மலேசியாவில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் பலர் உள்ளனர். கணக்கில் அடங்கா. ஒரு பனிமலையில் ஒரு சின்ன பனிக்கட்டியைத் தான் அறிமுகம் செய்து உள்ளோம். வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் நனிமிகு ஆசிரியர்களை அடையாளம் காட்டுவோம். பத்திரிகைச் செய்திகளையும்; ஊடகப் பதிவுகளையும் புரட்டிப் பாருங்கள். அண்மைய காலங்களில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக ரீதியில் பல அரிய பெரிய சாதனைகளை எல்லாம் செய்து வருகிறார்கள்.

தமிழ்ப் பள்ளிகளில் பயில்கின்ற மாணவர்களின் சாதனைச் சரித்திரங்கள், கடந்த பத்து ஆண்டுக் காலக் கட்டத்தில் அதிகரித்த வண்ணமாய் உள்ளன. தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் அயரா உழைப்பு; கற்றல் கற்பித்தலில் நவீன அணுகுமுறைகள்; அன்பு அரவணைப்புகள்; உற்சாகத் தூண்டுதல்கள் போன்றவை மாணவர்களின் சாதனைகளுக்கு அடித்தளமாக விளங்குகின்றன. இந்த ஆசிரியர்கள் மாணவர்கள் பாராட்டு விழா ஒரு பாரம்பரிய பண்பாட்டுக் கலைவிழா. இதை முப்பெரும் விழாவாகக் கருதித் தமிழைச் சுவாசிப்போம். தமிழ்ப் பள்ளிகளை நேசிப்போம். இந்த விழா மலேசிய தமிழர்ச் சங்க பேராக் கிளையின் ஏற்பாடு. தவிர பேராக் மாநிலத்தின் பல சங்கங்கள்; பல மன்றங்களின் ஆதரவுடன் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு வருகை தருபவர்கள் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றிச் செயல்பட வேண்டும் என ஏற்பாட்டுக் குழுத் தலைவி திருமதி க.விஜய தாமரை கேட்டுக் கொள்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் அனைவரும் ஆதரவு நல்க வேண்டும். இது ஒரு தமிழர் விழா. முத்தமிழ் மணக்கும் பாரம்பரிய பண்பாட்டுக் கலைவிழா.

(முற்றும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × two =