மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் ஈப்போ முப்பெரும் கலை விழா

மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் சரி; மலேசியத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் சரி; இந்த நாட்டில் அடுக்கடுக்கான சாதனைகளைச் செய்து வருகிறார்கள். அமெரிக்காவில் தங்க விருது; ஐரோப்பாவில் வெள்ளி விருது; ரஷ்யாவில் வைர விருது என்று விருதுகளை அள்ளிக் குவித்து வருகிறார்கள். இது மலேசியத் தமிழர்களுக்குப் பெருமை. இந்தியாவில் கணிம விருது; கனடாவில் கணினி விருது; கலிபோர்னியாவில் கூகுள் விருது; கொரியாவில் நுண்ணறிவு விருது. இப்படி அடுக்கடுக்கான விருதுச் சான்றுகளைக் குவித்துப் பிரமிக்க வைக்கின்றனர். இது உலகத் தமிழர்களுக்குப் பெருமை. மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் சாதனைகளை நம்பவே முடியவில்லை. நம்பால் இருக்கவும் முடியவில்லை. ஆனால் அதை மறுக்காமல் மறைக்காமல் போகவும் முடியவில்லை. சாதனைகள் படைக்கும் அனைவரும் நம் தமிழ்ப்பிள்ளைகள். நம் தமிழாசிரியர்கள். தமிழர் இனத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள். இதுவே எதிர்காலத் தமிழர்களுக்கு விட்டுச் செல்லும் சாசனம். மலேசியத் தமிழர்களின் கலை, மொழி, பண்பாடு, வணிகம், விளையாட்டு, கல்விக் கேள்விகளில் மீட்சி காண வேண்டும். வளர்ச்சியைக் காண வேண்டும். அவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டு ஈப்போவில் முப்பெரும் விழா நடைபெறுகின்றது. இந்த முப்பெரும் விழாவில் ஆசிரியர்கள் எண்மர்; முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள்; பாராட்டு பரிசுகள் நற்சான்றிதழ்கள் பெறுகின்றார்கள். மாநில தேசிய அனைத்துலக ரீதியில் விருது பெற்றவர்களுக்கு ஓர் அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்பதே இந்த விழாவின் தலையாய நோக்கம் ஆகும். இந்த நிகழ்ச்சியில் விருது பெறும் ஆசிரியர்களை ஒவ்வொருவராக அறிமுகம் செய்கிறோம். எனினும் அவர்களில் ஒரு சிலர்தான் தங்களின் விவரங்களை அனுப்பி வைத்து உள்ளார்கள். காலம் தாழ்ந்து அனுப்பி வைத்தர்களின் தகவல்கள் இடம் பெறாமல் போகலாம். பொறுப்பு ஏற்க இயலாது. நேற்றைய கட்டுரையில் பேராக், பத்தாங் பாடாங், கீர் ஜொஹாரி தமிழ்ப்பள்ளி ஆசிரியை ரூபா ராஜேந்திரன்; பேராக் கமுந்திங் மகேந்திரன் நவமணி ஆகிய இருவரையும் அறிமுகம் செய்தோம்.

அடுத்து வருபவர் சீத்தாலக்சுமி பாலு. பேராக், குரோ தமிழ்ப்பள்ளியின் ஆசிரியை. இவரின் தந்தையார் பாலு மாணிக்கம். கெடா, புக்கிட் ஜெனூன் தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியர். கடந்த 2020 ஆகஸ்டு மாதம் 29-ஆம் திகதி கனடாவில் நடைபெற்ற 5-ஆவது அனைத்துலகக் கண்டுபிடிப்பு புத்தாக்கப் போட்டி (5th International Invention Innovation Competition In Canada (iCAN 2020) எனும் போட்டியில் சிறந்த புத்தாக்கப் படைப்பாளராக சீத்தாலக்சுமி தெரிவு செய்யப் பட்டார். பெரிய விசயம். அதில் அவருக்கு (Award Winner of iCAN 2020) எனும் சிறப்பு விருது. இயங்கலை வழியாக சீத்தாலக்சுமி படைத்த தனித்துவமான கட்டுரைகளுக்குச் சிறந்த படைப்பிற்கான (Certificate of Appreciation for Excellent Presentation Of Innovation Project Paper) நற்சான்றிதழையும் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது. சிறப்பான பங்களிப்புகள் செய்துள்ளார். தொடர்ந்து சேவைகள் செய்ய வேண்டும். ஆசிரியை சீத்தாலக்சுமிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அடுத்து திருவேந்தன் பாலகிருஷ்ணன். பேராக், தெலுக் இந்தானில் பிறந்து வளர்ந்தவர். தொடக்கக் கல்வி சிதம்பரம் தமிழ்ப்பள்ளி. தற்சமயம் அதே பள்ளியில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியராகப் பணியாற்றுகிறார். உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தின் தோற்றுநர். தலைவர். தமிழாராய்ச்சி, தமிழ்க் கணிம ஆராய்ச்சியிலும் நடனத் துறையிலும் தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். சபாஷ்.

திருவேந்தன் பாலகிருஷ்ணன் பெற்ற விருதுகள்:

 1. ஆசிரியர் திலகம் – இணையத் தோழி, தமிழ்நாடு
 2. தமிழ்ச்செம்மல் – தமிழ்நாடு
 3. முத்தமிழ்ச் செல்வன் – இணையத் தோழி, தமிழ்நாடு
 4. லெமுரியா விருதாளர் – லெமுரியா கலைக்கழகம், தமிழ்நாடு
 5. இளம் நாவலர் – ஒளவைக் கோட்டம், தமிழ்நாடு
 6. மதிப்புறு முனைவர் – அனைத்துலகப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு
 7. முத்தமிழ் ஆசிரியர் விருது 2020, மதுரை முத்தமிழ் நாட்டுப்புறக் கலைகள் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு.
  திருவேந்தன் பாலகிருஷ்ணன் புத்தாக்கங்கள்:
 8. ஆசிரியம் செயலி – பிளாட்டினம் பதக்கம், மதுரை முத்தமிழ் கலைஞர் கழகம்
 9. அருந்தகை செயலி – தமிழ்நாடு
  2.1. தங்கம் பிலிப்பைன்ஸ்
  2.2. தங்கம் தமிழ்நாடு
  2.3. வெண்கலம் தாய்லாந்து
 10. சொற்குவியல் விளையாட்டு – வெள்ளிப் பதக்கம்
 11. பாவாணம் மின் நாள் பாடத்திட்டம் – வெள்ளிப் பதக்கம்

சிறப்பான செயலாக்கங்கள். திருவேந்தன் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நம் வாழ்த்துகள். அடுத்து அசோக் பிள்ளை. தந்தையார் குப்புசாமி. தாயார் மேகலா தேவி. இவர் 1989-ஆம் ஆண்டு தொடங்கி 1994-ஆம் ஆண்டு வரை சிம்மோர் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் ஆரம்பக் கல்வி. பின்னர் துவங்கு பைனுன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் டிப்ளோமா பட்டயம். ஓ.யூ.எம். பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம். 2005-ஆம் ஆண்டு உலு கெருன்தும் பூர்வகுடியினர் மலாய்ப் பள்ளி; 2005 – 2011 பூலோக் ஆகார் தமிழ்ப்பள்ளி; 2012 – 2014 ஈப்போ சீமி தமிழ்ப்பள்ளியில் சேவை. இறுதியாக அவர் படித்த அதே சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கே அசோக் பிள்ளை ஆசிரியராக வந்து சேர்ந்தார். பேராக் மாநிலம், மற்றும் பிற மாநிலங்களில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பட்டறை நடத்திய பரந்த அனுபவம் பெற்றவர் அசோக் பிள்ளை. கல்வி அமைச்சின் அறிவியல் பாடப் புத்தக குழுமத்தில் ஓர் அங்கத்தினர். 15 ஆண்டு காலமாக முருகன் நிலையத்தில் அறிவியல் பயிற்றுனர். 17 ஆண்டு காலம் அறிவியல் ஆசிரியர் சேவை. அறிவியல் ஆற்றலை மாணவரிடம் வளர்ப்பதைத் தன் தலையாயக் கடமையாக நினைக்கின்றார். 2008, 2016-ஆம் ஆண்டுகளில் கல்வி இலாகாவால் இரு முறை சிறந்த சேவையாளர் விருது (APC) பெற்றார். சபாஷ் அசோக் பிள்ளை. TEACHER of the YEAR 2020 – International Human Solidarity Day விருதையும் பெற்று உள்ளார். அனைத்துலகப் பசுமைத் திட்டப் புத்தாக்கப் போட்டியிலும் பல விருதுகளுக்குச் சொந்தகாரர். அவற்றில் சில:

 • தேசிய சுற்றுச்சூழல் நட்பு அறிவியல் விருது (ANUGERAH SAINTIS MESRA ALAM PERINGKAT KEBANGSAAN)
 • தேசிய பெர்காம் சிறப்பு விருது (ANUGERAH KHAS PERKAM PERINGKAT KEBANGSAAN)
 • தேசிய பசுமைத் திட்ட விருது (ANUGERAH GREEN TECHNOLOGY AWARD (GTA) PERINGKAT KEBANGSAAN)
 • வாழ்வது ஒருமுறை; வாழ்த்தட்டும் தலைமுறை. இதுதான் தனக்குப் பிடித்தச் சுலோகம்; தாரக மந்திரம் என்று கூறும் அசோக் பிள்ளை துடிப்பு மிக்க ஓர் இளைஞர். தன் ஆற்றல் திறமையைப் பல அறிவியல் ஆய்வுகளுக்குப் பயன்படுத்திப் பல விருதுகள் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இளம் அறிவியல் ஆசிரியர் அசோக் பிள்ளை அவர்களுக்கு நம் வாழ்த்துகள். அடுத்து சிவகுமார் ஆறுமுகம். 18 ஆண்டு காலம் ஆசிரியர் தொழில். தற்சமயம் ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப் பள்ளியில் மாணவர் நலப் பொறுப்பாசிரியர். ஐந்தாண்டுகள் முதன்மைப் பயிற்றுநராக மாவட்ட மாநில அளவில் பணி புரிந்து உள்ளார். பேராக், பினாங்கு, கெடா மாநிலங்களின் மாணவர்களுக்கு யூ.பி.எஸ்.ஆர். கணிதப் பட்டறைகளை நடத்தியவர். நம் நாட்டில் முதன் முதலாக ‘குழல் வலையொளி’ மூலமாக தமிழ் கணிதப் பாடங்களை இயங்கலை வழியாகக் கற்பித்த பெருமை இவரையே சாரும். சிவகுமார் ஆறுமுகம், 100-க்கும் மேற்பட்ட காணொளிகளைத் தயாரித்து உலகத் தமிழ் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி இருக்கிறார். பெரிய சாதனை. பாராட்டுகள். தவிர மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து கலைத்தமிழ் 2021 போட்டியையும் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார். அனைத்துலக ரீதியில் சிவகுமார் ஆறுமுகம் நிறைய விருதுகளைப் பெற்று உள்ளார்.
 1. TEACHER OF THE YEAR 2020,
  1.1 அனைத்துலகம் (இந்தியா), கல்வித்துறை (தமிழ் மொழி கணிதம்) 20 டிசம்பர் 2020
 2. BEST TEACHER CERTIFICATE 2020
  2.1 அனைத்துலகம் (The United Arab Emirates), கல்வித்துறை (தமிழ் மொழி கணிதம்) 25 டிசம்பர் 2020
 3. TEACHER AWARD OF EXCELLENCE
  3.1 அனைத்துலகம் (அமெரிக்கா), கல்வித்துறை (தமிழ் மொழி கணிதம்) 26 டிசம்பர் 2020
 4. TOP DILIGENT VIDEO CONTRIBUTOR
  4.1 மாநிலம், கல்வித்துறை (தமிழ் மொழி கணிதம்) 26 டிசம்பர் 2020
 5. TOP DILIGENT VIDEO CONTRIBUTOR
  5.1 மாநிலம், கல்வித்துறை (தமிழ் மொழி கணிதம்) மே 2020
 6. Sijil Penghargaan Sumbangan Video Pembelajaran
  6.1 மாநிலம், கல்வித்துறை (தமிழ் மொழி கணிதம்) 1 ஜுன் 2020
  சிவகுமார் ஆறுமுகம் அவர்களின் உழைப்பின் பயனாகப் பல்லாயிரம் மாணவர்கள் பலன் அடைந்து உள்ளனர். பல்லாயிரம் இதயங்களையும் கவர்ந்து உள்ளார். வாழ்த்துகள். அடுத்த கட்டுரையில் மேலும் ஆசிரியர்கள் சிலரை அறிமுகம் செய்கிறோம். அண்மைய காலங்களில் இணைய ஊடகங்களில் தமிழ்ப்பள்ளிகளின் சாதனைகள் மலேசியத் தமிழர்களை மட்டும் அல்ல; உலகத் தமிழர்கள அனைவரையும் புளங்காங்கிதம் அடையச் செய்கின்றன. இவற்றை எல்லாம் பார்க்கும் போது நம் மனக்கண் முன் முதலில் வருவது ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வுகள். தொடர்ந்து மாணவர்களின் விடா முயற்சிகள். அவற்றில் அவர்களின் கடும் உழைப்புகள். சவாலே சமாளி என்று ஒவ்வொரு சவாலையும் கனவில் சந்தித்து நனவில் சாதிக்கின்ற அவர்களின் திறன்பாடுகள். சத்தியமாகச் சொல்கிறேன். மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் சாதித்து விட்டார்கள். சாதித்தும் வருகிறார்கள். எல்லாமே விஸ்வரூப வெற்றிகள். மகிழ்ச்சி. மகிழ்ச்சி. தொடர்ந்து முன்னேறுங்கள். இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பி. கே. குமார். நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் திருமதி க. விஜயதாமரை. நல்ல பல சேவைகளைச் செய்து வருகிறார்கள். அவர்களுக்கும் வாழ்த்துகள். இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் அனைவரும் ஆதரவு நல்க வேண்டும். நாம் ஆதரவு வழங்கவில்லை என்றால் வேறு யார் வந்து வழங்குவார்கள்? நம் நிகழ்ச்சிகளுக்கு நாம் தான் முதலில் நின்று ஆதரவு வழங்க வேண்டும். இது ஒரு தமிழர் நிகழ்ச்சி. மலேசியக் கல்விச் சுவர்களில் பல அழகிய வர்ணங்களில் பல அற்புதமான சித்திரங்கள். பார்த்துப் பார்த்துப் புளகாங்கிதம் அடைகின்றேன். அந்த ஆனந்தத்தில் என்னையே மறக்கின்றேன்.

(தொடரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 4 =