மலேசியத் தமிழர்களின் சுவடுகள்

மலேசியத் தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகள் கெடா மாநிலத்தில் அமைந்த கடார அரசிலிருந்து தொடங்குவதாகக் கொள்ளலாம். அதே வேளையில் அங்குதான் லங்காசுகம் என்ற அரசும் அமைந்ததாக குறிப்புகள் காட்டுகின்றன. இன்று புழக்கத்தில் இருக்கும் கெடா என்ற சொல்லும் லங்காவி என்ற சொல்லும் இந்த அரசுகளில் இருந்து மறுவியவையாகும். அதே வேளையில், தெற்கே புருவாசில் கங்காநகர் அரசும் ஜொகூரில் கெலிங்கி என்ற அரசும் இருந்ததாக சில தொல்பொருட்களின் சான்றுகள் தெளிவுறுத்துகின்றன. பின்னாளில் அமைந்த மலாக்கா அரசும் இந்தோனேசியாவிற்கு இந்தியாவிலிருந்து முன்னரே வந்த சைலேந்திர அரச பரம்பரை வழியாக அமைந்தது என்றே கூறுவர். பரமேஸ்வரா இந்த அரச பரம்பரையைச் சார்ந்தவர் என்று கூறும் வரலாறும் உண்டு. அதே வேளை சிங்கப்பூரை உருவாக்கிய நீல உத்தமனும் இந்த சைலேந்திர அரச பரம்பரையிலிருந்துதான் வந்தவர் என்று கூறுவர். அவ்வகையில் இந்த பிரதேசத்தில் நாம் ஆண்ட பரம்பரையாக கோலோச்சியுள்ளோம். இதற்கு சான்றுகள் பலவாக இருந்தாலும் இதை நாம் கொண்டாடுவதில்லை. இதற்கு மாறாக, சில ஆண்டுகளுக்கு முன்னால் சீன அரசு மலாக்கா மாநில அருங்காட்சியகத்துடன் இணைந்து சீன கடற் தளபதியும் பிரயாணியுமான “லக்சமனா செங் ஹோ” பற்றிய மூன்றுநாள் கருத்தரங்குகள் நடத்தி ஆவணங்களையும் தொகுத்தனர். இதன் வழி ஹங் லீ போ இளவரசி வந்ததும் அவருடன் வந்த 500 சீனர்களும் அவர்கள் வாழ்வதற்காக கொடுக்கப்பட்ட இடமான புக்கிட் சீனா முதலான செய்திகள் தொகுக்கப்பட்டு சீனர்களின் சுவடுகள் பதியப்பட்டன. இன்று மலாக்கா நகருக்கு வருகைப் புரிபவர்கள் சீனா டவுனுக்குச் சென்றால் சீனர்களின் பண்பாடுகள் வெளிப்படுத்தும் காட்சிகளும் அவர்களுடைய உணவுகளும் நமக்கு மலைப்பைத் தரும். இது சீனர்கள் ஈயச் சுரங்கங்களின் வேலைகளுக்குத் தருவிக்கப்படுவதற்கு முன்னர் பதியமிடப்பட்ட முத்திரைகளாகும். ஆனால், நாமும் இராஜேந்திர சோழன் படையெடுத்து வந்து ‘கடாரங் கொண்டான்‘ என்று பெயர் பெற்ற வரலாற்றை கொண்டிருக்கின்றோம். ஆனால், ராஜராஜ சோழனைப் பற்றிய கருத்தரங்குகளைப் பெரிய அளவில் நிகழ்த்தி நமது மகோன்னத காலத்தை இதுவரையில் பதிவு செய்யவில்லை. நமது வரலாற்றுச் சுவடுகள் பதிவு செய்யப்பட வேண்டும். இதற்கு தமிழகத்தின் தொல்பொருள் ஆய்வுத்துறை உதவிட வேண்டும். இரு நாடுகளின் ஒத்துழைப்பில் வரலாற்றுச் சுவடுகளை ஆவணப்படுத்தி வருங்கால சமுதாயத்திற்கு பொக்கிஷமாக கொடுக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − three =