மலாயா தமிழர்கள் மரணப் பாதையில் மறக்கப்பட்டவர்கள்! – மலாக்கா முத்துகிருஷ்ணன் சிறப்புக் கட்டுரை

1945 ஆகஸ்டு மாதம் 15-ஆம் தேதி. ஜப்பான் சரண் அடைந்தது. தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானியரின் ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் சில நாட்களில் தாய்லாந்து, பர்மா மரண இரயில் பாதை முகாம்களில் இருந்த அமெரிக்கா; ஆஸ்திரேலியா; நியூஸிலாந்து; பிரிட்டன்; டச்சு நாட்டுப் போர்க் கைதிகள் அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப் பட்டார்கள்.
போர்க் கைதிகளை மீட்டுக் கொண்டு வருவதில் அவர்களின் நாடுகள் விரைவாகவும் சிறப்பாகவும் உடனடியாகவும் செயல் பட்டன. அரசதந்திர உறவுகளைப் பயன்படுத்தி முழுமூச்சாக ஈடுபட்டன.
ஒரே வார்த்தையில் சொன்னால் கூட்டுப் படைகள் கூட்டு சேர்ந்து கொண்டன. இரண்டாம் உலகப் போரின் போது கூட்டுச் சதியில் வீடு கட்டி வாழ்ந்தவர்கள் ஆயிற்றே. சும்மா இருப்பார்களா. கஷ்டமோ நஷ்டமோ இஷ்டம் தான் பெரிசு. ஒன்றாகச் செயல் படுவோம்; வெள்ளைதான் எனக்கு புடிச்ச கலரு என்று சொல்லி என்று மீண்டும் ஒன்று சேர்ந்து கொண்டார்கள். விமானங்கள் பறந்தன. கப்பல்கள் வந்தன. போர்க் கைதிகளும் ஐலசா பாடிக் கொண்டே அவரவர் நாட்டிற்குப் போய்ச் சேர்ந்தார்கள்.
ஆனால் மலாயாவில் இருந்து போன தமிழர்களின் கதிதான் அதோகதியானது. அவர்களுக்கு உதவி செய்ய ஒரு நாதி இல்லாமல் போனது. சயாமுக்குப் போன தமிழர்கள் ஜப்பான்காரனை ரொம்பவுமே நம்பி இருந்தார்கள். ஜப்பான்காரன் கொண்டு போனான். அவனே திருப்பிக் கொண்டு வந்து விட்டு விடுவான் என்ற ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையிலேயே சயாம் பர்மா காடுகளில் சில ஆண்டுகள் வாழ்ந்து விட்டார்கள்.
அந்த வகையில், இரண்டாம் உலகப் போர் முடிவிற்கு வந்ததும் ஆயிரக் கணக்கான தமிழர்கள் அங்கேயே அப்படியே அனாதையாக்க கைவிடப் பட்டார்கள். சுருக்கமாகச் சொல்லலாம். சயாம் பர்மா கொலைக் காட்டுச் சமாதிகளில் கழற்றி விடப் பட்டார்கள்.
எங்கே போவது; என்ன செய்வது என்று தெரியாமல் சிக்கித் தவித்துத் தடுமாறிப் போனார்கள். வெள்ளைக்காரனும் வரவில்லை. ஜப்பான்காரனும் வரவில்லை. இந்தியாக்காரனும் வரவில்லை. என்ன செய்வார்கள்.
ஜப்பான்காரன் ஓடிட்டான். வெள்ளைக்காரன் வந்துட்டான். சரி. ஆனால் உதவிக்கு எவனும் வரலையே என்று ஏங்கிக் கொண்டு இருந்தார்கள். எந்தக் காட்டில் நுழைந்து எப்படிப் போவது. பாதையும் சரிவரத் தெரியாது.
ஆக திக்கு தெரியாமல் தவித்த தமிழர்களை மலாயாவுக்குத் திருப்பிக் கொண்டு வருவதற்கு உடனடியாக முயற்சிகள் எதுவும் செய்யப் படவில்லை. மலாயா அரசாங்கமும் அவர்களை கண்டுகொள்ளவில்லை. இந்தியா நாட்டு அரசாங்கமும் அவர்களைப் பற்றி கவலைப் படவும் இல்லை. ஒரு செருகல்.
எப்படியாவது வந்து விடுவார்கள் அல்லது எப்படியாவது தொலைந்து போய் விடுவார்கள் என்று நினைத்து இருக்கலாம். சொல்ல முடியாதுங்க. இது என் மனதில் பட்டது. அதுதான் ஒன்றரை இலடசம் தமிழர்களைக் காவு வாங்கியாச்சே. அப்புறம் என்ன. மிஞ்சி இருக்கிற சில ஆயிரம் பேரைப் பற்றி ரொம்பவும் கவலை வேண்டாமே என்று நினைத்து இருக்கலாம்.
சில மாதங்கள் கழிந்தன. மலாயாவில் இருந்த சமூக அரசியல் தமிழர்த் தலைவர்கள் சத்தம் போட ஆரம்பித்து விட்டார்கள். சிலர் முயற்சி செய்தார்கள். அப்போதைய தமிழ் நேசன்; தமிழ் முரசு பத்திரிகைகள் தலையங்கங்கள் எழுதின. துன் சம்பந்தன், ஜான் திவி, சுப. நாராயணசாமி, ப. பவளகாந்தம், கோ. சாரங்கபாணி, ஐ.என்.ஏ அணியின் தலைவர்கள். இப்படி சிலர் ஆர்வம் காட்டினார்கள். அதன் பின்னர் தான் அவர்களுக்கு விமோசனம். கட்டம் கட்டமாக மீட்டுக் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப் பட்டன.


ஒரு முக்கியமான விசயம். தாய்லாந்து அரசாங்கம் தான் அங்குள்ள தமிழர்களைத் திருப்பி அனுப்பி வைக்க முன்னெடுப்புச் செய்தது. அக்கறை எடுத்துத் தீவிரமும் காட்டியது. அதை நாம் மறந்துவிடக் கூடாது. அதற்கும் காரணம் இருக்கிறது.
சில ஆண்டுகள் தமிழர்கள் தாய்லாந்து மக்களுடன் ஐக்கியமாகி இருந்தார்கள். அதனால் அப்போது அங்கு வாழ்ந்த தமிழர்களைப் பற்றி தாய்லாந்து அரசாங்கம் நன்றாகவே அறிந்து வைத்து இருந்தது.
அதன் பிறகுதான் மலாயா பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குக் கொஞ்சம் சொரணை வந்தது போலும். தாய்லாந்து அரசாங்கத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். அந்த வகையில் 1945-ஆம் ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் தமிழர்கள் பலர் மீண்டும் மலாயாவுக்குத் திரும்பி வந்தார்கள். ஒரு முக்கியமான விசயம்.
சில ஆயிரம் தமிழர்கள் திரும்பி வரவே இல்லை. தாய்லாந்து, பர்மாவிலேயே தங்கி விட்டார்கள். பெரும்பாலும் கால் கைகள் ஊனமாகிப் போன தமிழர்கள். மனநோய் பிடித்த தமிழர்கள். ஏற்கனவே அங்குள்ள பெண்களைக் கலயாணம் செய்து கொண்ட தமிழர்கள்.
மலாயாவில் இருந்த சொந்த பந்தங்கள் இறந்து விட்டார்கள் என்று கேள்விப்பட்டு; திரும்பிவர மனம் இல்லாமல் போன தமிழர்கள்.
மலாயாவில் ஒட்டு மொத்தமாகக் குடும்பங்களை இழந்த தமிழர்கள். குடும்பத்தோடு சயாம் காட்டுக்குப் போய் அங்கே மனைவி மக்கள் எல்லோரையும் கூண்டோடு இழந்த தமிழர்கள்.
இப்படி திரும்பி வராமல் அங்கேயே தங்கிய தமிழர்கள் சிலர் அங்குள்ள தாய்லாந்து, பர்மா பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். ஒரு சிலர் சின்னச் சின்னக் கடைகளைக் கட்டி வியாபாரம் பார்க்கத் துணிந்தவர்கள்.
இன்னும் சிலர் வியட்நாம் பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். மேலும் சிலர் கம்போடியாவுக்கு காட்டு வழியாகப் போய்ச் சேர்ந்து இருக்கிறார்கள்.
இவர்களின் வாரிசுகள் இன்றும் இந்தோசீனாவின் சில பகுதிகளில் இருக்கிறார்கள். தேடிப் பிடிப்பதுதான் சிரமம். வியட்நாமில் இப்போது 9700 தமிழர்கள் வாழ்கிறார்கள். இதில் ஓர் அதிசயம். அவர்களின் வாரிசுகளில் பெரும்பாலோர் தமிழ் மொழி பேசுகிறார்கள்.
தற்போது தாய்லாந்து தென்பகுதிகளில் வாழும் மக்கள் சிலரின் தோல் நிறம், நெற்றி, புருவம், கண்ணிமை அமைப்புகள், கண்கள், மூக்கு, காதுகள் முதலிய அங்கங்களின் அமைப்பு; தமிழர்களின் முகத் தோற்றங்களைப் போல அமைந்து இருப்பதைக் காணலாம்.
வடகிழக்குத் தாய்லாந்தில் கம்போடியா எல்லை அருகே வாழும் சில தாய்லாந்து மக்களில் சிலருக்கும், இந்த மாதிரி தமிழர்களின் அங்க அமைப்புகள் இருப்பதைக் காணலாம். அவர்கள் இரயில் பாதை போட போன தமிழர்களின் வாரிசுகளாக இருக்கலாம். மகிழ்ச்சி அடைவோம்.
இந்தக் கட்டுரையில் காட்சிப் படுத்தப்படும் படங்கள் 1945 அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி, தாய்லாந்து கின்சாயோக் எனும் இடத்தில் எடுக்கப் பட்டவை. ஜப்பானியர் சரண் அடைந்த பின்னர், இரயில் பாதை போன தமிழர்கள் சிலர் கின்சாயோக் நகரில் தஞ்சம் அடைந்தார்கள்.
படத்தில் உள்ள தமிழ்ப் பெண்களைப் படம் எடுத்த போது அவர்களின் பிள்ளைகளும் சேர்ந்து கொண்டார்கள். புகைப்படங்களை எடுத்தவர் புருஸ் அல்பர்ட் . ஓர் ஆஸ்திரேலியர். அப்போது அந்த ஆஸ்திரேலியருக்கு அந்தத் தமிழ்ப் பிள்ளைகள் அவர்கள் வளர்த்த கோழிகளையும் அன்பளிப்பு செய்து இருக்கிறார்கள்.
இன்னொரு படம் மறுநாள் 20.10.1945-ஆம் தேதி எடுக்கப்பட்டது. ஓர் ஆஸ்திரேலியரும்; இராணுவ வரலாற்றுக் குழுவைச் சேர்ந்த ஒரு டச்சு அதிகாரி வார்மென்ஹோவன் என்பவரும் ஒரு கிராமத்திற்குச் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னால் ஒரு ஜப்பானிய கைதி; கிராமவாசிகள் சென்றார்கள். கிராமவாசிகளில் நான்கைந்து தமிழர்களும் இருந்தார்கள்.
சயாம் மரண இரயில் பாதையின் கொடூரங்கள் மறக்கப்படும் ஒரு வரலாறாக மாறி வருகிறது. இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கும் அதைப் பற்றி தெளிவாகத் தெரியவில்லை. சொன்னாலும் புரியவில்லை. இனிவரும் காலங்களில் அந்த வரலாறு மறக்கப்படக் கூடாது. அந்த வரலாறு காலா காலத்திற்கும் நினைத்துப் பார்க்கப்பட வேண்டும்.
மரண இரயில் பாதை போடுவதற்குப் போன 100 தமிழர்களில் 65 பேர் அங்கேயே இறந்து விட்டார்கள். ஒரு இலட்சம் அல்லது ஒன்றரை இலட்சம் மலாயா தமிழர்கள் இறந்து இருக்கலாம். தப்பிப் பிழைத்தவர்கள் 1945-ஆம் ஆண்டு இறுதி வாக்கில் மலாயாவுக்குத் திரும்பி வந்தார்கள். ஏறக்குறைய 20,000 பேர் இருக்கலாம். சரியான கணக்கு தெரியவில்லை. வித்த கணக்கை எழுதிய ஜப்பான்காரன் செத்த கணக்கை எழுதவே இல்லை.
சயாம் மரண இரயில் பாதை அமைக்கப் போனவர்களில் பெரும்பாலோர் வயது காரணமாக இப்போது இல்லை. காலமாகி விட்டார்கள். நடுக்காட்டில் நாதி இல்லாமல் தவித்த அந்த அப்பாவி மக்களை என்றும் நினைத்துப் பார்ப்போம். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் இறுதி மரியாதை ஆகும்.
மலாயா வரலாற்றில் மரண இரயில் பாதை மறக்க முடியாத ஓர் இதிகாசம். மலாயா இந்தியர்களின் நெஞ்சங்களைக் கீறிப் பார்க்கும் இரணத்தின் சுவடுகள். மலாயா தமிழர்களின் நெஞ்சங்களைப் பிளந்து பார்க்கும் மரணத்தின் சுவடிகள். இரண்டுமே மௌன மொழிகளின் வக்கிர ராகங்கள்.
சயாம் மரண இரயில் பாதையின் கொடூரங்கள் மறக்கப்படும் ஒரு வரலாறாக மாறி வருகிறது. இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கும் அதைப் பற்றி தெளிவாகத் தெரியவில்லை. சொன்னாலும் புரியவில்லை. இனிவரும் காலங்களில் அந்த வரலாறு மறக்கப்படக் கூடாது. அந்த வரலாறு காலா காலத்திற்கும் நினைத்துப் பார்க்கப்பட வேண்டும்.
1940-ஆம் ஆண்டுகளில் ஐரோப்பாவில் யூதர்களுக்கு நாஜிக்கள் இழைத்தது கொடுமையிலும் கொடுமை. அதே போல இங்கே மலாயாவில் தமிழர்களுக்கு ஜப்பானியர்கள் இழைத்தது மாபெரும் கொடுமை. ஜப்பானியர்களின் அதிகாரத் துஷ்பிரயோகத்தில் பலிக்கடாக்களான அப்பாவிச் செம்மறியாடுகள்.
வர்றான் வர்றான் சப்பான்காரன் ஆள்பிடிக்க வர்றான் என்பது அந்தக் காலத்துத் தமிழர்களின் வாய்மொழிச் சொற்கள். அவற்றில் கசிந்து வழிவது எல்லாம் வரலாற்றின் வேதனை விசும்பல்கள். வரலாற்றின் வேதனை வலிகள். அந்த வேதனை வலிகளில் சாத்துயர் மரண ஓலங்கள் ஓங்காரமாய் ஒப்பாரி வைப்பதை நன்றாகவே கேட்க முடிகின்றது.
மனித வரலாற்றில் இது மிகவும் துயரம் தோய்ந்த ஓர் இரயில்பாதை முயற்சியாகும். அந்த முயற்சி கடைசியில் பெரும் அதிர்ச்சியிலும் பெரும் சோகத்திலும் பெரும் தோல்வியிலும் போய் முடிந்தது. வரலாறு பேசுகிறது.
நம் தமிழர்கள் அங்கே கொடும் வேதனைகளை அனுபவித்து இருக்கிறார்கள். 1943-ஆம் ஆண்டு கான்புரி எனும் இடத்தில் ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு பாலியல் கொடுமை இழைக்கப்பட்டது. பயங்கரமான பச்சைக் கொடுமை. அதைப்பற்றி நாளைய கட்டுரையில் பதிவு செய்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × four =