மலாயா தமிழர்களை கரை சேர்த்த கப்பல்கள்

மலாயாவிற்கு தமிழர்கள் கப்பல் ஏறி வந்த கதை ஒரு கண்ணீர்க் கதை. 250 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டு நெடிந்து போகின்ற ஒரு தொடர்கதை. அந்த நீண்ட கதையில் தமிழர்கள் சிந்திய இரத்தம், கொட்டிய தியாகம், தூவிய அர்ப்பணிப்புகள். சொற்களில் மாளா. எப்படி எழுதினாலும் எழுதித் தீர்க்கவே முடியாது.
நிலவுக்கே ஏணி வைத்து எழுதினாலும் தமிழர்களின் சோகக் கதைகள் அதையும் தாண்டி மறுமைக்குப் போய்ச் சேரும். அப்பேர்ப்பட்ட அர்ப்பணிப்புகளைத் தமிழர்கள் இந்த நாட்டிற்கு வழங்கி இருக்கிறார்கள். சத்தியமாகச் சொல்கிறேன். வாரி இறைத்து இருக்கிறார்கள். திருத்திக் கொள்ளுங்கள்.
அவர்களின் உயிர்களையும் உடல்களையும் சுமந்து வந்த கப்பல்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
மலாயா தமிழர்களின் வரலாற்றில் மிகவும் ஆழமாய்ப் பதிந்து போன ஒரு கடல் காவியம் என்றால் அதுதான் எஸ்.எஸ். ரஜுலா கப்பல். தமிழர்களால் ‘ரசுலா கப்ப’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஓர் அழகிய ஓவியம்.
அந்தக் கப்பல் மறைந்து போய் விட்டது. இருந்தாலும் அது விட்டுச் சென்ற பல வரலாற்றுத் தடங்கள் மட்டும் இன்னும் மறையவில்லை. சொல்லப் போனால் மலாயா தமிழர்களின் வாழ்வாதார வரலாற்றில் அந்தக் கப்பல் ஒரு ஜீவநாடி. ஒரு சப்தநாடி.
இந்தக் கப்பலைப் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுங்கள். இப்போது நாம் நல்ல ஓரளவிற்கு ஒரு சொகுசான வாழ்க்கை வாழ்கிறோம். ஆனால் நம் மூதாதையர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள். கண்ணீர் விட்டு இருப்பார்கள். தண்ணீர்க் கப்பல்களில் வேதனைகளோடு வந்து இருப்பார்கள். அதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
மலாயா தமிழர்களுக்குப் பரங்கியர் இழைத்தக் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதையும் பேரப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். அதே போலத் தான் இலங்கையின் மலையகத் தமிழர்களுக்கும் கொடுமைகள். அதைப் பார்த்துக் கண்ணீர் விட்டு அழுத பாரதியார் ஒரு கவிதை எழுதினார்.
கரும்புத் தோட்டத்திலே – அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
தெய்வமே! நினது எண்ணம் இறங்காதோ- அந்த
ஏழைகள் சொரியும் கண்ணீர்!
நாட்டை நினைப்பாரோ? – எந்த
நாளினிப் போயதைக் காண்பது என்றே? அன்னை
வீட்டை நினைப்பாரோ? – அவர்
விம்மி விம்மி அழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே!

நம் நாடு மலேசியா பெருமைக்குரியது. இந்த 21-ஆம் நூற்றாண்டில் நம்முடைய நாடு மிகக் கம்பீரமாய் எழுந்து வானளாவி நிற்கின்றது. வானத்தை முட்டிப் பார்க்கும் கோபுரங்களைக் கட்டிப் போட்டு அழகு பார்க்கின்றது.
பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் என பல துறைகளில் வியக்கத் தக்க வளர்ச்சியை அடைந்து வருகிறது. மக்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்து நிற்கிறது. நல்ல சொகுசான வாழ்க்கை வாழ்கின்றனர். வெளிநாடுகளில் சென்று பார்க்கும் போது தான் நம்முடைய நாடு எவ்வளவு வளமிக்கது; சுபிட்சமானது என்று உணர முடிகின்றது.
அவை எல்லாம் வரலாறு சொல்லும் உண்மைகள். அந்த உண்மைகளும் சரி; அந்த உரிமைகளும் சரி; அவற்றின் பின்னால் எழுந்து நிற்கும் மலேசிய தமிழர்களின் அர்ப்பணிப்புகளும் சரி. என்றைக்கும் நினைத்துப் பார்க்கப்பட வேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு சொர்க்க பூமியை சுயநலம் பார்க்கும் ஒரு சில அரசியல்வாதிகள் கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரே வார்த்தையில் சொன்னால், ஒரு கோமாளித் தனமான அரசியலை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
யானை வந்தால் என்ன. பூனை வந்தால் என்ன. எங்க வீட்டுப் பானை எட்டு வருசத்துக்கு நிறைஞ்சு இருக்கணும். என் குடும்பம் நல்லா இருந்தால் போதும் என்கிற டிங்கிரி டிங்காலே கூத்துகள். என்ன செய்வது. இருந்ததும் சரி இல்லை. வந்ததும் சரி இல்லை. காலம் கெட்டுப் போய்க் கிடக்கிறது. வாங்க அண்ணாச்சி வாங்க என்று உள்ளுக்கு வச்சாலும் வைத்து விடுவார்கள். உதவிக்கு சில்க்கும் வர மாட்டார். ஸ்நேக் பாபுவும் வரமாட்டார். ஊர் பொல்லாப்பு வேண்டாங்க.
ரஜுலா கப்பலுக்கு முன்னர் 1870 – 1900-ஆம் ஆண்டுகளில் சில கப்பல்கள் சென்னைக்கும் பினாங்கிற்கும் ஓடி இருக்கின்றன. அவை வேகமாகச் செல்லவில்லை. சென்னையில் இருந்து பினாங்கிற்கு வந்து சேர இரண்டு வாரங்கள் வரை பிடிக்கும். வருடத்தைக் கவனியுங்கள். 1870-ஆம் ஆண்டுகள்.


நிலக்கரியைப் பயன்படுத்தி நீராவியின் மூலமாகப் பயணச் சேவைகள். அவற்றில் சில கப்பல்கள் பெயர் தெரியாமலேயே மறைந்து போய் விட்டன. 1930-ஆம் ஆண்டிற்குப் பின்னால் ஓடிய கப்பல்கள் எட்டு பத்து நாட்களில் பினாங்கு துறைமுகத்தைப் பிடித்து இருக்கின்றன.
எஸ்.எஸ்.ரஜுலா கப்பல் இருக்கிறதே இது ஐந்தே ஐந்து நாட்களில் பினாங்கை வந்து பிடித்து இருக்கிறது.
1870-ஆம் ஆண்டுகளில் தமிழர்களை ஏற்றி வந்த கப்பல்கள்:

 1. ரோணா
 2. அரோண்டா
 3. ரஜூலா
 4. ஜலகோபால்
 5. ஜல உஷா
 6. திலவரா
 7. ஸ்டேட் ஆப் மெட்ராஸ்
 8. துனேரா
 9. எம்.வி.சிதம்பரம்
  இந்தக் கப்பல்கள் இன்னும் மலேசிய மனங்களில் சம்மணம் போட்டு நிலைத்து நிற்கின்றன. அவற்றை மறக்க முடியுமா. ஆகக் கடைசியாக ஓடியது எம்.வி. சிதம்பரம் கப்பல் ஆகும். 1985-ஆம் ஆண்டில் ஒரு தீ விபத்து. அதோடு அதன் கடல் வாழ்க்கையும் முடிந்தது.
  1940-ஆம் ஆண்டுகளில் ரோணாவும் ரஜூலாவும்தான் ஒரே சமயத்தில் இணைந்து பயணித்தன. அதன் பின்னர் ரஜூலாவும் ஜலகோபாலும் நீயா நானா என்று போட்டி போட்டுக் கொண்டு ஓடின.
  இவற்றில் ரோணாவும் அரோண்டாவும் கடலில் மூழ்கி விட்டன. ரோணா கப்பல் மத்தியத்தரைக் கடல் பகுதியில் மூழ்கிப் போனது. அரோண்டா கப்பல் 1940-ஆம் ஆண்டு ஒரு வெடிப்பு சம்பவத்தால் கனடா நாட்டுக்கு அருகில் மூழ்கிப் போனது. சரி.
  சஞ்சிக்கூலியாய் மலாயாவுக்குப் போகிறேன் என்று சொல்லிக் கைநாட்டுப் போட்டு சத்தியம் செய்து விட்ட ஒருவர் தன்னுடைய கிராமத்தை விட்டுப் புறப்படும் போதே ஒரு கடனாளியாகத் தான் புறப்படுகிறார். கப்பலில் ஏறும் போதே கடன்காரர்தான்.
  கிராமத் தலைவரிடம் கைநீட்டி வாங்கிய கடன்.
  சொந்த பந்தங்களிடம் வாங்கிய கடன்.
  வயல்காட்டை அடகு வைத்த வட்டிக் கடன்.
  கிணறு வெட்ட வாங்கிய கடனுக்கு வட்டிக் கடன்.
  குடிசைக்கு ஒட்டுப் போட வாங்கிய கடன்.
  காளைக்கு விதையடிக்க வாங்கிய கடன்.
  ஐயனார் சாமிக்கு அரிவாள் வாங்கிய கடன்.
  இப்படி எக்கச்சக்கமான கடன் சுமைகள். அவற்றுக்கு வட்டிக் குட்டிகள். அந்தக் கடன்களுக்குக் கொஞ்சமாவது தண்ணீர் காட்ட வேண்டும். இல்லையா. இல்லை என்றால் சொந்த பந்தங்கள் சும்மா விடுவார்களா? வீணாய்ப் போன அசிங்கமான வார்த்தைகளை அள்ளிக் கொட்டி மானத்தை வாங்கி விடுவார்களே.
  அடுத்து கடல் கடந்து போகும் பயணத்துக்கான தட்டு முட்டுச் செலவுகள். வேறுவழி இல்லாமல் வேலைக்கு ஆள் சேர்த்த அதே கங்காணியிடமே கடன் வாங்க வேண்டி இருக்கும். இங்கேதான் ஆரம்பக் கடன்கள் அதிரடியாய் ஆரம்பிக்கின்றன.
  ஆக தமிழகத்தை விட்டுப் புறப்படும் போதே ஒரு தொழிலாளி ஒரு கங்காணியின் கடன்காரராகத் தான் புறப்படுகிறார். இந்த முதல் கடன் தான் பின்னர் காலத்தில் முதலைக் கடனாக விஸ்வரூபம் எடுக்கிறது.
  அதுவே ஒரு சாமான்ய மனிதனை வெட்டி வீசப் போகும் ஒரு பயங்கரமான சதித் திட்டமாக மாறிப் போகின்றது. அதுவே ஆள் சேர்க்க வந்த ஒரு கங்காணி பயன்படுத்தப் போகும் துருப்புச் சீட்டு. ஆக பிறந்த மண்ணிலேயே அந்தச் சாமான்ய மனிதன் ஒரு கடனாளியாகத் தான் புலம் பெயர்கிறான்.
  இது அதோடு முடிந்து போவது இல்லை. மலாயாவில் வேலைக்குச் சேர்ந்த பிறகு அங்கேயும் பற்பல சடங்குச் சம்பிராதயச் செலவுகள்.
  கவுண்டமுத்துக்கு காதுகுத்து…
  தீத்தம்மாவுக்கு திருமணம்…
  ஈச்சப்பனுக்கு ஈமச்சடங்கு…
  வாத்தியாரம்மா வயசுக்கு வந்துட்டா
  என்று இப்படி எக்கச் சக்கமான சடங்குச் சங்கதிகள். சம்பிரதாயச் சாணக்கியங்கள்.
  அதே கங்காணியிடம் மீண்டும் மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலை. அதுவும் அதோடு நின்று போவது இல்லை. தொடரும் தொடர்வண்டிச் சரக்காய் மாறிப் போகின்றது. மேலும் ஒரு வரலாற்றுத் தகவலுடன் மீண்டும் சந்திக்கிறேன்.
  சான்றுகள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × three =