மலாயா தமிழர்களின்
டெப்போ திருமணங்கள்
– மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

1800-ஆம் ஆண்டுகளில் மலாயா ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காகப் பல இலட்சம் தமிழர்கள் கப்பல் ஏறினார்கள். கப்பல் ஏறுவதற்கு முன்னர் துறைமுகங்களில் இருந்த குட்டிக் குடிசை முகாம்களில் கொஞ்ச காலம் தங்கி இருக்க வேண்டும். அந்த முகாம்களுக்குப் பெயர் டெப்போ.

அந்த முகாம்களில் தங்கிச் செல்பவர்களில் ஏற்கனவே கல்யாணமான பெண்கள் சிலரும் இருந்தார்கள். அவர்களுக்கு கிராமத்தில் கணவன் பிள்ளைகள் இருந்தார்கள். அவர்கள் விட்டுப் பிரிந்துதான் கப்பல் ஏற வந்தார்கள். இருப்பினும் இந்த மாதிரி கணவன் இல்லாமல் வரும் பெண்களுக்கு டெப்போக்களில் வலுக்கட்டாயமாக மற்றொரு திருமணம் செய்து வைக்கப் பட்டது.

அப்படி நடத்தி வைக்கப்பட்ட திருமணத்திற்குப் பெயர் தான் டெப்போ திருமணம். இது எப்படி இருக்கு என்று கேட்க வேண்டாம். ஆங்கிலேயக் காலனித்துவ ஆதிக்கத்தில் அப்படித்தான் இருந்தது. பாண்டிச்சேரியில் இருந்து பிரெஞ்சுக்காரர்கள் அனுப்பி வைத்த பெண்களுக்கும் இதே கதிதான். ஊர் பேர் தெரியாத எவனோ ஒருவனுக்கு கழுத்தை நீட்ட வேண்டிய கொடுமை. அதுவே மலாயா தமிழர்களுக்கு ஒரு வரலாற்றுக் கொடுமை.

ஆண்கள் இல்லாமல் பெண்கள் இல்லை. பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை. எல்லோருக்கும் தெரிந்த உலக மகா வசனம். ஆண்கள் பெண்களைச் சார்ந்து இருக்கிறார்கள். பெண்கள் ஆண்களைச் சார்ந்து இருக்கிறார்கள். ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை. இதுவும் உலக மெகா நியதி.

பெண்கள் இல்லாத உலகத்தில் ஆண்களுக்கு என்ன வேலை. உண்மை தான். சரி. விசயத்திற்கு வருவோம். பத்து ஆண்கள் இருக்கும் இடத்தில் ஒரே ஒரு பெண் இருந்தால் பிரச்சினை வருமா வராதா. வரும் ஆனால் வராது என்று சொல்ல வேண்டாம். கண்டிப்பாக வரும். காய்ந்த மாடுகள் கம்புக் கொல்லையில் நுழைந்த மாதிரிதான் வரும்.

ஆங்கிலேயர்கள் அதற்கும் ஒரு விதிமுறையைக் கொண்டு வந்தார்கள். நாயைச் சுடுவதாக இருந்தாலும் தடவிக் கொடுத்து விட்டுத் தான் சுடுவார்களாம். ஆக வெளிநாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களாக இருக்க வேண்டும் என்கிற விதிமுறை. நல்ல விதிமுறை தான், ஆனால் சரிபட்டு வரவில்லை.

பெண்களைக் கொண்டு வருவது ரொம்பவும் சிரமமாக இருந்தது. ஏன் என்றால் கிராமப் புறங்களில் நிலவிய ஆணாதிக்கக் கட்டுப்பாடு. ஆண்களைக் கேட்காமல் பெண்கள் சடை பின்னக் கூடாது. சட்டி பானை கழுவக் கூடாது. சவர்க்காரம் போட்டு குளிக்கக் கூடாது. இப்படி எக்கச்சக்கமான ஆணாதிக்க அல்வா கேசரிகள். அதாவது ஆண்களை மிஞ்சி, பெண்கள் எதையும் செய்யக் கூடாது. உட்கார் என்றால் உட்காரணும்; படு என்றால் படுக்கணும். இப்படி ஆண்களின் கிராமத்திய சர்வாதிகாரப் போக்கு இருந்த காலக்கட்டம்.

அதுவே அப்போதைய கிராமத்து வழக்கம் என்றுகூட சொல்லலாம். அதனால் பெண்களை மலாயாவில் வேலைக்குச் சேர்ப்பது என்பது லேசு பட்ட காரியம் இல்லை. இருந்தாலும் அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்தார்கள்.

ஆள் பிடிக்கும் இடைத் தரகர்கள் சும்மா இருப்பார்களா. வறுமையான குடும்பத்தில் கஷ்டப்படும் குடும்பங்களைத் தேடிச் செல்வது. அப்பா அம்மா அல்லது குடும்பத் தலைவர்களிடம் ஆசை வார்த்தைகளைப் பேசுவது. பிராந்தி விஸ்கி வாங்கிக் கொடுப்பது. நரியை நனையாமல் குளிப்பாட்டுபவர்கள். அவர்களுக்குச் சொல்லியா தரணும். அப்படியே குடும்பப் பெண்களை நைசாக வேலைக்குச் சேர்த்துக் கொள்வார்கள்.

தவிர பெண்களில் சிலர் தங்களின் குடும்ப வறுமையைப் பார்த்து தாங்களாகவே வேலைக்குச் சேர முன் வந்தார்கள். அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. வெளிநாடுகளில் வேலைக்குப் போகும் பெண்கள் தனி ஆளாகப் போக முடியாது. யாராவது ஓர் ஆண் துணையோடு தான் போக வேண்டும். அதற்கும் ஒரு தரகு வேலை நடந்தது.

டெப்போவில் தான் நிறைய ஆண்கள் இருந்தார்களே. அந்த ஆண்களில் யாரையாவது ஒருவரைப் பிடித்து இழுத்து வந்து, கல்யாணம் ஆகாமல் வரும் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். திருமணச் சான்றிதழ் கொடுத்தார்கள். அந்தச் சான்றிதழைக் கொண்டு அந்தப் பெண்கள் மலாயாவுக்குப் போக முடிந்தது. இது கல்யாணம் ஆகாத பெண்களுக்கு நடந்த சடங்குச் சம்பிரதாயங்கள்.

ஏற்கனவே திருமணமான பெண்களுக்கு என்ன செய்வதாம். அதற்கும் பிக் பாக்ஸ் கமல் கணக்கில் கணக்குப் பார்த்துத் தீர்ப்பு எழுதினார்கள். அதுவும் கல்யாணம் ஆகாமல் வரும் பெண்களைப் போலத் தான். சட்டுபுட்டுனு எவனாவது ஒரு இளிச்சவாயனை பிடித்து இழுத்து வந்து மாற்றுத் திருமணம் செய்து வைத்து சர்டிபிகெட் கொடுத்தார்கள்.

புருசன் பிள்ளைகள் கிராமத்தில் இருக்கலாம். இருந்தாலும் இன்னும் ஒரு திருமணம் செய்ய வேண்டிய ஒரு வேதனையான நிலைமை. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் முன்பின் தெரியாத எவனோ ஒருவனுக்குக் கழுத்தை நீட்ட வேண்டிய கட்டாய நிலைமை. (Indian Diaspora In Mauritius)

இந்த மாதிரி திருமணங்களுக்கு டெப்போ திருமணம் என்று பெயர். அந்தத் திருமண உறவுகள் டெப்போவிலேயே தற்காலிகமாக முடிந்து விடும். ஏன் என்றால் திருமணம் செய்த ஆண் மலாயாவில் எங்கோ ஓர் இடத்திற்கு போய் விடுவான். பெண் வேறு எங்கோ ஓர் இடத்திற்குப் போய் விடுவாள்.

எடுத்துக்காட்டாக நாகப்பட்டினம் டெப்போவில் ஒரு பெண்ணுக்குத் தாலி கட்டியவன் ஜொகூருக்கு அனுப்பப் படுவான். தாலி கட்டியவள் கெடாவிற்கு அனுப்பப் படுவாள். டெப்போவிலும் கப்பலிலும் சந்தித்துப் பேசிக் கொள்வதோடு சரி. அதன் பிறகு அவர்கள் சந்திக்க முடியாது. கப்பல் கல்யாணம் கப்பலோடு முடிந்து விடுகிறது.

அப்படியே அவர்கள் மீண்டும் சந்தித்தால் அதுவே உலக மகா அதிசயமாக இருக்கலாம். சும்மா ஒரு கடுதாசிக் கல்யாணம் தானே என்று நினைத்தாலும் நம்முடைய நெஞ்சம் வலிக்கிறது. இதில் என்ன சடங்கு. இதில் என்ன சம்பிரதாயம். இதில் என்ன சொந்தம் என்று சொன்னாலும் ரொம்பவே வலிக்கின்றது.

சரி. ஒப்பந்தக் கூலி முறை என்றால் என்ன. அதையும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

தென் இந்தியாவில் ஒவ்வொரு கிராமமாகப் போய் ஆட்களைச் சேகரிக்கும் முறைக்குப் பெயர் தான் ஒப்பந்தக் கூலி முறை. இந்த மாதிரி ஆள் சேர்க்கும் வேலையைத் தமிழகத்தில் வாழ்ந்த தமிழர்த் தரகர்கள் நன்றாக; மிகச் சிறப்பாகச் செய்தார்கள். இந்தத் தரகர்களில் பெரும்பாலோர் சென்னை; நாகப்பட்டினம் போன்ற நகரங்களில் தலைமை இடங்களைக் கொண்டு செயல்பட்டு வந்தார்கள். (Marina Carter, James Ng Foong Kwong 2009)

அவர்களை ஒப்பந்தத் தரகர்கள் என்றும் அழைத்தார்கள். அந்த வகையில் மலாயா ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கு நல்ல உடல் வலிமை கொண்ட தென் இந்தியர்கள் மட்டும் தேர்வு செய்யப் பட்டார்கள்.

உடல் வலிமை மட்டும் அல்ல. நல்ல உடல்நலத்துடன் இருக்க வேண்டும். அதே சமயத்தில் அடக்க ஒடுக்கமாய்; பக்தி பதவிசாய் பழகக் கூடியவர்களாக இருக்க வேண்டும். அந்த வகையில் வத்தல் தொத்தல்கள் ஓரம் கட்டப் பட்டார்கள்.

ஒப்பந்தம் செய்யப் படுபவர்கள் மனைவி மக்களைப் பிரிந்து வாழும் மனப்பக்குவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். மேல் அதிகாரி சொல்வதைக் கேட்டு மறுபேச்சு பேசாமல் வேலை செய்பவர்களாக இருக்க வேண்டும். நோ சண்டை நோ வம்பு. அப்படிப்பட்ட ஆளாகத் தான் இருக்க வேண்டும்.

கொடுக்கும் வேலையை நேரம் காலம் பார்க்காமல் செய்து முடிப்பவர்களாக இருக்க வேண்டும். அப்படிப் பட்டவர்களைத் தான் வலைபோட்டுத் தேடிப் பிடித்தார்கள். பொருள்களைச் சேகரிப்பது போலவே ஆள்களைச் சேகரித்தார்கள். ஒப்பந்தத்தில் கைநாட்டு போட வைத்தார்கள். இல்லை என்றால் கெட் அவுட்.

தேர்வு செய்யப் பட்ட கிராமவாசிகளை மூளைச் சலவை செய்வதிலும் கெட்டிக்காரத்தனம் இருந்தது. சொல்வதனம் இருந்தது. கூடவே சொல் பதனமும் இருந்தது.

நல்ல சம்பளம். நல்ல சாப்பாடு. நல்ல சட்டை சிலுவார். நாலு ஸ்டார் ஓட்டல் வசதி. நாலு ஏக்கர் நிலம். காய்கறிகள் பயிர் செய்யலாம். ஆடு, மாடு, ஆங்சா, ஆந்தை, ஈத்தை, வாத்து, கரிச்சான் குருவி, சிரிச்சான் குருவி எல்லாம் வளர்த்துக் கொள்ளலாம். கப்பல் டிக்கெட் இலவசம். கைச்செலவிற்கு பணம். அப்புறம் என்னங்க.

இரண்டே வருசத்தில் பணத்தைக் கத்தைக் கத்தையாகக் கட்டிக் கொண்டு திரும்பி வந்திடலாம். இப்படி அழகு அழகான ஆசை வார்த்தைகள். ஆணிவேர் ஆட்டம் காணும் வார்த்தை ஜாலங்கள். கம்பர் தோற்றார் போங்கள். கிராமவாசிகளுக்கு மண்டையில் மணி அடிக்காத குறை. கிரங்கிப் போனார்கள்.

ஒப்பந்தக்கூலி முறை வழியாகத் தேர்வு செய்யப் படும் கிராமவாசிகள் ஐந்து ஆண்டுகள் முழுமையாக வேலை செய்ய வேண்டும். முதலில் சேர்ந்த வேலையில் இருந்து மற்ற மற்ற வேலைகளுக்கு மாற்றிக் கொள்ள முடியாது.

முதலில் சேர்ந்த இடத்தில் இருந்து மற்ற மற்ற இடங்களுக்கு மாறிச் செல்ல முடியாது. ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகு வேலையில் இருந்து கழற்றிக் கொள்ள முடியாது. ஒப்பந்தத்தில் கையொப்பம் போட்டால் போட்டதுதான்.

மனைவி மக்களை அழைத்துச் செல்லலாம். ஆனால் அவர்களும் வேலை செய்ய வேண்டும். அவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வேண்டும். (Monique Dinan 2002)

ஐந்து ஆண்டு கால ஒப்பந்தம் முடிந்ததும் மீண்டும் அதே ஒப்பந்தத்தை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் புதுப்பித்துக் கொள்ளலாம். தொடர்ந்து வேலை செய்ய விருப்பம் இல்லை என்றால் சொந்த நாட்டிற்கே திரும்பிச் செல்லலாம். தடை எதுவும் இல்லை. இதற்குப் பெயர் தான் ஒப்பந்த முறை. சரி. வேறு ஒரு புதிய தகவலோடு மீண்டும் சந்திப்போம்.

சான்றுகள்

  1. Marina Carter, James Ng Foong Kwong (2009). Abacus and Mah Jong: Sino-Mauritian Settlement and Economic Consolidation. Volume 1 of European expansion and indigenous response, v. 1. BRILL. p. 199.
  2. Monique Dinan (2002). Mauritius in the Making: Across the Censuses, 1846-2000. Nelson Mandela Centre for African Culture, Ministry of Arts & Culture. p. 41.
  3. Huguette Ly Tio Fane-Pineo (1985). Chinese Diaspora in Western Indian Ocean. Ed. p. 287.
  4. Paul Younger Professor Emeritus of Religious Studies McMaster University (2009). New Homelands: Hindu Communities in Mauritius, Guyana, Trinidad, South Africa, Fiji, and East Africa. Oxford University Press. p. 33.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 9 =