மலாயா சபா சரவாக் கூட்டமைப்பில் மலர்ந்த மலேசிய தினம்

(எஸ்.எஸ்.மணிமாறன்) பந்திங், செப். 14- மலாயா கூட்டரசுப் பிரதேசம் (Persekutuan Tanah Melayu) சபா (வட போர்னியோ) சரவாக் கூட்டமைப்பில் கடந்த 16.9.1963ல் உதயமாகி மலர்ந்தது மலேசிய தினம். தேசத் தந்தை துவாங்கு அப்துல் ரஹ்மான் கூட்டுறவுத் தந்தை துன் வீ.தி.சம்பந்தன் துன் தான் சியூ சின் என்ற மூன்று இமயங்களின் கைகோர்ப்பில் நாட்டு மக்களின் முக மலர்ச்சி யில் ஒருமைப்பாடு உத்வேக சிந்தனை யில் மலேசிய தினம் பிரகடனப் படுத்தப்பட்டது. இங்கிலாந்தின் எலிசபெத் மகாராணி அனுப்பிய வாழ்த்துச் செய்தி யை மெர்டேக்கா ஸ்டேடியத்தில் நடந்த தேசிய தின பிரகடன நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் துங்கு வாசித்தார். ஆயிரக் கணக்கில் திரண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு ஆரவாரத்துடன் பலத்த கை தட்டலுடன் வரவேற்றனர். எதிர் கால நாட்டின் வளர்ச்சி மக்கள் முன்னேற்றம் புதிய மேம்பாட்டுத் திட்டங்கள் என்ற ஒருமித்த கொள்கையில் தேசிய தினக் கொண்டாட்டங்கள் நாடு தழுவிய அளவில் தொடர்ந்து வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த க் கூட்டமைப்பில் இணைத்துக் கொண்ட சிங்கப்பூர் ஒப்பந்த சாசனக் கருத்திணக்கத்தில் உடன் படாமல் அதைப் புறக்கணிக்கும் நோக்கத்தில் சில மாதங்களுக்குப் பிறகு தாமாகவே பிரிந்து போனது வேறு கதை. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் இங்கிலாந்து அரசியாரின் தலை அமைப்புக் கொண்ட சின்னம் பதித்த பண நோட்டுகள் தான் அன்று மக்கள் மத்தியில் அதிக அளவில் புழக்கத்தில் இருந்தன. கடந்த 31.8.1957இல் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு படகு சின்னத்தில் பண நோட்டுகள் அச்சிடப்பட்டன. கடந்த 1.3.1959இல் இந்த புதிய வடிவ பண நோட்டுகள் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. கறுப்பு வெள்ளை தொலைக் காட்சியில் அன்றைய பெரியவர்கள் மலேசிய தினக் கொண்டாட்டங்களை அவரவர் வீடுகளில் அமர்ந்தபடி கண்டு களித்தனர். தோட்டப் புறங்களில் மலேசிய தினத்தன்று கபடி கால்பந்து கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுகள் களை கட்டியது ஒரு இனிய வசந்த காலம் என்றாலும் அது மிகையில்லை. துங்கவர் காலத்தில் நாட்டில் மிதமான வளர்ச்சி என்ற போதிலும் பேதம் பாராத கொள்கையோடு மூவின மக்களும் சகோதரத்துவ உணர்வோடு ஒருமைப்பாட்டுக்கு வித்திட்டனர். பின்னர் ஏற்பட்ட படிப் படியான வளர்ச்சியில் நாட்டில் பெரிய மாற்றங்களும் பொருளாதாரத் துறையில் ஏற்றங்களும் காணப்பட்டன. மூலப் பொருளான ரப்பர் ஈயம் போன்ற முக்கிய பொருள்கள் மூலம் அந்நிய செலவாணியும் உயர்ந்தது. தொடர்ந்து மலேசியாவின் வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு அவை முன்னெடுக்கப்பட்டன. உலக அரங்கில் மலேசியா பெருமையோடு வலம் வந்தது. காமன் வெல்த் நாடுகளில் மலேசியாவும் அங்கம் பெற்றது. 1970 க்குப் பிறகு மள மள வளர்ச்சி யில் உலக நாடுகள் மலேசியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த பொன்னான பொற்காலமாகும். நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட துங்குவை நினைவுகூரும் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் (பத்து ரோடு) துன் சம்பந்தன் நினைவாக ஜாலான் துன் சம்பந்தன் (பிரிக்பீல்ட்ஸ்) மற்றும் ஜாலான் தான் சியூ சின் ஆகிய சாலைகள் காலம் கடந்தாலும் அவர்களின் பெயர்களை இன்றும் இனி என்றும் நினைவுப் படுத்திக் கொண்டிருக்கும். அம்னோ, மஇகா, மசீச எனும் மூன்று மிகப் பெரிய அரசியல் கட்சிகள் இணைந்து புதிய மலேசியாவின் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் நாட்டை வளம் மிகுந்த நாடாக மாற்றி அமைத்துள்ளது. எனினும் சிற்சில அரசியல் மோதல்கள் கருத்து மோதல்கள் வந்தும் நாட்டின் பாதுகாப்பும் நிலைத் தன்மையும் இன்னமும் நாட்டு மக்களால் அதிகமாக பேணிக் காக்கப்பட்டு வருகின்றன. நாம் சுதந்திர நாட்டில் வாழ்கிறோம் என்ற பெருமை நமக்கு மட்டுமல்ல. நாட்டில் பிறந்த அனைவருக்கும் நிச்சயம் உண்டு. இன்று 58 ஆம் ஆண்டு மலேசிய தினத்தை நாம் அனைவரும் ஒருமனதோடு மிதமான கொண்டாட்டத்தில் பங்கெடுத்து தேசிய உணர்வோடு இந்த நன்னாளை வரவேற்போம். வாழ்க மலேசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + one =