மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை பட்டதாரிகள் தங்கப் பதக்கம் பெற்றனர்

நேற்று நடந்த மலாயாப் பல்கலைக்கழகத்தின் 60 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் இந்திய ஆய்வியல் துறையின் 11 பேர் இளங்கலைப் பட்டத்தையும் மூவர் முதுகலைப் பட்டமும் மூவர் முனைவர் பட்டத்தையும் பெற்றனர். இந்த பட்டதாரிகளைக் கௌரவிக்கும் பொருட்டாக கடந்த 12 ஆண்டுகளாக தங்கப் பதக்கங்களை வழங்கி கௌரவிக்கும் ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர் கொடை நெஞ்சர் ஓம்ஸ் தியாகராஜன் அவர்கள் இந்த ஆண்டும் வழங்கி சிறப்பு செய்தார். இளங்கலை பட்டம் பெற்றவர்கள் சிவம் தமிழ்ச்செல்வன், பிரேம்ராஜ் பிச்சமுத்து, அர்ச்சனா முனியாண்டி, சுகன்யா மோகன், ஹென்ரீத்தா பெருமாள், மோனிஷா விஷ்ணு, விக்னேஸ்வரி சிவன், மவித்ரன் கிருஷ்ணன், துளசி மருததுரை, ரோஷினி ரவீந்திரன், வைதாரணி சாந்தீபன் முதலானோர் ஆவர். முதுகலைப் பட்டம் பெற்றோர் தேவி வடிவேலு, மகேஸ்வரன் சந்திரம், நவீன் யோகேஸ்வரன் ஆகியோராவார். மற்றும் தர்மலிங்கம் நடராஜன் , ரவீந்திரன் மாரயா, சங்கர் முனுசாமி ஆகியோர் முனைவர் பட்டம் பெற்றனர். இந்த நிகழ்விற்கு பிரதான விருந்தினராக ஓம்ஸ் குழுமத்தின் தலைவர் ஓம்ஸ் தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டார். உடன் நிகழ்வினை மேலும் சிறப்பு செய்ய கலைப்புலத்தின் டீன் பேராசிரியர் டத்தோ டேனி வோங் அவர்களும் மேனாள் துணை அமைச்சர் தான்ஸ்ரீ க. குமரன் அவர்களும் கலந்து கொண்டனர், சிறப்பு அழைப்பாளர்களாக மேனாள் இந்திய ஆய்வியல் துறைத் தலைவர்கள் முனைவர் சு. குமரனும் முனைவர் கிருஷ்ணன் மணியமும் வருகை தந்தனர். ரவாங் எஸ்.பி கேர் மருத்துவமனையின் டாக்டர் சத்திய பிரகாஷ் மற்றும் தமிழ் மலர் தலைமை நிர்வாகி டத்தோ பெரியசாமி அவர்களும் சிறப்பு பிரமுகர்களாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும், இந்நிகழ்வினை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து இந்திய ஆய்வியல் துறையின் தலைவர் முனைவர் சு. மணிமாறன் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார். அவருடன் துறையின் விரிவுரையாளர்கள் பேராசிரியர் மு. இராஜேந்திரன், முனைவர் கோ. சிவபாலன், முனைவர் இரா. மோகனதாஸ், முனைவர் சில்லாழி, முனைவர் ரவீந்திரன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்திய ஆய்வியல் துறையின் மூன்றாம், இரண்டாம் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் மிகவும் சிறப்பாக இந்நிகழ்வினை நடத்துவதில் செயல்பட்டனர் என்றால் அது மிகையாகாது. தங்கப்பதக்கம் பெற்ற பட்டதாரிகள் யாவரும் பேசும் பொழுது தாங்கள் கடந்து வந்த பாதையை மறக்கவில்லை. கண்டிப்பாக இந்த சமுதாயத்திற்கு தங்களால் இயன்ற சேவையை வழங்குவதாக குறிப்பிட்டனர். மேலும் ஓம்ஸ் பா. தியாகராஜன் வழங்கும் இந்த தங்க பதக்கம் தங்களுடைய உழைப்பிற்குக் கிடைத்த ஊதியம் என்றும் குறிப்பிட்டனர். மேலும் இந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவினை தங்களது பெற்றோர்கள் நேரடியாக காண முடியாதது தங்களுக்கு வருத்தமளித்தாலும் ஐயா ஓம்ஸ் பா. தியாகராஜன் அவர்களின் கரத்தால் அவர்கள் தங்கப்பதக்கம் பெற்றதை தங்களுடைய பெற்றோர்கள் கண்டபோது அவர்கள் மனமகிழ்ச்சிக் கொண்டிருப்பர் என்று மகிழ்வுடன் கூறினார்கள். தொடர்ந்து பேசிய மேனாள் துறைத் தலைவர் முனைவர் குமரன் மாணவர்களைப் பாராட்டிப் பேசியதுடன் இனி வரும் மாணவர்களும் தங்கப் பதக்கம் பெறுவதை ஒரு உத்வேகமாகக் கொண்டு கடினமாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அடுத்து பேசிய மேனாள் துறைத் தலைவர் கிருஷ்ணன் மணியம் மாணவர்களுடன் அவர் பயணித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். மாணவர்கள் யாவரும் திறமைசாலிகள் என்றும் அவர்களுக்கு சரியான தூண்டுகோல் கிடைத்தால் நிச்சயமாக ஒளிர்வார்கள் என்றும் கூறினார். தொடர்ந்து தனது மேற்பார்வையில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்ற முனைவர் ரவீந்திரன் தற்போது இந்திய ஆய்வியல் துறையில் நவீன இலக்கியம் போதிக்கும் விரிவுரையாளராகப் இருப்பது தனக்குப் பெருமை அளிப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த நிகழ்விலே ஒரு முத்தாய்ப்பு வைத்தது போல முனைவர் ந. தர்மலிங்கம் அவர்கள் மெய்கண்டார் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றதை அனைவரும் பாராட்டிப் பேசினர். முனைவர் ந. தர்மலிங்கம் இந்த நாட்டில் சைவ சமயத்தைப் பற்றி மிகவும் ஆழமான அறிவு பெற்றவராக விளங்குவதுடன் பல நற்பணிகளையும் ஆற்றி வருகிறார். இவரைப் போலவே மலேசிய வானொலியில் நீண்ட நாள் செய்திப் பிரிவில் பணியாற்றி வரும் மு. சங்கர் அவர்களும் தன்னுடைய தமிழ்ப்பணி மேலும் தொடரும் என்று பகர்ந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + four =