மரணத்தின் பீதியில் மக்கள் ஜனநாயகத்தை வாழவிடுங்கள்

அன்றாடம் அதிகரித்து வரும் கோவிட்19 தொற்றை கண்டு மக்கள் மரண பீதியில் இருக்கின்றனர். தொற்றை கட்டுப்படுத்துவதற்காக என்று கூறி விதிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு தடையினால் வணிகர்கள், சுய தொழில் செய்பவர்கள் கடுமையான பொருளாதார பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இந்த கட்டுப்பாடு தடை உத்தரவின் விளைவாக லட்சக்கணக்கானோர் வேலை இழந்து வருமானம் இல்லாமல் தவிக்கின்றனர். பலர் மன உளைச்சலின் காரணமாக தற்கொலையை நாடியுள்ளனர். இந்நிலை எந்த நம்பிக்கை தரும் முன்னேற்றத்தை அடையாமல் தொடர்ந்து நலிந்து கொண்டே போவதால் மக்கள் அரசாங்கம் தோல்வியுற்றதாக கருதுகின்றனர். ஆகவே, இந்த அரசாங்கம் அகற்றப்பட்டு புதியதோர் தலைமைத்துவத்தின் கீழ் அரசு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடுகிறது. மலேசிய வரலாற்றில் முதல் முறையாக அனைத்து நாடாளுமன்ற வரம்புகளையும் புறந்தள்ளி நடக்கின்ற ஒரு நாடாளுமன்ற கூட்டமாக இது வர்ணிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்து நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை நிலை நாட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து மட்டத்திலும் ஒலிக்கிறது. ஒன்று எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடினின் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி நாட்டின் போக்கை தலைவிதி என்று ஏற்றுக் கொள்வது. அல்லது திறமையற்ற இந்த அரசாங்கத்திற்கு ஒரு முற்றுபுள்ளி வைத்து நாடு அடுத்த நகர்வை நோக்கி செல்வது. உலக நாடுகளில் நடந்ததுதான் கோவிட்-19 தொற்றை முறையாக கையாளவில்லை என்ற காரணத்திற்காக உலகில் பல நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலக ஜாம்பவான் என்று வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் அதிபராக இருந்த டொனால்ட் டிரம்புக்கு எதிரான தேர்தல் பிரசாரத்தில் கோவிட்-19 விவகாரத்தை அவர் முறையாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு பிரதானமாக வைக்கப்பட்டு அவரது தோல்விக்கு அதுவும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. உலகில் மற்ற பல நாடுகளில் நடப்பு அரசாங்கத்தின் தலைவர்கள் தொற்றை கட்டுப்படுத்த முடியாத காரணத்திற்காக பதவி விலகியிருக்கின்றனர். ஆனால், மலேசியாவில் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்து மக்களை தொடர்ந்து துன்பப்படுத்தி வரும் அரசாங்கத்திற்கு எதிராக முறையாக மக்களின் குரல் எடுத்துச் சொல்லப்பட வேண்டும் என்றால் அது மக்களின் மன்றமான நாடாளுமன்றம் தான். ஆனால், அந்த வாய்ப்பை வழங்காமல் நாடாளுமன்றத்தின் வழக்கமான நடவடிக்கைகளுக்கு தடையாக அரசாங்கம் செயல்படுவதும் சபாநாயகர் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதும் ஜனநாயகத்திற்கு படு பாதகமான செயல் என்று பல தரப்பிலிருந்து குரல் எழும்பிய வண்ணம் இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்படாத அரசு தற்சமயம் ஆட்சியில் இருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கிடையாது. தாங்கள் தேர்ந்தெடுக்க ஓர் அரசு தங்களை கைவிட்டதாக மக்கள் எண்ணி நிறைவடைய கூட முடியாத அவல நிலை மலேசிய மக்களை வாட்டி எடுக்கிறது. அனைத்து தரப்பு மக்களாலும் நிராகரிக்கப்பட்ட ஒரு கூட்டமைப்புதான். இன்றைய பெரிக்காத்தான் நேஷனல் அரசு. சீன சமூகம் முமுமையாக நிராகரித்து ஒரே ஒரு இடத்தில் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற மசீச, இந்த அரசாங்கத்தில் சீனர்களின் பிரதிநிதிகளாக இருக்கிறது. இந்திய சமூகத்தால் முழுமையாக நிராகரிக்கப்பட்டு ஒரே ஒரு இடத்தை பொதுத்தேர்தலில் வென்ற மஇகா இந்த அரசாங்கத்தில் இந்தியர்களின் சார்பில் ஓர் அங்கமாக இருக்கிறது. மலாய்க்காரர்களின் பெரும்பான்மை செல்வாக்கை இழந்த அம்னோ இன்று 2 பிரிவுகளாக இருக்கிறது. ஒரு பிரிவு அரசாங்கத்தின் உள்ளேயும் ஒரு பிரிவு அரசாங்கத்தை எதிர்த்து வெளியேயும் இருக்கிறது. வெறும் 6 இடங்களை மட்டுமே கொண்ட பெர்சத்து கட்சி அம்னோவிலிருந்து தாவிய 16 பேர் பக்காத்தானிலிருந்து தாவிய 11 பேரை வைத்து ஓர் நிராகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் கூட்டமைப்பாக இருக்கும் இந்த அரசாங்கம் தனது திறமையற்ற நிர்வாக செயல் நடவடிக்கையால் மக்களை தொடர்ந்து துன்புறுத்துவது ஜனநாயகத்தின் முதுகெலும்பை நொறுக்கும் ஒரு கடுமையான செயலாகும். அம்னோவின் நாடகம் முடிவிற்கு வர வேண்டும் பிரதமரையும் அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சிக்கும் பல அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் அரசாங்கத்தின் பகுதியில் அமர்ந்திருப்பதால், அவர்கள் அரசாங்கத்தின் ஒரு அங்கமாகத்தான் உள்ளனர். ஆகவே, மக்கள் உண்மையை அறிய விரும்புகிறார்கள், வாழ்வா சாவா என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளா நிலையில், அரசியல்வாதிகளின் விளையாட்டில் மக்களுக்கு இனி ஆர்வம் இல்லை. அவர்களுக்கு சட்டரீதியிலான ஆலோசனைகள், அறிவிப்புகள் தேவையில்லை, தங்கள் வாழ்க்கையை மேலும் குழப்பிக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை. மக்கள் தொடர்ந்து தோல்வியுற்ற அரசாங்கத்தின் பிடியில் இருப்பதா அல்லது மக்களின் முடிவிற்கு மதிப்பளிப்பதா என்ற தேர்வை செய்ய வேண்டிய கடமையில் அம்னோ கட்சி இருக்கின்றது. இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது அரசாங்க பிரதிநிதிகள் மத்தியில் அமர்ந்து பிரதமர் முஹிடின் யாசினுக்கு ஆதரவளிப்பதா அல்லது எதிர் கட்சிகளின் வரிசயில் அமர்ந்து ஒரு தீர்க்கமான செய்தியை அரசுக்கு சொல்வதா என்பதை முடிவு செய்யுமாறு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் சார்பாகவும், மக்களின் சார்பாகவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அம்னோ உறுப்பினர்கள் தொடர்ந்து அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு பிரதமரை கட்சி ஆதரிக்கவில்லை என்று இரட்டை நிலைப்பாட்டை கூறி வருவது அரசியல் பார்வையில் மிகவும் நகைப்புக் குரியதாக இருக்கிறது. இப்படியே அம்னோ தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து தனித்தனியே கொள்கைகளை வகுத்துக் கொண்டு கட்சி உறுப்பினர்களையும் நாட்டு மக்களையும் ஏளனப் படுத்திக் கொண்டு இருக்க முடியாது. இந்த இரட்டை நிலைப்பாட்டை முடிவிற்கு கொண்டு வரும் இறுதி நாளாக இன்றைய நாடாளுமன்ற கூட்டம் அமைகிறது. இன்று ஒர் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் கட்டாய சூழ்நிலையில் ஒவ்வொரு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். முஹிடினா-அன்வாரா? எதிர்க்கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட, தங்களது சுய அரசியல் நன்மை குறித்து அக்கறை கொள்வதை நிறுத்தி விட்டு, அவர்கள் அரசாங்கத்தை ஆதரிக்கிறார்களா அல்லது இன்று நாட்டு மக்களின் ஒருமித்த நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமை ஆதரிக்கிறார்களா என்பதையும் முடிவு செய்ய வேண்டிய ஒரு கட்டாய தருணத்தில் இருக்கின்றனர். காரணம் நாட்டின் நிலைமை மக்களை வாழ்வா சாவா என்ற நிலைக்கு இட்டுச் சென்றிருப்பதுதான். அன்வாரை தவிர எதிர் தரப்பில் மாற்று தலைவர் ஒருவர் இல்லை என்பதனால் எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்கள் தங்களது சுய அரசியல் வியூகங்களை விட்டுவிட்டு பொதுவான ஒரு நிலைக்கு வர வேண்டும். அரசாங்கத்தை மாற்றுவதற்கான ஒரு நகர்வை மேற்கொள்ள “கண்ணியமும் தைரியமும்“ கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதையும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உண்மையில் எங்கு நிற்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள மட்டுமே மலேசியர்கள், இன மத பேதமின்றி இரு நேர் கோட்டில் நிற்கின்றனர் என்பது சமூக வலைத்தளங்களில் உள்ள பதிவுகளின் வழி பார்க்க முடிகிறது. மலேசியாவிற்கு நாடாளுமன்ற ஜனநாயகம் வேண்டும் 2020 ஆம் ஆண்டில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (அபெக்) கூட்டத்தில் மலேசியாவிற்கு நாடாளுமன்ற ஜனநாயகம் வேண்டும் என்று கூறியுள்ளார். அவரது வார்த்தையில் உண்மை இருந்தால் எதிர்க்கட்சித் தலைவரின் பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அந்த பிரேரணையில் பிரதமர் வெற்றி பெற்றால் அவரிடம் பெரும்பான்மை இருப்பதை அது எடுத்துக் காட்டும். அவர் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் ஆட்சி செய்யலாம். ஒரு வேளை பிரதமர் தோல்வியுற்றால் கண்ணியத்துடன் பிரதமர் பதவி விலக வேண்டும். இது தான் ஜனநயாகம். அனைத்துலக அரங்கில் மலேசியாவிற்கு ஜனநாயகம் வேண்டும் என்று முழங்கிய பிரதமர் நாடாளுமன்றத்திற்குள்ளே எதிர்க்கட்சி தலைவரின் பிரேரணையை நிராகரித்து ஜனநாயகத்தின் குரல் வலையை நெரிக்கலாமா என்பதுதான் இன்றைய அரசியல் அரங்கில் முன் வைக்கப்படும் முக்கிய விவாதங்கள். பல குடும்ப உறுப்பினர்களையும் சக நண்பர்களையும் இழந்து விட்டு தவிக்கும் நாட்டு மக்கள் சரியான முறையில் செயல்படும் அரசாங்கத்திற்குச் செல்ல வேண்டிய நேரம் இது. மக்கள் மரண பீதியில் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். ஜனநாயகத்தின் வழி ஒரு தீர்வை மக்கள் எதிர்பார்க்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இன்று கூடும் நாடாளுமன்றத்தில் ஜனநாயக மரபுக்குட்பட்டு ஜனநாயகத்தை வாழ வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 5 =