மனிதநேயச் சேவைகளில் மாண்புறும் பூச்சோங் நெடுஞ்செழியன்

கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன் பாடல் வரிகள். இனியன என்பேன்; தமிழை உயிர் என்பேன். உண்மை துய்க்கும் சத்தியமான உயிர் வரிகள். ஆழமான அர்த்தம் அருவிச் செல்கிறது. அந்த வரிகளில்தான் பூச்சோங் டாக்டர் நெடுஞ்செழியன் அவர்களும் இனிது பேசுகின்றார். பழகியவர்களும் சொல்கிறார்கள். பார்த்தவர்களும் சொல்கிறார்கள். மக்களின் பார்வை என்னவோ அதுவே மகேசன் பார்வை என்பார்கள். உண்மை. ஒரே வார்த்தையில் இப்படி முடித்து விடலாம். தமிழோடு வாழ்ந்து தமிழர்களோடு கலந்து வாழும் ஓர் எளிமைத் தமிழர். அவரின் பேச்சில் தமிழ்; அவரின் மூச்சில் தமிழ். அதே பாவனையில் அவரின் நகர்வுகள் அனைத்திலும் தமிழ்; தமிழர்; தமிழர் இனம்; தமிழ்ச் சமூகம்; தமிழ்ப் பள்ளிகள். இப்படி தமிழ் சார்ந்து பயணம் போகும் ஒருவரை நாம் தெரிந்து கொள்வதில் பெருமைப் படுவோம். அடுத்து வரும் நம் சந்ததியினரும் தெரிந்து கொள்ள வேண்டும். கிள்ளான் ஜாலான் காப்பார் கிராமப் பகுதியில் பிறந்து வளர்ந்தவர் டாக்டர் நெடுஞ்செழியன். முன்பு காலத்தில் 1960 – 70-களில் அது ஒரு ரப்பர் தோட்டம். பின்னர் அங்கு வசித்தவர்கள் சொந்தமாக நிலங்களை வாங்கி வீடுகளைக் கட்டிக் கொண்டார்கள். நிறைய சீனர் மலாய்க்காரக் குடும்பங்கள். அவர்களிடம் நெருங்கிப் பழகியதால் இப்போது நெடுஞ்செழியன் மலாய் மொழியில் சிறந்து விளங்குகிறார். அதன் தாக்கத்தில் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே ஜாவி எழுத்து முறையையும் படித்து இருக்கிறார். அந்தக் காலத்தில் மூன்று இன மக்களும் ஒரே கிராமத்தில் பக்கத்து பக்கத்து வீடுகளில் வாழ்ந்தார்கள். இந்த வீட்டில் சீனர். அந்த வீட்டில் மலாய்க்காரர்; பக்கத்து வீட்டில் தமிழர். அண்ணன் தம்பிகளாய் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தார்கள் என்று சொல்லலாம்.

ஒவ்வொரு வீட்டிலும் ஆடு மாடுகள் இருக்கும். அவர் வீட்டுக் கோழி இவர் வீட்டுக்கு வரும். இவர் வீட்டு ஆடு அவர் வீட்டுக்குப் போகும். இரண்டுகால் கோழிகளுக்கும் நாலுகால் ஆடுகளுக்கும்கூட புரிந்துணர்வு இருந்தது. மக்களிடம் இனப் புரிந்துணர்வு உச்சம் பார்த்தது. இப்போது அதுவே ஒரு கேள்விக்குறி. ஆனாலும் பல இன சமுதாயத்தில் புரிந்துணர்வு மிக மிக முக்கியம் என்கிறார் நெடுஞ்செழியன். இவருடைய தந்தையார் வேங்கு மலாயா தமிழர் இயக்க நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்வார். கிள்ளான் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிறையவே ரப்பர் தோட்டங்கள். நிறையவே தமிழர்கள். நிறையவே தமிழர்ச் சங்கங்கள். தமிழர் திருநாள்; பொங்கல் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் டாக்டர் நெடுஞ்செழியன் தன் தந்தையாருடன் தொற்றிச் செல்வார். ஒரு நிகழ்ச்சி இரு நிகழ்ச்சிகள் அல்ல. பல நூறு நிகழ்ச்சிகள். பட்டியல் நீண்டு போகும். அந்தக் கால கட்டத்தில் தமிழர்களின் பிள்ளைகள் பல்கலைக்கழகம் போவது குதிரைக் கொம்பு. அப்படியே போனாலும் நிதிப் பற்றாக்குறை. பெரும்பாலான தமிழர்களுக்கு கடன் தொல்லைகள் அதிகம். அப்போது நெடுஞ்செழியனின் தந்தையார் வேங்குவின் தமிழர் இயக்கங்கள் ஒன்று சேர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டுவார்கள். அதில் வரும் வருமானத்தை எடுத்து கஷ்டப்படும் பிள்ளைகளுக்கு வழங்குவார்கள். இப்படி நிறைய பிள்ளைகளுக்கு உதவி செய்து இருக்கிறார்கள். அதனால் தானோ என்னவோ தெரியவில்லை நெடுஞ்செழியனிடம் இன்றும் தமிழர் சார்ந்த உணர்வுகள் மேலோங்கி நிற்கின்றன. ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் உணர்வுகளும் உயர்ந்து நிற்கின்றன. படிக்கும் பழக்கம் தானாக வர வேண்டும். யாரும் சொல்லி வரக் கூடாது. யாரும் வற்புறுத்தி வரக் கூடாது. இதைத்தான் நெடுஞ்செழியனின் தந்தையார் அடிக்கடி சொல்வார்.

பொதுவாகவே கல்விதான் டாக்டர் நெடுஞ்செழியனின் இலக்கு. அதைத்தான் எல்லாக் கட்டங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லோரிடமும் வலியுறுத்தி வருகிறார். குறிப்பாகத் தமிழர்களிடம் கல்வியின் முக்கியத்துவத்தைச் சற்று அழுத்தமாகவே சொல்லி வருகிறார். மலேசியத் தமிழர்களுக்கு அரசியல் பலம் இல்லை. பொருளாதார பலம் இல்லை. ஒரே ஒரு பலம் தான் இருக்கிறது. அதுதான் கல்வி என்கிற பலம். அதை வைத்துத் தான் நம் தமிழர் இனத்தை வலுப் பெறச் செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு பட்டதாரி என்பது நம் மூத்தவர்கள் சொன்னதாக இருக்கலாம். ஆனால் அதை நாம் மாற்றி அமைக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் எல்லோருமே பட்டதாரிகள் எனும் நிலையை உருவாக்க வேண்டும். நல்ல ஒரு தெளிவான சிந்தனை. இதற்காகவே மலேசியா சாங் கஞ்சில் அறவாரியத்தை உருவாக்கி விழிப்புணர்வு சொற்பொழிவுகளை நடத்தி வருகிறார். மலாயா பல்கலைக்கழகத்தில் தன்னுடன் படித்தவர்களையும் துணையாகக் கொண்டு நல்ல ஆக்கப் பூர்வமான செயல் திட்டங்களை இவர்கள் செய்து வருகிறார்கள். குறிப்பாக தமிழ்ப்பள்ளிகள் இவர்களின் தலையாய இலக்கு. சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி; கோலகுபுபாரு தமிழ்ப்பள்ளி; கிள்ளான் வட்டாரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஊக்குவிப்பு விழிப்புணர்வுக் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறார்கள். சுங்கை பூலோ ஆர்.ஆர்.ஐ. தமிழ்ப்பள்ளியில் நெடுஞ்செழியனின் பிள்ளைகள் படிக்கும் காலத்தில் அவர் அந்தப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக மூன்றாண்டுகள் பதவி வகித்து உள்ளார். தலைவராக இருந்த காலத்தில் அந்தப் பள்ளிக்குப் பல வகையில் உதவிகள் செய்து உள்ளார். என்ன உதவிகள் என்று கேட்ட போது ‘நாம் செய்ததைச் சொல்லிக் காட்டுவது நல்ல பழக்கம் அல்ல. நியாயமும் அல்ல. யாருக்காகச் செய்தோம். நம் பிள்ளைகளுக்காகச் செய்தோம். அதைச் சொல்லிக் காட்டிப் பெரிது படுத்துவது சரி அல்ல’ என்று அமைதியாக மறுத்து விட்டார்.

சுங்கை பூலோ ஆர்.ஆர்.ஐ. தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியை திருமதி அலிமா; திருமதி சரஸ்வதி; திரு. விஸ்வநாதன் போன்றோர் அருமையானவர்கள். இவர்களின் ஆதரவுடன் நிறைய கல்விச் செயல்பாடுகள் நிறைவேறி உள்ளன என்கிறார் டாக்டர் நெடுஞ்செழியன். அந்தக் கட்டத்தில் சுங்கை பூலோ ஆர்.ஆர்.ஐ. தமிழ்ப்பள்ளியில் 350 மாணவர்கள். ஆறாம் வகுப்பில் மட்டும் 84 மாணவர்கள். ஏறக்குறைய 40 ஆசிரியர்கள். இவருடைய மகனும் அங்கு படித்தவர் தான். யு.பி.எஸ்.ஆர். தேர்வில் எல்லாப் பாடங்களிலும் ‘ஏ’ எடுத்தவர். அந்த வகையில் நெடுஞ்செழியனுக்கு உதவியாக இருக்கும் அவருடைய சக தோழர்களுக்கும் நன்றி சொல்வோம். நாடறிந்த கவிஞர் நற்புகழ் ஆசான்; பாப்பாவின் பாவலர் முரசு நெடுமாறன். கவிதை உலகில் முடிசூடா மன்னர். இவர் தான் டாக்டர் நெடுஞ்செழியனுக்கு எஸ்.பி.எம். தேர்வில் தமிழ் போதித்த ஆசிரியர். ஆசான் எவ்வழியோ அவ்வழியே மாணவன். அது போல நெடுஞ்செழியன் தமிழில் சிறப்புத் தேர்ச்சி பெற்று சிறந்து விளங்குகிறார். மேலும் ஒரு தகவல். டாக்டர் நெடுஞ்செழியனின் மருத்துவகத்தில் ஒரு சின்ன நூல் நிலையம். அங்கே அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் நூல்களில் பெரும்பாலானவை தமிழ் நூல்கள். பாரதிதாசன் கவிதைகள்; பாரதியார் பாடல்கள்; அகிலன்; மு.வ; ஜெயகாந்தன்; ரமணி சந்திரன் நூல்கள் வரிசையில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் தான் அதிகமாக உள்ளன.
அவற்றுள் முரசு நெடுமாறன் எழுதிய ’மலேசியத் தமிழரும் தமிழும்’ எனும் நூலும் உள்ளது. சொல்ல மறந்த செய்தி. 2016 – 2017-ஆம் ஆண்டுகளில் யாயாசான் சான் கஞ்சில் எனும் இயக்கத்தின் வழியாக செடிக் அமைப்பில் இருந்து நிதியுதவி பெறப்பட்டது. ஏழு பள்ளிகளில் 300 மாணவர்களுக்குப் பரத நாட்டியம் சொல்லிக் கொடுக்கப்பட்டது. இது ஒரு வருட காலப் பயிற்சியாகும். சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி; கோலகுபுபாரு தமிழ்ப்பள்ளி; சுங்கை செடுட் தமிழ்ப்பள்ளி; வலம்புரோசா தமிழ்ப்பள்ளி; ஜெராம் புரான்ஸ்டன் தமிழ்ப்பள்ளி; கிள்ளான் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி; ஆர்.ஆர்.ஐ. தமிழ்ப்பள்ளி; ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வகுப்புகள். இலவசமாக உணவு; இலவசமாக பரதநாட்டிய அணிகலன்கள்; இலவசமாக நாட்டியக் கையேடுகள்.

மாணவர்களுக்கு தகுதி இருக்கிறது. திறமை இருக்கிறது. ஆனால் பணபலம் இல்லை. அப்படிப் பட்டவர்களுக்கு அனுபவம் பெற்ற நாட்டிய ஆசிரியைகளைக் கொண்டு பரதநாட்டியம் சொல்லிக் கொடுக்கப்பட்டது. இறுதியாகச் சலங்கைப் பூஜையும் செய்யப்பட்டது. ஒரு பரதநாட்டியப் பாடத் திட்டத்தை உருவாக்கிச் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். பெரிய விசயம். செடிக் மூலமாக நிதி கிடைத்தது உண்மைதான். ஆனால் ஆள்பலம் வேண்டும்; அனுபவ பலம் வேண்டும்; உழைப்பு அர்ப்பணிப்பு உணர்வுகள் எல்லாம் வேண்டுமே. இவற்றை எல்லாம் பணத்தைக் கொண்டு வாங்கிவிட முடியுமா? சொல்லுங்கள். மனிதநேயம் தான் ஒரு மனிதனை மனிதனாக வாழக் கற்றுக் கொடுக்கிறது.டாக்டர் நெடுஞ்செழியனைப் பற்றிய பொதுவான விசயங்கள்.

 1. மலேசியா சாங் கஞ்சில் அறக்கட்டளையின் தலைவர் (Chairman, Malaysia Sang Kancil Foundation);
 2. பூச்சோங் அனைத்துலகப் பல் மருத்துவகங்களின் தலைமை நிர்வாக அதிகாரி (Chief executive officer at MY Dental International Clinics Sdn. Bhd. Puchong);
 3. மலேசியத் தனியார் பல் மருத்துவகங்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் (President of Malaysian Private Dental Practitioners’ Association 2005 – 2008);
 4. அரச ஆஸ்திரேலியா பல் அறுவை சிகிச்சை கல்லூரியின் ஆய்வு நிலையாளர் (Fellowship of the Royal Australasian College of Dental Surgeons (Australia);
 5. மலாயா பல்கலைக்கழகப் பல் மருத்துவத் துறையில் பகுதி நேர விரிவுரையாளர்.
 6. பல் அறுவை சிகிச்சை மருத்துவத்தில் அவரின் அரிய சேவைகளுக்காக மூன்று அனைத்துலக விருதுகள் (FICD, FADI, FICCDE)
 7. மலேசியப் பல் மருத்துவர் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் (Malaysian Dental Association council member)
 8. 2009-ஆம் ஆண்டு அனைத்துலகப் பல் மருத்துவம் அறிவியல் மாநாடு; வர்த்தகக் கண்காட்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் – மலேசியா (Organising Chairman of 16th FDI/MDA Scientific Convention & Trade Exhibition 2009)
 9. பல்வேறு அனைத்துலக அறிவியல் மாநாட்டில் மலேசியாவைப் பிரதிநிதித்தவர். எ.கா: 2008-ஆம் ஆண்டு சுவீடன், ஸ்டாக்ஹோம் நகரில் நடந்த அனைத்துலக மாநாடு.

சமுதாய நிலைப்பாட்டில் அவரின் கருத்து. சமுதாயம் என்பது நம் உடலின் ஒரு பகுதி. நாம் தனியாக இயங்க முடியாது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. சமுதாயத்தை அனுகித்தான் நாம் செல்ல வேண்டும். தமிழ்ச் சமுதாயம் என்று பார்க்கும் போது தமிழ்நாட்டில் நாயக்கர் காலத்தில் ஒரு முன்னூறு ஆண்டுகாலம் தமிழர்கள் அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். தமிழ்க்கல்வி மறுக்கப்பட்ட காலம். அதாவது தமிழர்களுக்குத் தமிழ்க்கல்வி நிராகரிக்கப்பட்ட காலம். அதன் பின்னர் ஆங்கிலேயர்களின் காலனித்துவ ஆட்சி. அப்போதும் தமிழர்களுக்குத் தமிழ்க்கல்வியில் மீட்சி இல்லை. வளர்ச்சி பெற்ற தமிழர்கள் இல்லை. காட்டுவாசிகள் போல ஒரு வாழ்க்கை. இருப்பினும் அவற்றில் இருந்து தப்பித் தாண்டி; கல்வி கற்று; மீண்டு வந்த சமூகம் என்பதில் நமக்குப் பெருமைதானே. நம்முடைய மரபு அணுக்களிலேயே தமிழர்களுக்கு என்று தனிதிறமை அணுக்கள் உள்ளன. விட்டுப் போகுமா. இத்துனை தமிழ் உணர்வா. இத்துனை தமிழ்ச் சிந்தனையா. என்னே சமூகப் பார்வை. மலைத்துப் போகிறேன். தமிழ் இனத்திற்கும்; தமிழ் மொழிக்கும்; தமிழ்ப் பள்ளிகளுக்கும்; சத்தம் இல்லாமல் யுத்தம் இல்லாமல் சமூகப் பணிகளைச் செய்து வருகிறார். ஒரு சாதாரண மனிதர். டாக்டர் நெடுஞ்செழியன். ஆர்ப்பாட்டம் இல்லாமல்; ஆரவாரம் இல்லாமல்; எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல்; மிக அமைதியாகப் பயணிக்கின்றார். ஏறக்குறைய 25 ஆண்டு காலமாகத் தமிழ் மொழி – தமிழ்ப்பள்ளிச் சேவைகள். தவிர பல்வகையில் தமிழினத்திற்குச் சேவைகள். வாழ்த்த வேண்டிய மனிதர். என்னைப் பெரிதும் கவர்ந்தது அவரின் எளிமையின் எளிமை. அந்த வகையில் பூச்சோங் நெடுஞ்செழியன் என்பவரும் பூச்சோங் தமிழர்களின் எளிமை வாசலில் எழில் தோற்றம் காண்கின்றார். ஒரு மருத்துவராகத் தொழில் சேவைகள் செய்தாலும் அனைத்து இனங்களைச் சார்ந்த பாமரர்களும் இவரைப் போற்றுகின்றார்கள். இவரின் மனிதநேயச் சேவைகளைப் பாராட்டுகின்றார்கள். மூத்தவர்கள் கைக்கூப்பிச் செல்கின்றார்கள். நானும் சிரம் தாழ்த்துகிறேன். பூச்சோங் நெடுஞ்செழியன் நோய் நொடி இல்லாமல் நீண்ட காலம் பயணிக்க வேண்டும். நாட்டிற்கும் நம் தமிழ்ச் சமூகத்திற்கும் நிறைய சேவைகள் செய்ய வேண்டும். பெருமைகள் சேர்க்க வேண்டும். புகழோங்க வேண்டும். திருவள்ளுவரின் திருபாதங்கள் அவருக்குச் சமர்ப்பணம். மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார்.

(முற்றும்)

சான்றுகள்:

 1. Nedu The Dentist Klinik Pergigian Puchong – https://www.whatclinic.com/dentists/malaysia/kuala-lumpur/bukit-jalil/nedu-the-dentist-klinik-pergigian-puchong
 2. Nedunchelian Vengu – University of Malaya Department of Oral Pathology & Oral Medicine & Periodontology Nedunchelian Vengu
 3. Sang Kancil Foundation Malaysia – https://www.hati.my/yayasan-sang-kancil-malaysia/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + 8 =