மனதுக்குள் இருக்கும் ‘சிலந்தி வலை’

புழக்கம் இல்லாத வீட்டிற்குள் சிலந்தி வலை பின்னிவிடுவது போன்று, புத்துணர்ச்சி இல்லாத மனதுக்குள்ளும் சிலந்தி வலைபோன்ற பயனற்ற சிந்தனைகள் உருவாகிவிடும். அதனால் முடிந்த அளவு எப்போதும் மனதை புத்துணர்ச்சியாகவே வைத்துக்கொள்ளுங்கள்.

தினமும் படுக்கையில் இருந்து எழுந்ததும் மனது அலைபாயும். ஆயிரம் எண்ணங்கள் ஓடோடி வரும். தறிகெட்டு ஓடும் அந்த சிந்தனைகளை காலையிலே தடுத்து நிறுத்தி, ‘எல்லாம் இன்று நல்லபடியாக நடக்கும்’ என்ற நம்பிக்கையை மனதுக்கு கொடுங்கள். ‘பிரச்சினைகள் ஏதாவது வந்தாலும் சமாளிப்பேன்’ என்ற தைரியத்தையும் மனதில் பெருக்குங்கள்.

உங்கள் மனதில் ஏற்படும் இறுக்கத்தை போக்கி மனதை இயல்புக்கு கொண்டுவர ‘ப்ராகிரசிவ்மஸில் ரிலாக்ஷேசன்’ டெக்னிக் உதவும். இதை வீட்டில் மட்டுமல்ல, அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதும் செய்யலாம்.

செருப்பை காலில் இருந்து கழற்றிவிடுங்கள். தேவைப்பட்டால் பெல்ட்டையும் விடுவித்து, சட்டையை தளர்த்திவிட்டுக் கொள்ளுங்கள். உங்கள் வலது கால் பாதத்தில் கவனத்தை செலுத்துங்கள். பின்பு காலை நீட்டி வைத்து, முடிந்த அளவு கால் விரல்களை உள்நோக்கி மடக்குங்கள். அப்போது அந்த காலின் தசைகள் நெகிழ்வதை உங்களால் உணர முடியும். பத்து எண்ணும் வரை விரல்களை அப்படியே வைத்திருங்கள். பின்பு அதுபோல் இடது காலில் செய்யுங்கள். வயிறு, கழுத்து, தோள், முகம் போன்றவற்றுக்கும் இந்த ‘டெக்னிக்’கை பயன்படுத்தலாம். இது மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சியை தரும்.

தினமும் சிறிதுநேரம் தியானப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். முதுகை நிமிர்த்தி சவுகரியமான நிலையில் உட்காருங்கள். ஒரு கையை வயிற்றிலும், இன்னொரு கையை நெஞ்சின் மேல்பகுதியிலும் வைத்துக்கொண்டு காற்றை உள்ளே மூக்குவழியாக இழுத்து, வாய் வழியாக வெளியே விடுங்கள். வாய் வழியாக வெளியேற்றும்போது உங்கள் கை வயிற்றுப்பகுதியில் தாழ்ந்து செல்லவேண்டும். காற்றை உள்ளே இழுத்து, வெளியே விடும்போது உங்கள் முழு கவனமும் உடலுக்குள் சுவாசப்பகுதிக்குள் ஒருநிலைப்படுத்தப்பட வேண்டும்.

இப்படி செய்தால் உடலின் ஐம்புலன்களும் சுறுசுறுப்படைந்து உடலிலும், மனதிலும் உற்சாகம் பொங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + 17 =