மது விற்பனைக்குத் தடை: ஹாடி அவாங் தலையிடவில்லையா?

பலசரக்குக் கடைகளிலும் தேவைக்கு ஏற்ப செயல்படும் அங்காடிக் கடைகளிலும் மது விற்பனைக்கு மாநகர் மன்றம் தடை விதித்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
நாட்டில் ஷரியா சட்டம் நடப்பில் இருக்கின்றதா என்று பலரும் கேட்பதாக சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் ஹனிபா மைடின் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மது விற்பனைக்குத் தடை விதிக்கும் விதிமுறை நாடு முழுமைக்கும் விரிவு படுத்தப்படும் என்று துணையமைச்சர் ஒருவர் கூறியிருப்பது மேலும் வெறுப்பை அளிப்பதாக உள்ளது.
மது அருந்துவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டிருப்பதை தாம் ஏற்றுக் கொண்டாலும், மற்றவர்களின் சமய நம்பிக்கை, பழக்க வழக்கங்களை தடுக்கும் வகையில் சட்டங்கள் இயற்றக் கூடாதென கேட்டுக் கொண்டார்.
அந்தப் புதிய விதிமுறை மது விற்பனையை முறைப்படுத்த அவசியம் என்று அரசு கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.
மதுவுக்கு முற்றிலுமான தடை விதிப்பதன் மூலம் மது விற்பனையை முறைப்படுத்த முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அரசியலமைப்பு விதி 11இன் கீழ், தனி மனிதரின் உரிமை, சமய சுதந்திரத்தைக் பாதுகாக்க வலியுறுத்துகிறது.
மற்ற மதங்கள் சமய ரீதியாக மது அருந்துவதை ஏற்றுக் கொள்ளும் வேளையில் நாம் அதற்குத் தடை விதிப்பது அரசியலமைப்பு விதியை மீறுவதாகாதா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
முஸ்லிம்களைப் போன்றே, முஸ்லிம் அல்லாதவர்களும் தங்களின் சமயத்தை அனுசரிக்கவும், அதன் நடைமுறைகளைப் பின்பற்றவும் உரிமை உள்ளது என்று குறிப்பிட்ட ஹனிபா மைடின், இந்த விவகாரத்தில் இஸ்லாத்தின் வழிமுறையை வலிந்து புகுத்தக் கூடாதென்றும் கேட்டுக் கொண்டார்.
மதுவுக்குத் தடை விதிக்கும் விதிமுறையில் பாஸ் கட்சியின் தலைவர் ஹாடி அவாங் தலையிடவில்லை என்று கூறுவதை யாரும் நம்பமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், முஸ்லிம்களால் தோக் குரு என்று அழைக்கப்பட்ட கிளந்தானின் முன்னாள் மந்திரி பெசார் நிக் அப்துல் அஸிஸ் நிக் மாட், தமது காலத்தில் கிளந்தானில் மது விற்பனைக்குத் தடை விதித்தது கிடையாது என்பதை நினைவில் கொள்ள வேண்டுமென்றும் ஹனிபா மைடின் சுட்டிக் காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here