மது அருந்தி வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 50,000 வெள்ளி வரை அபராதம்

File pic

சாலைகளில் பயணம் மேற்கொள்ளும்போது, நமக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக, அரசாங்கம் கொண்டுவந்துள்ள புதிய சாலைப் போக்குவரத்து சட்டத்தை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் முழுமையாக வரவேற்றுள்ளது.
போதையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் அண்மைய காலமாக அதிகரித்துவரும் வேளையில், இந்த புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதற்காக போக்குவரத்து அமைச்சர் டாக்டர் வீ கா சியோங்கை பாராட்டுவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி ஆய்வு பிரிவு அதிகாரி என்.வி சுப்பாராவ் அறிக்கை ஒன்றின் வழியாக தெரிவித்தார்.
மது அருந்தி வாகனம் ஓட்டி, அநியாயமாக மற்றவர்களின் உயிரை பறிக்கும் குடிகார வாகனமோட்டிகளுக்கு இந்த புதிய சட்டமும் அபராதமும் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என தாங்கள் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
அக்டோபர் 23ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் இந்த புதிய சட்டத் திருத்தம், மது அருந்தாத வாகனமோட்டிகளுக்கு கிடைத்த ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும். எந்த வித பயமும் இன்றி பாதுகாப்பாக சாலையில் இனி செல்லலாம்.
மது அருந்துவது அவரது உரிமையாகும். ஆனால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்ற சட்டம் இருந்தும் அதை மீறி, வாகனம் ஓட்டி, மற்றவர்கள் உயிரை எடுக்கக்கூடிய அதிகாரம் குடிகாரர்களுக்கு கிடையாது.
ஆனால் கடந்த காலங்களில் இது போன்ற தவறுகளை செய்யும் வாகனமோட்டிகளுக்கு, குறைந்தபட்ச தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டதால், உயிரை பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருந்தது. பல அப்பாவி உயிர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மரணத்தை ஏற்படுத்திய வாகனமோட்டிகள் சுலபமாக தப்பித்தனர்.
இதனால் தொடர்ந்து பல உயிர்கள் கொல்லப்பட்டன. புதிய சட்டம் அவசரமாக தேவை என பலர் வேண்டுகோள் விடுத்தனர். அதில் பி.ப.சங்கமும் அடங்கும் என சுப்பாராவ் குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில், புதிய சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு போக்குவரத்து அமைச்சர் முயற்சி எடுத்து அது வெற்றி பெற்றுள்ளது.
இந்த புதிய சட்டத் திருத்தத்தில் மது போதையில் வாகனமோட்டி மரணத்தை ஏற்படுத்துபவருக்கு முதலாவது குற்றத்திற்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 20 ஆயிரம் வெள்ளி முதல் 50 ஆயிரம் வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படும் என குறிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது குற்றத்திற்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 50 ஆயிரம் வெள்ளி முதல் ,ஒரு லட்சம் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும்.
மேலும் வாகன லைசென்ஸ் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படும் .
மேலும் விதிமுறைகளை மீறி பொறுப்பற்ற முறையில் வாகன மோட்டும் தரப்பினரின் முதல் குற்றத்திற்காக 5 ஆண்டு சிறைத்தண்டனையும் 5 ஆயிரம் வெள்ளி முதல் 15 ஆயிரம் வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 5 =