மதுவை விட ஊழல்தான் நாட்டுக்குப் பேரழிவைத் தருகிறது!

மதுவை விட ஊழல்தான் நாட்டுக்குப் பேரழிவைத் தருவதாக பேட்ரியோட் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அது பற்றிக் குறிப்பிட்ட ஆயுதப்படைகளின் முன்னாள் அதிகாரிகள் அமைப்பின் (பேட்ரியோட்) தலைவர் முகமட் அர்ஷாட் ராஜி, மது அருந்துதல், ஊழல் நடவடிக்கையில் ஈடுபடுதல் ஆகியவற்றில் எது நாட்டுக்கும் மக்களுக்கும் பேரழிவைக் கொண்டுவரும் என்று துணையமைச்சர் அமாட் மர்ஸுக்கி ஷாரி விளக்க வேண்டுமென்று வலியுறுத்தினார். எது நாட்டுக்கு, மக்களுக்கு கேட்டைக் கொண்டுவரும்? எது மலாய்க்காரர்களை அதிகம் ஈர்க்கவல்லது என்று அவர் வினா எழுப்பினார்.
கடந்த வாரம் குடிநுழைவு அதிகாரிகள், போலீசார் மற்றும் ராணுவத்தினர் பலர் ஆள்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு, விரைவாகப் பணம் சம்பாதிக்கும் வகையில் லஞ்ச ஊழலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மது அருந்துவது அல்லது ஊழலில் ஈடுபடுவது, இதில் எது மலாய்க்காரர்களைக் கெடுக்கின்றது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
பலசரக்குக் கடை, பல்பொருள் அங்காடிகள், சில்லறைக் கடைகள், சீன மருந்துக் கடைகள் ஆகியவற்றில் அடுத்தாண்டிலிருந்து மது விற்கத் தடை விதிக்கப்படுவதாக மாநகர் மன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் மது விற்பனை க்குத் தடையானது மற்ற மாநிலங்களுக்கும் விரிவு படுத்தப்படும் என்று வேறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மலாய்க்காரர் அல்லாதோரின் உரிமையில் தலையிடுவதாக முகமட் அர்ஷாட் ராஜி சுட்டிக் காட்டினார்.
இது வரை மலேசியர்கள் சகிப்புத் தன்மை, புரிந்துணர்வு, பரஸ்பர மரியாதை ஆகியவற்றைக் கடைப்பிடித்து வாழ்ந்து வருவதை பாஸ் கட்சியினர் விரும்பவில்லை போல இருக்கின்றது.
இந்தப் புதிய விதிமுறை வியாபாரத்தைப் பாதிக்கும். மேலும், அத்தொழிலுக்கான உரிமம் வழங்கப்படாது என்ற அறிவிப்பானது, வேலையிழப்பை ஏற்படுத்தும். சிறிய தொழில் துறை, போக்குவரத்து, உணவகம், ஹோட்டல் துறை, சுற்றுலாத் துறை போன்றவற்றைப் பாதிப்பதோடு, நாட்டின் வருமானத்தையும் சரிய வைக்கும் என்று முகமட் அர்ஷாட் ராஜி எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here