மக்கள் நலனுக்காக துரோகி பட்டமா?
அதையும் ஏற்கத் தயார்- டத்தோஸ்ரீ நஜிப்

கோவிட் -19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்காக எனக்கு துரோகி என்ற கெட்டப் பெயர் கிடைத்தாலும் அதனை ஏற்கத் தயாராக இருப்பதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.
ஏற்கெனவே எனக்கு பல கெட்டப் பெயர்கள். குறிப்பாக பல ஆண்டுகளுக்கு முன்பே நான் ஒரு கொலைகாரன், ஒரு கொள்ளைக்காரன், முரடன், விபச்சாரம் செய்பவன் அல்லது நாட்டை விற்பவன் என்று அழைக்கப்பட்டேன். அப்போது எல்லாம் நான் பொறுமையாகத்தான் இருந்தேன்.
மேலும் , நீண்ட காலத்திற்கு முன்பே “அத்தோக் மற்றும் அவரது கும்பல் மூலம் பல்வேறு அழைப்புகளைப் பெற்றுவிட்டதாக அவர் கூறினார்.
இப்போது எனக்கு துரோகி பட்டம் சூட்டப்பார்க்கிறார்கள். அதையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன் என்றார் அவர்.
கோவிட் -19 தாக்கத்தினால் மிக மோசமான நெருக்கடியில் மக்கள் தவிக்கிறார்கள். இவர்களை பாதுகாக்க துரோகி ஆனாலும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிகிறது.
அதனால் என்னை ஒரு துரோகி என்று அழைத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
ஆனால், நீங்கள் என்னை கிட் சியாங் என்று அழைக்காதவரை, பிரச்சினையில்லை என்று பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
2021 பட்ஜெட்டை எதிர்ப்பவர்கள் துரோகிகள் என்று பெர்லிஸ் ஆராவ் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிம் நேற்று முன்தினம் சாடியிருந்தார்.
பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினரான நஜிப்பும் இந்த பட்ஜெட்டை எதிர்த்தால் அவரும் துரோகி என்று மக்களால் அழைக்கப்படுவார் என்று ஷாஹிடான் சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்று அல்லது இரண்டு பெரிக்காத்தான் நேஷனல் எம்.பி.க்கள் 2021 வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க மாட்டார்கள் என்றும் மூத்தத் தலைவர்கள் மீது சந்தேகம் உள்ளது என்று ஷஹிடான் குறிப்பிட்டார்.
நான் உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன், இந்தப் பட்ஜெட்டை நிராகரிக்கும் எவரும், பெக்கானைச் சேர்ந்த எனது நண்பர் (நஜிப்) உட்பட, பட்ஜெட்டை நிராகரித்தார் என்றால், மக்களுக்கு அவர் துரோகம் இழைத்தார் என்று அர்த்தமாகும் என்று ஷாஹிடான் மக்களவையில் குற்றஞ்சாட்டி பேசினார்.
தேசியக் கூட்டணியின் அனைத்து உறுப்பினர்களும், தேசிய முன்னணியின் அனைத்து எம்.பி.க்களும் 2021 பட்ஜெட்டுக்கு ‘ஒட்டுமொத்தமாக’ வாக்களிக்க வேண்டும் என்றும் ஷாஹிடான் வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one − one =