மக்களவை சபாநாயகரும் துணை சபாநாயகரும் நீக்கப்படுவார்களா?

மக்களவை சபாநாயகரையும் துணைச் சபாநாயகரையும் நீக்க பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்திருப்பதாக சபாநாயகர் உறுதிப் படுத்தினார்.
அந்தப் பரிந்துரையை முஹிடின் தாக்கல் செய்திருப்பதாகவும் அது ஜூலை 13ஆம் தேதி கூடவிருக்கும் நாடாளுமன்ற அவையில் விவாதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் டான்ஸ்ரீ முகமட் அரிஃப் மாட் யூசோப் தெரிவித்தார்.அத்தீர்மானம் குறித்து தாம் மேலும் எதனையும் கூற முடியாது என்றும், அதன் விவரங்களை முஹிடினிடமே கேட்டுக் கொள்ள வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
அப்பதவியிலிருந்து அகற்றப்பட்டால் வருத்தப்படுவதற்கு எதுவுமில்லை என்று, 2018ஆம் ஆண்டில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் அப்பதவிக்கு நியமிக்கப்பட்ட அவர் தெரிவித்தார்.இது பற்றித் துணைச் சபாநாயகர் ஙா கோர் மிங் கூறும்போது, வழக்கத்துக்கு மாறாக ஒரே நேரத்தில் சபா நாயகரையும் துணைச் சபாநாயகரையும் நீக்க தீர்மானத்தைத் தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சியை அளிப்பதாகத் தெரிவித்தார்.
வழக்கமாக இருவரில் ஒருவரை மட்டுமே நீக்க தீர்மானம் தாக்கல் செய்யப்படும். அதுவும் சபாநாயகரின் இறப்பு, பதவி விலகல், நாடாளுமன்றம் கலைக்கப்படும்போது மட்டுமே அம்மாதிரியான தீர்மானம் தாக்கல் செய்யப்படும்.
சபாநாயகரையும் துணை சபாநாயகரையும் நீக்க மக்களவைக்கு முழு அதிகாரமும் உள்ளது. அதனை உறுப்பினர்கள் ஏற்று ஆதரித்த பின்னரே அமலுக்குக் கொண்டு வரவேண்டும்.மக்களவையின் முடிவுக்குத் தாங்கள் கட்டுப்படுவதாகவும் பதவியை விட்டு அகலுவது அரசியலமைப்பு விதியின் படியே இருக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × three =