‘மகா’ புயல் 6-ந்தேதி குஜராத்தை தாக்குகிறது

0

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கன்னியாகுமரி கடல் பகுதியில் கடந்த வாரம் புயல் உருவானது. ‘மகா’  என பெயரிடப்பட்ட இந்த புயல் வடக்கு வடமேற்கில் நகர்ந்து ஓமன் கடற்பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த புயல் நேற்று காலையில் டையூவில் இருந்து தென்மேற்கே 580 கி.மீ. தொலைவிலும், வெரவலில் இருந்து 550 கி.மீ. தென்மேற்கிலும் மையம் கொண்டு இருந்தது. ஆனால் இது திடீரென திசை மாறி இன்று (திங்கட்கிழமை) குஜராத் கடற்கரையை நோக்கி திரும்பும் என இந்திய வானிலை ஆய்வுத்துறை தெரிவித்து உள்ளது.

அப்போது மேலும் தீவிரமடைந்து அதிதீவிர புயலாக மாறி துவாரகா மற்றும் டையூ இடையே வருகிற 6-ந் தேதி நள்ளிரவு அல்லது 7-ந் தேதி அதிகாலையில் குஜராத்தில் கரையை கடக்கும். இதனால் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வுத்துறை இயக்குனர் ஜெயந்தா சர்க்கார் நேற்று தெரிவித்தார்.

இதன் மூலம் சவுராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் பகுதிகளில் 6 மற்றும் 7-ந் தேதிகளில் பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

‘மகா’  புயல் மிகவும் தீவிரமடையும் என்பதால் சவுராஷ்டிரா பகுதி துறைமுகங்களில் 2-ம் எண் கூண்டு ஏற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்துமாறும் மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளன.

இதற்கிடையே ‘மகா’ புயலின் தாக்கத்தால் மராட்டியத்தில் 6 முதல் 8-ந் தேதி வரை மிக பலத்த மழை பெய்யும் என மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக வடக்கு கொங்கன், வட மத்திய மராட்டிய பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டு உள்ளது.

அங்கும் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × five =