மஇகாவும் பட்ஜெட்டை நிராகரிக்க வேண்டும்

  கடந்த நவம்பர் 6ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சிறுபான்மையினர் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். வழக்கமாக வழங்கப்பட்டு வந்த தமிழ்ப்பள்ளிகளுக்கான 50 மில்லியன் சிறப்புத் தொகை மறுக்கப்பட்டுள்ளது. இந்த கோவிட்-19 காலகட்டத்தில் மலேசிய இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சிறப்பு நிதி மிகவும் குறைவாக உள்ளது. ஆகவே, பல இனங்களைக் கொண்ட மலேசியாவில் ஒரு தரப்பினருக்குச் சாதகமாக வடிவமைக்கப்பட்டுள்ள 2021ஆம் ஆண்டு பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று மலேசிய இந்திய சமுதாயம் வலியுறுத்துகிறது.
  கடன் தவணை செலுத்துவது 6 மாதங்களுக்கு ஒத்திவைப்பு, இபிஎப் சேமிப்பு முதல் கணக்கிலிருந்து 10 ஆயிரம் வெள்ளி வரை மீட்டுக் கொள்வதற்கு அனுமதி என்ற தங்களது இரண்டு கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் 26 ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் பட்ஜெட் வாக்கெடுப்பின் போது அமைச்சரவையில் இல்லாத அம்னோ- பாரிசான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்களே எதிர்த்து வாக்களிக்க உள்ளனர் என்று கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரஸாக் அம்னோவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஸைட் ஹமிடி மட்டுமல்லாது எதிர்க்கட்சித்தலைவரான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உட்பட அனைத்துக் கட்சிகளும் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக தங்களது ஒருமித்த கருத்தை தெரிவித்துள்ளனர்.
  இந்த பட்ஜெட்டில் ஏழைகளுக்கு நீதியும் நியாயமும் இல்லாமல் போய்விட்டதாக கூறப்படும் வேளையிலும் இதுவரை மஇகா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. நலிவுற்றுள்ள பொருளாதார சூழ்நிலையில் மஇகாவும் அதே நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று இந்திய சமூகத்தினரிடையே பரவலாக கருத்துரைக்கப்படுகிறது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here