போலீஸ் நிலையத்தில் திருடிய பெண் போலீஸ், கணவருடன் கைது

நெல்லை மாவட்டம் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை போலீசார், போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்து இருந்தனர்.

இந்தநிலையில் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்தில் வைத்திருந்த செல்போன் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனதாக புகார் எழுந்தது.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில், வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனா மேற்பார்வையில், கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசாரிடமும் தனித்தனியாக துருவி துருவி விசாரித்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில், கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணியாற்றும் கிரேசியா (வயது 29) என்பவர் இரவில் போலீ்ஸ் நிலையத்தில் பணியில் இருந்தபோது, தன்னுடைய கணவர் அன்புமணி உதவியுடன் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் போலீஸ் நிலையத்தில் இருந்த செல்போன், வெள்ளி அரைஞாண் கயிறு ஆகியவற்றை திருடியது தெரிய வந்தது.

போலீஸ் நிலையத்தில் இரவில் பணியில் இருந்த கிரேசியா அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ‘ஆப்’ செய்து விட்டு திருடியது கண்டறியப்பட்டது. இதையடுத்து பெண் போலீஸ் கிரேசியா, அவருடைய கணவர் அன்புமணி ஆகிய 2 பேர் மீது கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், செல்போன், வெள்ளி அரைஞாண் கயிறு ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

திருட்டு வழக்கில் கணவருடன் கைதான பெண் போலீஸ் கிரேசியா, கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஈத்தான்விளை ஆகும். கைதான அன்புமணி மீதும் ஏற்கனவே பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய இடத்திலேயே கணவருடன் சேர்ந்து திருடிய பெண் போலீஸ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here