2014ஆம் ஆண்டு கடற்படைக்கு 6 போர்க் கப்பல்களை வாங்க முன்பணமாக வழங்கப்பட்ட 600 கோடியில் 100 கோடி ரிங்கிட்டுக்கான கணக்கில் முறைகேடு இருப்பதாக தற்காப்புத் துறையின் முன்னாள் துணையமைச்சர் லியூ சின் தோங் குறிப்பிட்டுள்ளார். .
6 போர்க் கப்பல்களை வாங்க மொத்த விலையான 900 கோடி ரிங்கிட்டிலிருந்து 600 கோடி ரிங்கிட் எல்சிஎஸ் போஸ்டீட் நேவல் ஸிப்யார்ட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
அதன் முதல் கப்பல் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. ஆயினும் அந்த நிறுவனத்துக்கு 600 கோடி ரிங்கிட் செலுத்தப்பட்டுள்ளது.மேற்கண்ட பணத்திலிருந்து 4 கப்பல்கள் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், அது நடைபெறாமல் போனது.
அது சம்பந்தமாக அரசின் சிறப்பு புலனாய்வு செயற்குழுவானது, செலுத்தப்பட்ட அத்தொகையில் 100 கோடி ரிங்கிட் கணக்கில் காணப்படவில்லை என்று அறிவித்திருந்தது.
தற்காப்பு அமைச்சர் அது பற்றி தெரிவிக்கும்போது, இழந்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது போர்க் கப்பல்களை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆயினும், இதுவரை அது சம்பந்தமாக எந்தவொரு நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக இருப்பதாகக் குறிப்பிட்ட லியூ சின் தோங், அதற்கான உடனடி நடவடிக்கையைத் தாம் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.